அபுதாபி

 

Twitter

இந்தியா

Morning News Wrap : அபுதாபியில் இரண்டு இந்தியர்கள் மரணம் பின்னணி என்ன? - முக்கிய செய்திகள்

Antony Ajay R

அபுதாபி ட்ரோன் தாக்குதல், இரண்டு இந்தியர்கள் உட்பட மூவர் பலி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ட்ரோன் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் எண்ணெய் நிறுவனமான ADNOC-ன் சேமிப்பு கிடங்குக்கு அருகிலுள்ள முசாஃபா பகுதியில் 3 ஆயில் டேங்கர்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறியதாகவும், விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலிலும் தீப்பற்றியதாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் யாஹியா சாரெய் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அபுதாபி ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், படுகாயமடைந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அபுதாபி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர் அமைப்பு ஈராக்கில் உள்ள ஷியா முஸ்லீம்களின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. அரபு நாடுகளில் உள்ள சன்னி முஸ்லீம்களுக்கும் ஷியா முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது.

அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருப்பதால் சீனா ஈராக்கிற்கு ட்ரோங்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் வழங்கி உதவுகிறது. என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நாராயணன்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் நிராகரிப்பு, பாஜக விளக்கம்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெறாத விவகாரம் தொடர்பாகத் தமிழக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நமக்கும் தமிழக ஊர்தி இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோது ‘தமிழக அரசே' முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியைத் தருகிறது.

ஒவ்வொரு வருடமும் அனைத்து மாநிலங்களும் இந்த பேரணியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கும், அதற்கான திட்டங்களை மேற்கொள்ளும். ஊர்திகளை வடிவமைக்கும். பாதுகாப்புத் துறை அமைச்சகம், பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளில் சிறப்பான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஊர்வலத்தில் பங்கு பெறச் செய்யும். இது தான் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை உள்ள நடை முறை. இதற்கு முன்னர் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கூட குடியரசு தின பேரணியில் தமிழக ஊர்திகள் இடம்பெறாது இருந்தது உண்டு. பாதுகாப்புத் துறை அமைச்சகமானது, பல்வேறு துறைகளின் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் ஊர்திகளைத் தேர்ந்தெடுக்கும். இந்த குழுவில் கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனக்கலை ஆகிய துறைகளின் நிபுணர்கள் இடம்பெறுவார்கள்.

இந்த குழுவானது முதலில் வடிவமைப்பை ஆய்வு செய்து அதில் திருத்தங்களைச் செய்து மாற்றங்கள் தேவையெனில் ஆலோசிக்கப்படும். அந்த வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அம்மாநில அதிகாரிகள் முப்பரிமாணத்தில் தங்களின் மாதிரியை விளக்குவார்கள். மீண்டும் அந்த குழு ஆய்வு செய்து இறுதி தேர்வுக்கு முன்னெடுத்துச் செல்லும். அழகான ஒளி தோற்றம், மக்கள் மனதில் பதிவது போன்ற காட்சியமைப்பு, வடிவமைப்பின் எண்ண ஓட்டம், அதனுடன் உள்ள இசை ஆகிய பல்வேறு காரணிகளோடு, இவற்றின் முழு விவரங்களையும் விரிவாக விளக்கமளித்த பின் இறுதி தேர்வு செய்யப்படும்.

ஆக, எந்த மாநிலங்கள் சிறப்பான தயாரிப்பை வடிவமைத்து முன்வைத்ததோ, அந்த மாநிலங்கள் அந்த வருட அணிவகுப்பில் தேர்வு பெற்று இடம்பெறும் என்பதே நடைமுறை. அதனடிப்படையில் இந்த வருடம் தமிழகம் சரியான முறையில் நம் மாநில ஊர்திகளை காட்சிப்படுத்த தவறிவிட்டது.

ஆனால், இந்த நடைமுறை தெரியாமல் வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று மீண்டும் மீண்டும் மலிவு அரசியலை செய்வது அழகல்ல. என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரபாகரன்

மாற்றுத்திறனாளி மரணம் - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரபாகரன். இவரது மனைவி ஹம்சலா.

இவர்கள் இருவரையும் கடந்த 8ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி 11ஆம் தேதி பிரபாகரனை நாமக்கல் கிளை சிறையிலும், ஹம்சலாவை சேலம் மத்திய பெண்கள் சிறைச்சாலையிலும் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி காலை திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபாகரன் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள் என மறுநாள் 13ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பிரபாகரனின் மரணத்தை 'சந்தேக மரணம்' என வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கொலை குற்றமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் போராடினர்.

ஜாமீனில் வெளியான பிரபாகரனின் மனைவி, “ஜனவரி 8ஆம் தேதி 5 மணிக்கு என்னையும் என் கணவரையும் போலீஸ்காரங்க கூட்டிகிட்டு போயி கோட்ரஸ்ல்ல வச்சி அடிச்சு சித்ரவதை பண்ணி ஆபாசமா திட்டினாங்க. கடைசியில அவர கொன்னே போட்டாங்க. என் பிள்ளைகள் இரண்டும் இப்ப ரோட்டில் அனாதையா நிக்குறாங்க” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கியுள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

தடுப்பூசி

12-14 வயதினருக்குத் தடுப்பூசி

மார்ச் மாதத்திலிருந்து 12 முதல் 14 வயதுடைய சிறாருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் எனத் தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர், மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி, 15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவில் 3.38 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 13 நாட்களில் இந்த வயது பிரிவில் உள்ளவர்களில் 45% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த வயதுப் பிரிவில் மொத்த 7.4 கோடி பேர் உள்ளனர். சிறார்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.

Google, Facebook

ஆன்லைன் விளம்பரத்தில் ஆதிக்கம் செய்யும் கூகுள் பேஸ்புக் - அமெரிக்க நீதிமன்றம் கேள்வி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க அரசு, நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக இந்த கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் விளம்பரதாரர்களை ஈர்த்து மறைமுகமாக சிறு நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனுத் தாக்கல் செய்திருந்தது.

கூகுள், பேஸ் புக் உள்ளிட்ட நிறுவனங்கள் மொத்த ஆன்லைன் விளம்பர ஏலத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு விளம்பர உலகத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கின்றன. இதனால் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன என சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு, அமெரிக்கச் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டே தங்கள் ஏலத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று நிறுவனங்கள் தெரிவித்தனர். மேலும் நிறுவன ஒப்பந்தங்களை தாங்கள் கட்டாயமாகக் கடைப்பிடிப்பதாகவும் கூறின.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?