ஹிஜாப்

 

Twitter

இந்தியா

கர்நாடகாவில் முற்றிய ஹிஜாப் விவகாரம் - முழு விவரம்

Antony Ajay R

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ஒரு கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் தொடங்கிய ஹிஜாப் பிரச்சனை தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது.

பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மாநிலத்தின் கல்வி அமைச்சர் இந்தர் சிங், “ ஹிஜாப் பள்ளி சீருடையில்லை. நிச்சயம் மத்திய பிரதேசத்தில் தடை செய்யப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பிப்ரவரி 4ம் தேதி பள்ளிகள் திறந்த முதல் நாளே 9ம் வகுப்பு மாணவியை ஹிஜாப் அணியக் கூடாது எனக் கூரிய தலைமை ஆசிரியருக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

பல காலமாக இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது வழக்கமே. ஆனால் திடீரென கல்வி நிலையங்கள் ஹிஜாப்-க்கு எதிரான மனநிலைக்கு செல்வது அதிர்ச்சியளிக்கிறது. சக மாணவ, மாணவிகளும் ஹிஜாப்-ஐ எதிர்ப்பது இன்னும் பரபரப்பைக் கூட்டுகிறது.

எங்கு தொடங்கியது விவகாரம்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள முன் பல்கலைக்கழக கல்லூரியில் (Pre University) இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை நிர்வாகம் கல்லூரிக்குள் அனுமதிக்காததால் அந்த மாணவிக்கு ஆதரவாகப் பிற மாணவிகளும் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வந்த அனைத்து மாணவர்களும் நிர்வாகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெய் ஶ்ரீராம் vs ஜெய்பீம்

இதற்கு எதிராக இந்து மாணவிகள் காவி சால்வையுடன் வரத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக வலது சாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்துள்ளனர். இஸ்லாம் மாணவிகளுக்கு ஆதரவாக தலித் மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்கள் நீல நிற சால்வையுடன் போராட்டத்தில் இறங்கினர். இரண்டு தரப்பினரும் கல்லூரியின் முன்பு கோஷம் எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் வலதுசாரி மாணவர்கள் ஜெய் ஶ்ரீராம் என்றும் இடது சாரி மாணவர்கள் ஜெய் பீம் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இவ்வாறு கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு மற்றும் ஹிஜாப் எதிர்ப்பு குழுக்கள் என இரண்டு குழுக்கள் உருவாகின. ஹிஜாபுக்கு ஆதரவாக பாஜக தலைவர்களும் எதிராகக் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கியதும் இது அரசியல் பிரச்சனையாக மாறியது.

ஹிஜாப் அணிவது தங்கள் உரிமை எனக் கூரிய மாணவிகள் கர்நாடக நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி தீட்சித் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

திடீர் வன்முறை

மற்றொருபுறம் நேற்று உடுப்பி மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் இரு தரப்பு மாணவ மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வன்முறையைக் காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தியும் தடியடி நடத்தியும் கலைத்தனர். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த மோதல் பரவியிருந்தது.

மாண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். அந்த வீடியே சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டது.

பல கல்லூரிகளில் இரு தரப்பு மாணவர்களும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். சிவமொகா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்லூரியில் இருந்த தேசியக் கொடியை அகற்றிக் காவிக் கொடியைப் பறக்கவிட்டனர். அங்கு மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்நாடக அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

வழக்கு விசாரணை

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தீட்சித், “ கடலோர பகுதிகளிலிருந்து மாநிலத்தின் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு வன்முறை பரவியதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியைப் பேண வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், “இந்த வழக்கில் தர்க்கம் மற்றும் சட்டத்தின்படி முடிவெடுப்போம். அந்த முடிவில் உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்தாது. நமக்கு பகவத்கீதை என்பது அரசியலமைப்பு சட்டமே” என்று நீதிபதி குறிப்பிட்டார்.

"சீருடை தொடர்பான அரசாணையை எதிர்த்து மனுதாரர்களின் வாதங்களைக் கேட்கும் வேளையில், நீதிமன்றத்துக்கு வெளியே வன்முறை நடப்பது கவலை தருகிறது," என நீதிபதி கிருஷ்ணா தீட்சித் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடையாததால் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மலாலா கூறிய கருத்து

இந்த விவகாரத்தில் சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் ஹிஜாப் அணியும் பெண்களுக்கு ஆதரவாக தமது ட்விட்டர் பக்கத்தில் இடுகையை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "படிப்புகளுக்கும் ஹிஜாபுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. குறைவாகவோ, அதிகமாகவோ - தங்களுடைய ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?