Amit sha twitter
இந்தியா

Morning News Today : பாஜக, RSS தொண்டர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம்; அமித் ஷா கேரளா வருகை!

NewsSense Editorial Team

பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் அமித் ஷா கேரளா வருகை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 29-ம் தேதி கேரளாவுக்கு வருகிறார். கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் இந்தத் தகவலைத் தெரிவித்தார். கேரளாவில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், கட்சிப் பிரமுகர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவும் அவர் கேரளா வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றம்

சட்டமன்றக் கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு

ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார். அதில்,

"தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைக்கக்கூடிய பாராட்டுகளைவிட, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய நன்மையும், பலனுமே முக்கியமானதாக நான் கருதுகிறேன். இந்த சட்டமன்றத்தின் மாண்பை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானதல்ல. இந்த சபையின் மாண்புக்கு விரோதமானது ஆகும். ஆளுநர் அனுப்பி வைக்காதது எனக்கல்ல, இந்த தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக்கூடிய செயல் என்றார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் தேவைப்பட்டால் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இளையராஜா

இளையராஜாவுக்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையில் துப்புரவு பணியாளர்களுடனான சமபந்தி விருந்துக்குப் பின் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இளையராஜா பாஜகவை சேர்ந்தவரல்ல என்றும், அவர் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் என்று கூறினார். இளையராஜாவுக்கு உயரிய விருதான பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

Sonia Gandhi

குஜராத், ஹிமாச்சல பிரதேசம் சட்டசபைத் தேர்தல்: சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை!

சமீபத்தில் நடந்து முடிந்த கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலிலும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் கட்சியை வெற்றிபெறச் செய்யத் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கேட்டது. பிரசாந்த் கிஷோர், கடந்த 16-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் வெற்றிக்கான யுக்திகளைத் தெரிவித்தார்.இந்நிலையில், சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டத்தில் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

SBI

ரூ.11 கோடி நாணயங்கள் மாயம்; வங்கியில் சிபிஐ விசாரணை

ராஜஸ்தான் மாநிலத்தின் மெகந்திபூர் ஹட்டா பாலாஜி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் மாயமானது தெரியவந்தது. இது வங்கி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென அனுமதி கேட்டு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.

Rajapaksa

இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; ராஜபக்சே குடும்பத்தினருக்கு பதவி இல்லை!

இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதையொட்டி இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராஜபக்சே மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா செய்தது. ஒற்றுமை அரசை உருவாக்க ராஜபக்சே அரசு திட்டமிட்டது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேயின் பதவியும் பறிக்கப்பட்டு, புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரே நாளில் பதவி விலகிய அவர், பின்னர் மீண்டும் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஒற்றுமை அரசில் பங்கேற்க வருமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். ஆனால் இதை புறக்கணித்த எதிர்க்கட்சிகள், அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதனால் புதிய மந்திரி சபை அமைவதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், 2 வாரங்களுக்குப்பிறகு 17 புதிய அமைச்சர்களை நேற்று கோத்தபய ராஜபக்சே நியமித்தார்.இந்த புதிய அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினர் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதன் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவர் மட்டுமே தற்போது இலங்கை அரசில் நீடித்து வருகின்றனர்.

RR

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?