அசாம் மாநிலத்தில் டீ விற்கும் இளைஞர் ஒருவர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டும் பரிசுகளும் குவிகின்றன.
மேலும், அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.
அசாம் மாநிலம், பஜாலி மாவட்டம், பட்டசர்குர்சி சவுக் பகுதியில் வசிப்பவர் ராகுல்தாஸ் (24) தான் அந்த இளைஞர்.
ராகுல் தாஸின் தந்தை 11 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்து விட்டார். 2 பிள்ளைகளுடன் வறுமையில் சிக்கி திணறிய ராகுலின் தாய், டீ கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வறுமை காரணமாக ராகுல் 12ம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்திக் கொண்டார்.
ராகுல் உயர்கல்வி மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் டிப்ளமோ படிப்பில் சேர்த்துள்ளார். தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு பின்னர் 85 சதவீத மணிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ராகுல், குவஹாத்தியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராக சேர்ந்துள்ளார்.
ஆனால், மருத்துவ துறை மீது இருந்த நாட்டத்தால் அந்த வேலையை உதறிதள்ளி உள்ளார்.
டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டார்.
அவர் கூறுகிறார், “அசாமின் பட்டசர்குச்சி பகுதியில் உள்ள தனது அம்மாவின் கடையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் படித்தேன். அம்மா எங்களுக்காக கஷ்டப்படுவதை பார்த்திருக்கிறேன். கடையில் ஒரு உதவியாளரை எங்களால் பணியமர்த்த முடியவில்லை. பள்ளி செல்லும் காலத்திலிருந்தே அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று நினைத்தேன். நானும் டீ தயாரித்து விற்று வந்தேன். இதற்கு இடையே கிடைக்கும் நேரத்தில் படித்தேன். பின்னர் பொறியாளாராக வேலைக்கு சேர்ந்தேன். ஆனால், டாக்டராக வேண்டும் லட்சயத்தில் பின்வாங்கவில்லை,” என்கிறார்.
தேர்வில் 12,068வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்றார். இவர் பட்டியலின வகுப்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.
ராகுலின் மருத்துவ படிப்பு செலவு முழுவதையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.