பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயில் சேவையின் முதல் ரயில், கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் இன்று கோவையிலிருந்து முதல் பயணத்தைத் தொடங்குகிறது. வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரயிலில் டிக்கெட் தொடங்கிப் பராமரிப்பு பணிகள் வரை அனைத்தையும் தனியார் நிறுவனமே மேற்கொள்கிறது. ரயிலின் உள்கட்டமைப்பு வடிவங்களையும் தனியார் நிறுவனமே மேற்கொண்டிருக்கிறது. அதற்காக போத்தனூர் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளைத் தென்னக ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர். ரயில்வே துறையின் சேவைகளைத் தனியார் வசம் ஒப்படைக்கத் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் எம்.பி.க்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் அறிவித்திருக்கிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைக் காவிரி மேலாண்மை வாரியம் விவாதிக்க அனுமதிக்கக்கூடாது எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் எனப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில்,
"இது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. மேலும், இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகவும், தமிழகத்தினால் ஏற்க முடியாததாகவும் உள்ளது. மேலும், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 3 வழக்குகள் மீதான விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்னையை எடுப்பது அநீதியானதாகும். கடந்த 7-ம் தேதி மற்றொரு வழக்கையும் நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். மேகதாது விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதற்கு ஆணையம் அவசரம் காட்டுவதை நாங்கள் ஏற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் எங்களின் மனுக்கள் பற்றிய விசாரணை நடத்தப்படுவதற்கு முன்னதாக இந்த நடவடிக்கையை எடுப்பது, உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் திசை திருப்புவது போன்றதாக அமைந்துவிடும். எனவே, உச்சநீதிமன்றத்தில் எங்களின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அதில் முடிவு கூறப்படும் வரை மேகதாதுவின் விரிவான திட்ட அறிக்கையைப் பற்றி விவாதிப்பதைத் தள்ளிப்போட வேண்டும். எனவே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருக்கு இதுதொடர்பான தகுந்த அறிவுரையை வழங்கும்படி மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 8.45 மணியளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அரசியல் ரீதியாகக் கருத்து மோதல் இருந்துவருகின்றன. இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், அவர் டெல்லியில் முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்கின்றனர். இன்று காலை டெல்லியிலிருந்து ரயில் மூலம் தனது சொந்த மாநிலமான பீகாருக்குச் செல்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் புதன் கிழமை இரவு சென்னை திரும்பவுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 8-ம் தேதியும், ராகுல்காந்தி கடந்த 2-ம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், வெளிநாட்டில் இருந்ததால் ராகுல்காந்தி வேறு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் பேரில் 13-ம் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று ராகுலுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டது. சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அவர் 23-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை கூறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய டெல்லி பகுதி முழுவதும் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். 4 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையகத்தைச் சுற்றிலும் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஊர்வலமாக ராகுல்காந்தி புறப்பட்டார். அவருடன் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் புறப்பட்டனர். ராகுல் காந்தியிடம் மொத்தம் 8 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடுகிறது. இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் வென்று தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெற்றும் போட்டியில் இந்தியா தோற்றால் தொடரை இழந்துவிடும் என்பதால் இது முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust