ஹர்ப்ரீத்தி சந்தி

 

Facebook

இந்தியா

Morning News Wrap : அண்டார்டிகா தென் துருவத்தில் தமிழ் வம்சாவளி பெண் - முக்கிய செய்திகள்

வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றைய முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்.

Antony Ajay R

அண்டார்டிக்காவின் தென் துருவத்தில் முதல் இந்திய வம்சாவளிப் பெண்

லண்டனில் வசித்து வரும் ஹர்ப்ரீத்தி சந்தி எனும் உடற்பயிற்சி மருத்துவர், இராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார். இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

சாகச பயணங்களில் விருப்பம் கொண்டிருந்த இவர் கடந்த நவம்பர் மாதம் அண்டார்டிக்காவின் தென் துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார். யார் உதவியும் துணையும் இன்றி தனியாக 1127 கிலோமீட்டர் பயணம் செய்தார்.

மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் பனிக்காற்றையும் கடந்து ஜனவரி-3ம் தேதி அவர் தென் துருவத்தை அடைந்தார். தனது சாகச பயணம் குறித்து வலைப்பூவில் எழுதியிருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி கைது

3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கடந்த 17-ம் தேதி இவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து காவல் துறையினர் இவரைத் தீவிரமாக வலைவீசித் தேடி வந்தனர். கேரளா, பெங்களூர் என இவர் இருப்பதாகச் சந்தேகித்த இடங்களில் எல்லாம் 8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடினர். இறுதியாக நேற்று கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார் ராஜேந்திர பாலாஜி.

Lockdown

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு



இரவு நேர ஊரடங்கு - இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு. வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

போக்குவரத்து - உள் மாநில போக்குவரத்து வழக்கம் போல நடைபெறும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் பேருந்துகள் மண்டலவாரியாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்க நடவடிக்கை. வெளி மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகளில் கண்காணிப்பு தீவிரம். ஓட்டுநர், நடத்துனர் இரண்டுடோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது அவசியம். மெட்ரோ ரயிலில் 50 விழுக்காடு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

அத்தியாவசியப்பொருட்கள் - பால் விநியோகம், பத்திரிக்கை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவை, ஏ.டி.எம் மற்றும் சரக்கு, எரிபொருள் வாகனங்கள் வழக்கம்போல் செயல்படும்.

பணியிடங்கள் - உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படலாம். பணிக்குச் செல்லும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன அடையாள அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டும். ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்குமாறும் அறிவுறுத்தல்.

ஞாயிறு முழு ஊரடங்கு - ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதேநேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி. பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவைகள் இயங்காது. முழு ஊரடங்கின்போது உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் மேற்கூறிய நேரத்தில் மட்டுமே அனுமதி. 9 ஆம் தேதி மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி பேருந்து, ரயில், விமான நிலையங்களுக்குச் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் பயணிக்கலாம்.

கல்வி நிலையங்கள் - மழலையர் காப்பகங்கள் செயல்படலாம், ஆனால் மழலையர் பள்ளிகள் செயல்படத் தடை. 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். அரசு மற்றும் தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை.

அனைத்து விதமான பயிற்சி நிலையங்கள், பொருட்காட்சி, புத்தகக்காட்சிகள் நடத்தத் தடை.

பொங்கல் விழாக்கள் ஒத்திவைப்பு - அரசு மற்றும் தனியார் சார்பில் நடைபெற இருந்த பொங்கல் விழாக்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு அனுமதியில்லை. கடற்கரையில் பொது மக்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.

பிற இடங்கள் - வழிபாட்டுத்தளங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் செயல்படாது. திரையரங்கு, சலூன் உள்ளிட்ட இடங்களில் 50 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே அனுமதி. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் கலந்துகொள்ளலாம். இறப்பு வீடுகளில் 50 பேர் மட்டுமே கூட வேண்டும்.

வெளிநடப்பு செய்த விசிக சட்டமன்ற உறுப்பினர்கள்


சட்டப்பேரவையில் வெளிநடப்பு

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை நேற்று கூடியது. ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்

விசிக - சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த விசிக சட்டமன்ற உறுப்பினர்கள், “6 மாத காலத்துக்கு மேலாக நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருக்கிறது. இதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியது அவரின் கடமை. ஆளுநர் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கிறார். ஆளுநரின் உரைக்கு அல்ல ஆளுநருக்கு எதிராக வெளிநடப்பு செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

அதிமுக - செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்த பின் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்ததாகத் தெரிவித்தார். குறிப்பாக, “சட்ட ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா புழக்கம், துப்பாக்கி கலாச்சாரம், மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வாராதது, பொங்கல் பரிசுப்பணம் கொடுக்காதது, அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டது, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காதது, நகைக் கடன் தள்ளுபடியை முறையாகச் செயல்படுத்தாதது” உள்ளிட்ட விவகாரங்கள்.

வடகொரியா : உணவு தான் முக்கியம் எனக் கூறிய அதிபர்; ஆனால் நடந்தது ஏவுகனை சோதனை


புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களிடம் உரையாடிய அதிபர் கிம், “உணவு தான் முக்கியம் அனு ஆயுதங்கள் அல்ல” எனப் பேசினார். ஆனால் வடகொரியா மீண்டும் ஏவுகனை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவிக்கின்றது. மேலும் சோதனை ஜப்பானின் கடற்பரப்பில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பரப்பில் விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?