Paytm NewsSense
இந்தியா

டிஜிட்டல் பண பரிவர்த்தனை : ட்ரில்லியன் டாலரை தாண்டி சாதனை - பாய்ச்சல் காட்டும் UPI

20 -க்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பு செயலிகள், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை வழங்கி வருகின்றன. இந்த யுபிஐ பண பரிவர்த்தனை வசதி, பயன்படுத்துவதற்கும் எளிதாக அமைந்துள்ளதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

NewsSense Editorial Team

ட்ரில்லியன் டாலரைத் தாண்டியது எப்படி?


இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேடையான யுபிஐ (UPI) அறிமுகமானதிலிருந்து, ஆன்லைன் மூலமான பரிவர்த்தனை அதிகமான நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த பரிவர்த்தனையின் மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலரை, அதாவது ஒரு லட்சம் கோடி டாலரைத் தாண்டி இருப்பது, புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ள யுபிஐ வசதியைக் கொண்டு,

20 -க்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பு செயலிகள், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை வழங்கி வருகின்றன. இந்த யுபிஐ பண பரிவர்த்தனை வசதி, பயன்படுத்துவதற்கும் எளிதாக அமைந்துள்ளதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக ரூ.5,000 குறைவான தொகைக்கான பரிவர்த்தனை வசதி யுபிஐ ஆட்டோபே மூலம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து சிறிய கடைகள், சாலையோரம் மற்றும் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் போன்றவர்களும் இந்த பரிவர்த்தனை கட்டமைப்புக்குள் வந்துவிட்டனர். இத்தகைய புதிய அம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருதால், நாளுக்கு நாள் யுபிஐ பரிவர்த்தனை மென்மேலும் அதிகரித்து வந்தன.

இந்த நிலையில்தான், 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த பரிவர்த்தனையின் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலரை எட்டி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 5 பில்லியன் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், அதுவும் இந்த சாதனைக்கு கூடுதல் காரணமாக அமைந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே வேகம் பெற்று வந்த டிஜிட்டல் பரிவர்த்தனையின் போக்கிலும், அதன் கட்டமைப்பிலும் தற்போதைய நிகழ்வு, ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

மக்களை அதிகம் வெளியில் வரவிடாமல் செய்த கொரோனா முடக்கத்திலிருந்தே யுபிஐ பரிவர்த்தனை அதிகமாகத் தொடங்கிய நிலையில், இந்தியாவில் தற்போது யுபிஐ-யின் மாதாந்திர பரிவர்த்தனை சராசரியாக ரூ.9 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது.

ஒரு ட்ரில்லியனுக்கு வித்திட்ட மார்ச் மாத பரிவர்த்தனை

யுபிஐ-யை இயக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்ட தரவுகளின்படி, 2022 மார்ச் 29 ஆம் தேதி வரை, யுபிஐ பரிவர்த்தனை மேடை மூலமாக 5.04 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிவர்த்தனையின் மதிப்பு ரூ. 8.88 லட்சம் கோடி ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 7 சதவீத வளர்ச்சியாகும்.

2022 ஆம் நிதியாண்டில் இதுவரை யுபிஐ, 45 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியுள்ளது. தொகையாக சொல்ல வேண்டுமெனில், ரூ.83 லட்சம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனை நடந்துள்ளது. 2021 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 22 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை யுபிஐ செயல்படுத்தியுள்ளது. அதாவது ரூ.41.03 லட்சம் கோடி.

சுருக்கமாக சொல்வதானால், ஒரு வருடத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு இரண்டும் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளன. இது டிஜிட்டல் பரிவர்த்தனையின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கான மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

2021 மார்ச் மாதத்தில் 270.59 ஆக இருந்த ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெக்ஸ் (DPI),செப்டம்பரில் 304.06 ஆக அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் மூலம், வருங்காலத்திலும் நாட்டின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அதிகரிப்பதில் யுபிஐ-யே முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Macquarie Securities அறிக்கையின்படி, நாட்டில் செய்யப்படும் மொத்த சில்லறை பரிவர்த்தனைகளின் அளவிலும் யுபிஐ, பெரும் பங்கைக் கொண்டுள்ளது. 2022 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் சில்லறை பரிவர்த்தனைகளில் சுமார் 60 சதவீதம் யுபிஐ மூலமாகவே செய்யப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு பெரும்பாலும் யுபிஐ-தான் விருப்பமான தேர்வாக உள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் மதிப்பீட்டின்படி, யுபிஐ-ல் பதிவுசெய்யப்பட்ட பரிவர்த்தனைகளில் சுமார் 50%, ரூ.200-க்கும் குறைவான மதிப்புடையதாகவே உள்ளதாக தெரிய வந்துள்ளது.

யுபிஐ-யின் அடுத்தகட்டம் என்ன?

அடுத்த 3-5 ஆண்டுகளில் யுபிஐ, ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதைச் செயல்படுத்துவதற்காக, பல புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் முதன்மையானது யுபிஐ-யின் AutoPay அம்சமாகும். எனவே வருங்காலத்தில், யுபிஐ மேடை மூலமான தினசரி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க ஆட்டோபே அம்சம் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள் தொழில் துறை வல்லுநர்கள்.

யுபிஐ மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளின் பெரும்பகுதியை, சிறிய தொகை மதிப்புடைய பரிவர்த்தனைகளே உருவாக்குவதால், அதுபோன்ற சிறிய பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக, யுபிஐ பயனர்களுக்காக, "ஆன்-டிவைஸ்" ( on-device) வாலட் அம்சத்தையும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இணைய இணைப்பு இல்லாத போன்களில் கூட யுபிஐ பயன்பாடு அம்சத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம், இது போன்ற போன்களைப் பயன்படுத்தும் 40 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கதவுகள் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, டிஜிட்டல் நிதி உள்ளடக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதோடு, யுபிஐ மூலமான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

தடைக்கற்களைத் தாண்டுமா யுபிஐ?

யுபிஐ-யின் மாதாந்திர பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், குறைபாடுகள் மற்றும் அவ்வப்போது வாடிக்கையாளர்கள் சந்திக்க நேரிடுகிற தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் போன்றவற்றிலிருந்து யுபிஐ இன்னும் விடுபடவில்லை. என்பிசிஐ தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் மட்டும், எஸ்பிஐ வங்கி மூலமான 31.68 மில்லியன் பரிவர்த்தனைகள் தோல்வியுற்றுள்ளது. சுமார் 1.24 பில்லியன் பரிவர்த்தனை தளங்கள் சந்தித்த நெட்வொர்க் சிக்கல்கள் போன்ற தொழில்நுட்ப காரணங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. அதாவது இதன் தோல்வி சதவீதம் 2.5 -க்கும் அதிகமானதாக உள்ளது.

அது மட்டுமல்லாமல், கடந்த பிப்ரவரி மாதம் யுபிஐ மூலம் செய்யப்பட்ட 4.83 பில்லியன் பரிவர்த்தனைகளில், 69.96 மில்லியன் பரிவர்த்தனைகள், வங்கிகள் அல்லது என்பிசிஐ -க்கு செல்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நிராகரிக்கப்பட்டன. இந்த ஆண்டும் ஜனவரி மாதத்தில், 187 நிமிடங்களுக்கு எதிர்பாராத செயலிழப்பை எதிர்கொள்ள நேரிட்டது. இது, முன் எப்போதும் இல்லாத அதிகபட்ச செயலிழப்பாகும்.

எனவே இதுபோன்ற பிரச்சனைகள் இனி அதிகம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதில்தான், யுபிஐ-யின் அடுத்தகட்ட வெற்றி அடங்கி உள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?