PFI Twitter
இந்தியா

PFI : பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்பது என்ன? அரசு இந்த அமைப்பை தடை செய்ய காரணமென்ன?

NewsSense Editorial Team

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி எஃப் ஐ) என்கிற அமைப்பு தற்போது இந்திய அரசியலின் மையப் புள்ளிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லது இந்த அமைப்போடு தொடர்புடைய பலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்றும் சோதனை நடந்தது.

கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட முக்கிய பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த அதிரடி சோதனைகளை அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை இணைந்து மேற்கொண்டது. பி.எஃப்.ஐ அமைப்பு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பு, தீவிரவாதம் தொடர்பான முகாம்களை நடத்துவதாகவும், இளைஞர்களைத் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஊக்குவிப்பதாகவும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனைகளை நடத்தி, கைது செய்யப்பட்டு இருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம், கூர்மையான ஆயுதங்கள், கணிசமான எண்ணிக்கையிலான டிஜிட்டல் சாதனங்கள்... என பலதும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தரப்பில் செய்தியாளர்களிடம் கூறப்பட்டுள்ளது.

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய, மாநில, உள்ளூர் தலைவர்கள் வரை சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இந்திய ஒன்றிய அரசு, தன் அதிகாரத்தின் கீழ் செயல்படும் முகமைகளைப் பயன்படுத்தி தங்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்பவர்களின் குரல்வலையை நெறிப்பதாக அவ்வமைப்பினர் தங்கள் செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

யார் இந்த பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா?

2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, ஒரு அரசு சாரா சமூக அமைப்பாகச் செயல்படுவதாகவும், ஏழைகளுக்கும், இந்த நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உதவுவது, அடக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்ப்பதே தங்கள் நோக்கம் என்றும் தங்கள் அமைப்பு குறித்து விவரிக்கின்றனர்.

1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஒர் சில ஆண்டுகளுக்குள்  நேஷனல் டெவலெப்மெண்ட் ஃப்ரண்ட் என்கிற சர்ச்சையான அமைப்பு கேரளாவில் நிறுவப்பட்டது. அந்த அமைப்போடு, வேறு சில அமைப்புகளும் இணைக்கப்பட்டு பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவானது. பி எஃப் ஐ அமைப்பு உருவாக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு அமைப்புகள் பி எஃப் ஐ உடன் இணைந்து ஒருபெரிய அமைப்பாக உருவானது.

இன்று கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுவாக இருக்கும் இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் பல்லாயிரக் கணக்கானோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சர்ச்சை ஏன்?

அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், அனைவரும் சுதந்திரத்தைக் கொண்டாட வேண்டும், அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும், அனைவரும் பாதுகாப்பாக உணரும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், இந்திய ஒன்றிய அரசோ, இந்த அமைப்புக்கு எதிராகத் தேசத் துரோக வழக்கு, பல்வேறு சமூகங்களுக்கு இடையே விரோதத்தைத் தூண்டுவது, இந்தியாவை நிலைகுலையச் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதென... பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு இந்து ஆணின் தலையைத் துண்டித்த வழக்கில் பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

சில மாதங்களுக்கு முன் "2047: இஸ்லாமிய இந்தியா" என்கிற தலைப்பில், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது தொடர்பாக சில ஆவணங்களைப் பரப்பியதாகப் பீகார் மாநில காவல்துறை ஒரு குற்றச்சாட்டை எழுப்பியது. அதை பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது, ஆவணங்களை வேறு யாரோ மாற்றியுள்ளதாகவும் வாதிட்டது.

கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசால் ஸ்டூடண்ட்ஸ் இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஆஃப் இந்தியா (Students' Islamic Movement of India - Simi) என்கிற அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த அமைப்போடு பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான் பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக இந்திய ஒன்றிய அரசு முன் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு. 

