கேரள மாநிலம் பாலக்காட்டை சேந்தவர் ஶ்ரீனிவாசன். இன்று இவர் கடையில் இருக்கும் போது 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 மர்ம நபர்கள் ஶ்ரீனிவாசனை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பினர். கொலையாளிகள் யாரெனத் தெரியவில்லை. கொலையைப் பார்த்தவர்கள் ஶ்ரீனிவாசன் 20 முறை சரமாரியாக வெட்டப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான ஶ்ரீனிவாசன் அந்த அமைப்பின் உடற்பயிற்சியாளராக இருந்தவர்.
அதற்கு காரணம் நேற்று பாபுலர் ஃப்ரன்ட் இந்தியா பிரமுகர் ஜூபைர் கொலை சம்பவம்.
நேற்று ஜூபைர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் வந்த கார் அவரது வாகனத்தைத் தட்டியது. அதிர்ந்து விழுந்த ஜூபைரை காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் ஜூபைரின் தந்தை கண் முன்னே கொடூரமாகக் கொலை செய்தனர்.
ஜூபைரை கொலை செய்தவர்கள் யார் என காவல்துறையினர் கண்டறியவில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்திய கார் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சஞ்சித் என்பவருடையது எனக் கண்டறிந்தனர். சென்ற வருடம் கொல்லப்பட்ட சஞ்சித்-ன் இறப்புக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் ஜூபைர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகித்தாலும் சஞ்சித்-ன் தந்தை அதனை மறுத்துள்ளார்.
2021 நவம்பர் மாதம் ஜூபைரை போலவே பின்னாலிருந்து காரால் தட்டிவிடப்பட்டு காரிலிருந்து இறங்கிய மர்மநபர்கள் சஞ்சித்தை கொலை செய்தனர். அதற்குப் பழியாக டிசம்பர் 18ம் தேதி எஸ்டிபிஐ கட்சி பிரமுகர் கே.எஸ்,ஷான் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை கண்டறிந்தது.
கே.எஸ்.ஷான் கொலை சம்பவம் நடந்த 12 மணிநேரத்தில் பாஜக-வின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஶ்ரீனிவாசன் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவங்களாலும் ஜூபைர் கொலை நடந்த 24 மணி நேரத்தில் ஶ்ரீனிவாசன் கொலை நடந்திருப்பதாலும் இந்தக் கொலையைச் செய்தவர்கள் எஸ்டிபிஐ கட்சியினர் என பா.ஜ.க குற்றஞ்சாட்டுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com