விஜய் மல்லையா

 

Twitter

இந்தியா

Morning News Wrap : மல்லையா பங்களா பறிமுதல் டூ தம்பதி தயாரித்த விமானம் - முக்கிய செய்திகள்

Antony Ajay R

லண்டனிலும் கடன் மல்லையா பங்களாவை காலிசெய்ய உத்தரவு

₹9,000 கோடி ரூபாய்க்கும் மேல் வங்கி கடன் மோசடி செய்தது தொடர்பாக, லண்டனுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். லண்டனுக்குச் சென்ற அவர் மீது CBI மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில் அவரை இங்கிலாந்திலிருந்து விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்தது வரை இந்தியாவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது, பின் அவர் ஜாமீனில் வெளி வந்தார். அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக இங்கிலாந்து உயர் நீதி மன்றத்தில் மல்லையாவின் வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.

தப்பியோடிய தொழிலதிபர் மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினர், 34 வயது மகன் சித்தார்த்தா மற்றும் 95 வயதான அவரது தாயார் லலிதா ஆகியோர் இங்கிலாந்தில் ஒரு பங்களாவில் தங்கியுள்ளனர். மல்லையாவின் அந்த பங்களாவை சுவிஸ் வங்கியான யுபிஎஸ் கைப்பற்றியுள்ளது.

விஜய் மல்லையாவுக்கு யூபிஎஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.185.4 கோடி கடன் நிலுவையில் உள்ளது. இந்த கடனை அவர் செலுத்தாததால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மிக முக்கியமாக, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவோ அல்லது தீர்ப்பை அமல்படுத்துவதில் தற்காலிக தடை வழங்குவதற்கான அனுமதியையும் நீதிபதி நிராகரித்தார். யூபிஎஸ் விஜய் மல்லையாவின் வீட்டை உடனே கைப்பற்றலாம் என்பதை இந்த தீர்ப்பு குறிக்கிறது.

2019 ஆம் ஆண்டில், மும்பை நீதிமன்றம் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக (FEO) அறிவித்தது, மேலும் அவர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் FEO ஆக அறிவிக்கப்பட்ட முதல் தொழிலதிபர் ஆனார். மல்லையா மார்ச் 2016 இல் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்ற போது, 13 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிற்கு சுமார் 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவையிலிருந்தது.

கடந்த மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(FM Niramala Sitharaman), விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி போன்ற தப்பியோடியவர்களின் சொத்து விற்பனையிலிருந்து ரூ.13,109.17 கோடி கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜூலை 16, 2021 அன்று முன்னாள் கிங்பிஷர் ஏர்லைன் முதலாளி மற்றும் பிறருக்குச் சொந்தமான சொத்துக்களை விற்றதன் மூலம் ரூ.792 கோடி மீட்கப்பட்டுள்ளது.

சானியா மெர்சா

ஓய்வை அறிவித்துள்ளார் நட்சத்திர டென்னிஸ் வீராங்க்கனை சானியா மிர்சா

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் 2022 மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் 2022 தொடரிலர் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் 35 வயதான மிர்சா மற்றும் அவரது உக்ரைன் ஜோடி நதியா கிச்செனோக் 4-6, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர். ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி போராடி தோல்வியடைந்தது. இந்த போட்டியின் போது சானியா மிர்சாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மெல்போர்னில் நடைபெற்ற போட்டிக்குப் பின் சானியா மிர்சா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் குணமடைய அதிக நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இவ்வளவு நீண்டு நேரப் பயணம் செய்வதன் மூலம் எனது 3 வயது மகனை ஆபத்தில் ஆழ்த்துகிறேன். அதனுடன், நான் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று. என் உடல் சோர்வடைவது போல் உணர்கிறேன். இன்று என் முழங்கால் வலிக்கிறது, நாங்கள் இழந்ததற்கு இதுவே காரணம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் நான் வயதாகிவிட்டதால் குணமடைய நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். நான் இனி விளையாடப்போவதில்லை“ என்றார்.

கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் இந்தியர் சானியா மிர்சா தான். சானியா கடைசியாக 2016 ஆஸ்திரேலிய ஓபனில் மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார். மேலும் அவர் பெண்கள் டென்னிஸில் மிகவும் வலிமையான இரட்டையர் ஜோடியை உருவாக்கினார். தனது 3 வயதிலிருந்து டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா மிர்சா 17 வயதிலிருந்து தொழில் முறையாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ம் ஆண்டு ஒற்றையர் பிரிவு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதுவரையில் இந்தியாவின் தலைசிறந்த வீராங்கனையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு


சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி பட்டியலினம் பொது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ அப்பதவியில் அமரலாம். கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சி பெண்களுக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 50 சதவிகிதத்தையும் கடந்துவிட்டது.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றால், மேயர் பதவிக்கு நேரடியாகப் பெண் வேட்பாளர்களை நிறுத்துவது அல்ல. இது மறைமுகத் தேர்தல் என்பதால், வெற்றிபெறும் கவுன்சிலர்களில் ஒருவர்தான் மேயராக அமர முடியும். அப்படி வெற்றிபெறுபவர்களில் மேற்கண்ட 11 மாநகராட்சிகளிலும் பெண்களை மட்டுமே மேயராகத் தேர்வு செய்ய முடியும். ஆவடி உள்ளிட்ட ஏனைய 10 மாநகராட்சிகளில் இருபாலரில் யாரை வேண்டுமானாலும் மேயராகத் தேர்வுசெய்யலாம்.

இந்த அறிவிப்பு தி.மு.க-வினர் மத்தியிலேயே மிகப்பெரும் அதிர்வலைகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், தலைநகரான சென்னை மேயர் பதவி என்பது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அலங்கரித்த பதவி. கேபினெட் மந்திரிக்கு இணையான பொறுப்பு என்பதால், சென்னை மேயருக்குக் கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியா vs தென்னாப்ரிக்கா

IND vs SA : சாமர்த்தியமான கேப்டன்சிக்கு பலியானது இந்திய அணி

இந்தியா, தென்னாப்ரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பேட்ஸ்மேன் ஜென்னிமன் மாலன் 6 (10) பும்ரா வேகத்தில், ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அடுத்து, குவின்டன் டி காக்கை 27 (41) அஸ்வின் போல்ட் ஆக்கினார். மார்க்கரம் 4 (11) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார் இதனால் ஆரம்பத்திலேயே திணற ஆரம்பித்தது தென்னாப்ரிக்க அணி.

அந்த நேரத்தில் டெம்பா பவுமா, வன் டீர் துஷன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடித்த நிலையில் இந்திய பௌளர்களின் உக்திகளை தூக்கிச் சாப்பிட ஆரம்பித்தனர். இருந்தும் கேப்டன் கே.எல்.ராகுல் ஆறாவது பௌளரை பயன்படுத்தவில்லை. டெம்பாவும், வன்டீர் துஷனும் சதம் விளாச தென்னாப்ரிக்காவின் ஸ்கோர் எகிரியது.

பின்னர், கேப்டன் பவுமா 110 (143) ரன்கள் எடுத்து, பும்ரா பந்துவீச்சில் நடையைக் கட்டினார். அடுத்து வன் டீர் துஷன் 129 (96) ஆகியோர் எடுத்து தென்னாப்பிரிக்க ஸ்கோரை உயர்த்தினார்கள். இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 296/4 ரன்கள் எடுத்தது.

297 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கமே கோணலாக அமைந்தது. இந்திய அணியில் ஓபனர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். அப்போது, கேப்டன் பவுமா பவர் பிளேவிலேயே 6ஆவது பௌலர் எய்டன் மார்க்கரமை கொண்டுவந்து கே.எல்.ராகுல் 12 (17) விக்கெட்டைத் தூக்கினார். அடுத்து ஷிகர் தவான், விராட் கோலி ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

தவன் 79 (84), கோலி 51 (63) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து யாரும் ரன் குவிக்கவில்லை. ரிஷப் பந்த் 16 (22), ஷ்ரேயஸ் ஐயர் 17 (17), வெங்கடேஷ் ஐயர் 2 (7), அஸ்வின் 7 (13) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். அடுத்து டெய்ல் என்டர்ஸும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஷர்தூல் தாகூர் மட்டும் இறுதிவரைப் போராடி 50 (43) ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 265/8 ரன்கள் எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்த ஆறாவது பௌளர் எனும் உத்தியை கே.எல்.ராகுல் பயன்படுத்தாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடரின் இரண்டாவது போட்டி, நாளை மறுநாள் நடைபெறும்.

விமானம் தயாரித்த குடும்பம்

யூடியூப் பார்த்து விமானம் உருவாக்கி அசத்திய இந்திய வம்சாவெளி குடும்பம்..!

கொரோனா ஊரடங்கு காலத்தில் யூடியூப் பார்த்து 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் ஒன்றை உருவாக்கி இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியவம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அசத்தியுள்ளது.

பயிற்சி பெற்ற விமானியான அசோக் மற்றும் அவரது மனைவி அபிலாஷா இருவரும் விமானம் ஒன்றை வாங்க விரும்பியுள்ளனர். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற விமானத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களுக்கு விருப்பமான வகையில் விமானத்தை தாங்களே உருவாக்க முடிவு செய்துள்ளனர். விமானத்திற்கான பாகங்களை தென்ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கியுள்ளனர்.

இதையடுத்து விமானம் தயாரிக்கும் வழிகாட்டுதல் கையேடு மற்றும் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் அசோக்கும் அவரது மனைவியும் தங்களது விருப்பத்திற்கேற்ற வகையில் 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?