இதே போல பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் (இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழு) அமைப்போடு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பேராசிரியர் பி கோயா

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் நேஷனல் டெவலெப்மெண்ட் ஃப்ரண்ட் என்கிற அமைப்பின் நிறுவனராகப் பேராசிரியர் பி கோயா, பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். 

மேலும் தான் 1993ஆம் ஆண்டு என் டி எஃப் அமைப்பை நிறுவியதாகவும், தனக்கும் இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும் இடையிலான உறவு 1981ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது எனவும் பிபிசி ஊடகத்திடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

குற்றங்களோடு தொடர்புபடுத்தப்பட்ட பிஎஃப் ஐ

கடந்த 2010ஆம் ஆண்டு கேரளாவில் டி ஜே ஜோசப் என்கிற பேராசிரியர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஒரு தேர்வில் இறைத்தூதர் மொஹம்மதைக் குறித்து பேராசிரியர் ஜோசப் தரக்குறைவாகக் கேள்வி எழுப்பியதாகப் பல இஸ்லாமிய அமைப்புகள் அவர்மீது குற்றம்சாட்டியது. நீதிமன்றம், ஜோசப்பைத் தாக்கிய சிலரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தண்டனை வழங்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தங்களை விலக்கிக் கொண்டது அலல்து தொலைவு படுத்திக் கொண்டது.

2018ஆம் ஆண்டு எர்ணாகுளம் பகுதியில் எஸ் எஃப் ஐ கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரைக் குத்திக் கொன்ற வழக்கில் பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

SDPI Flag

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எத்தனை பிரபலமான அமைப்பு?

பொதுவாக பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் பேச்சுக்கு நல்ல ஊடக வெளிச்சம் கிடைப்பதாகவும், அவர்கள் பேசுவது பெரும்பாலும் ஒரு தரப்பினரை தூண்டுவதாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு கணிசமான ஆதரவு இருந்தாலும், அவர்களால் இதுவரை பெரிய அளவில் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ் டி பி ஐ) தான் பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் கட்சி. 

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியாவில் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாகவோ அல்லது சமூக சக்தியாகவோ இல்லை. இந்த அமைப்பு கேரளாவில் மட்டுமே செல்வாக்கோடு இருக்கிறது, அதைவிட்டால் ஒரு சில தென்னிந்திய மாநிலங்களைக் கூறலாம். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இப்படி ஒரு அரசியல் அமைப்பு இருக்கிறது என்பது கூடத் தெரியாது என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆதில் மெஹ்தி.

இந்த அண்டின் தொடக்கத்தில், கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்ட போது, போராட்டத்தை முன்னெடுக்க தூண்டியதாக பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது குற்றம்சாட்டியது கர்நாடகா அரசு. 

பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பெண்கள் பிரிவான நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட் மற்றும் மாணவர்கள் பிரிவான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஹிஜாபுக்கு ஆதரவான போராட்டங்களில் முழுமையாக பங்கெடுத்ததாகவும் செய்திகள் வெளியாயின

பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்வ கொள்கைகளோடு ஒத்துப் போகும் பல  இந்து குழுக்கள் & அமைப்புகள், பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முழுமையாக தடை செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றன. கேரள உயர் நீதிமன்றமே ஒரு முறை பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஒரு கடும்போக்குவாதக் கட்சி என்று கூறியதும் இங்கு நினைவுகூறத்தக்கது.

ஆனால் பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்போ, தாங்கள் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அதே போல, வெறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனைகளை நடத்தி, கைது செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்துக்குச் செல்லும் போது முழுமையான ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டும். பல நேரங்களில் இப்படி கைது செய்யப்படுபவர்கள், போதிய ஆதாரங்களின்றி வழக்கு பிசுபிசுத்து போவதாக அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அல்லது அதற்கு தூண்டுபவர்களை தண்டிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு அமைப்பினை முற்றுமுழுவதுமாக தடை செய்வது கேள்வியை எழுப்புகிறது. நீதி வெல்லும் என நம்புவோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?