கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரு கல்லூரிகளில் கடந்த சில வாரங்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருகட்டத்தில், ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில மாணவர்கள் காவித் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக, ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் எடுத்துள்ளன. இதனால் இஸ்லாமிய மாணவிகளும், மாணவர்களும் தொடர் போாரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கை, கர்நாடாகா உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.
இதனிடேயே, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, "ஹிஜாப் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நாளை உத்தரவிடவுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை பொறுத்து இந்த பிரச்னையில் முடிவெடுக்கப்படும். அதுவரை அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது" என வலியுறுத்தினார்.
பா.ரஞ்சித்
ஆளுநருக்கு இவ்வளவு அதிகாரமா? - பா.ரஞ்சித் கேள்வி
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் இந்திய அளவில் தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்தது. பல அரசியல் தலைவர்கள் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து அரசியல் படங்களை இயக்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார், ''ஆளுநரின் செயலை நான் எதிர்க்கிறேன். ரொம்ப தவறானது. ஆளுநருக்கு இவ்வளவு அதிகாரமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லது தமிழக மக்கள் விரும்புகிற ஒரு உணர்வைத் திருப்பி அனுப்புவது என்பது தமிழக மக்களுக்கு முழுவதும் எதிரானது என்று நான் பார்க்கிறேன்'' என்றார்.
எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ``தற்போது நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சியினால் எந்த நன்மையும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை.
புதிதாக எந்த திட்டத்தையும் தி.மு.க அரசு மக்களுக்காக கொண்டு வரவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நிதி ஒதுக்கி கொண்டு வந்த திட்டங்களைத்தான் முதல்வர் ஸ்டாலின் இப்போது தொடங்கி வைத்து வருகிறார். அவர், ஆய்வுப்பணி என்னும் பெயரில் நடைபயணம் போவதையும், 'டீ' குடிக்க செல்வதும், உடற்பயிற்சி கூடத்திற்கு போவதையும் பார்க்கவா மக்கள் வாக்களித்தனர். இதன்மூலமாக அவர் வீண் விளம்பரம் மட்டுமே அவர் தேடிக்கொள்கிறார். இதை எல்லாம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்தனர்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தும், தமிழ்நாட்டில் விலையை குறைக்கு தி.மு.க அரசு மறுத்துவிட்டது. மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் தொகுப்புப் பொருள்கள் யாருக்கும் முறையாக வழங்கப்படவில்லை. தரமற்ற பொருள்களை வழங்கி மக்களின் வயிற்றில் அடித்த அரசாங்கம்தான் தி.மு.க. கொள்ளையடிப்பதற்காகவே தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது" என்றார்.
லதா மங்கேஷ்கர், இந்தியாவின் இசைக்குயில், தன்னுடைய 92 வயதில் நேற்று பிப்ரவரி 6, காலை 8:12 மணிக்கு மறைந்தார். அவரது மறைவையொட்டி இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்க உள்ளதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஷாருக் கானும் அவரது மேனேஜர் பூஜா தத்லானியும் கலந்து கொண்டனர்.
தற்போது இணையத்தில் ஷாருக் கான் மற்றும் பூஜா, மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படம் ஷாருக் கான் இரு கைகளையும் விரித்து துவா வாசிப்பது போலவும் பூஜா இரு கைகளையும் கூப்பி வணங்குவது போலவும் அமைந்திருக்கிறது. `இது தான் இந்தியா' என்பது போலான கருத்துக்களோடு இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை நடிகையும் பா.ஜ.க -வின் பிரமுகருமான குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல பிரபலங்களும் இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு எனப் பகிர்ந்து வருகிறார்கள். அஞ்சலி செலுத்தும் போது ஷாருக் கான் முகக்கவசத்தை விலக்கி காற்றில் ஊதுவது போல பாவனை செய்ததை அவர் சிதையில் எச்சில் துப்பினார் எனச் சர்ச்சை பரவியது. அதற்கு அவரது ஆதரவாளர்கள் மறுத்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாவ சுரேஷ்
கேரளாவின் புகழ்பெற்ற பாம்பு பிடிப்பவரான வாவ சுரேஷ் அண்மையில் பாம்பு தீண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஒரு வார கால சிகிச்சைக்குப் பிறகு நேற்று அவர் முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது எனக்கு மறுபிறவி. இனி பாம்புகளை பிடிக்கும் போது கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் நான் இறக்கும் வரை பாம்புகளை பிடித்துக் கொண்டே இருப்பேன் என்றார்.
மேலும் அவரது திறமைகள் மீதான சந்தேகத்திற்கும் அவருக்கு எதிரான வதந்திகளுக்கும் பதிலளித்தவர், "எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் பயிற்சியை முதல்முறையாக வனத்துறை அதிகாரிகளுக்கு நான்தான் கொடுத்தேன். ஆனால் இப்போது எனக்கு எதிராகவே பிரச்சாரம் நடக்கிறது. வனத்துறை அதிகாரி ஒருவர், அவரது பெயரை சொல்ல நான் விரும்பவில்லை, பாம்பை பிடிக்க என்னை அழைக்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது" என்றார். இதற்கு முன் வாவ சுரேஷ் தான் பிடிக்கும் பாம்புகளின் நஞ்சை சேகரித்து விற்பதாக வதந்திகள் பரவியது குறிப்பிடதக்கது.