அக்னிபாத்: வட மாநிலங்கள் பற்றி எரிவது ஏன்? - முழுமையான தகவல்  NewsSense
இந்தியா

அக்னிபாத்: வட மாநிலங்கள் பற்றி எரிவது ஏன்? - முழுமையான தகவல்

பீகார், உத்திரப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இத்திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இத்திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று போராட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்

NewsSense Editorial Team


அக்னிபத் என்பது இந்தியாவின் முப்படைகளுக்கான புதிய ஆட்சேர்ப்புத் திட்டமாகும். இதன்படி இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் சிப்பாய்கள் நான்கு வருட குறுகிய கால ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இதனால் துருப்புகளின் சராசரி வயதைக் குறைக்கவும், ஓய்வூதியச் செலவைக் குறைக்கவும் முடியுமென ஒன்றிய அரசு கூறுகிறது.ஆனால் அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் பிற மாநிலங்களில் பெரும் கலவரங்கள் வெடித்துள்ளன.

மேலும் பல பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அக்னிபத் திட்டத்தை கடுமையாக விமர்சித்து எழுதுகின்றனர்.

இத்திட்டம் படையில் சேரும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிப்பதோடு, படைகளின் தரத்தையும் பாதிக்கலாம் என்றும் நான்கு வருடத்திற்குப் பிறகு ஊர் திரும்பும் இந்த முன்னாள் இராணுவ துருப்புகளால் சிவில் சமூகம் இராணுவ மயமாக்கப்படும் என்றும் அவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இது குறித்து உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை இங்கே முழுமையாகப் பார்க்கலாம்.

Army Training

அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

அக்னிபத் திட்டம் அனைத்து இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பணியாளர்களை (அதிகாரிகளைத் தவிர) நான்கு ஆண்டுகளுக்கு பணியாற்ற வழி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் "அக்னிவீர்ஸ்" என்று அழைக்கப்படுவார்கள். அவர்களது வயது 17.5 முதல் 21 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம் துவக்கத்தில் ரூ. 30,000 முதல் பணிக்கால இறுதியில் ரூ. 40,000 வரை இருக்கும். 2022 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசாங்கம் அனுமதித்துள்ளது.

நான்கு ஆண்டுகள் பணி முடிந்த பிறகு அக்னி வீரர்களில் 25% பேர் தேர்வு செய்யப்பட்டு 15 வருட பணி நீட்டிப்பு பெறுவார்கள். மீதமுள்ள 75% பேர் "சேவா நிதி" எனப்படும் வெளியேறும் தொகுப்பு திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். இவர்கள் வெளியேறும் போது ரூ.11.71 இலட்சமும் திறன் சான்றிதழும் கிடைக்கும். ஆனால் ஓய்வூதியமோ, பணிக்கொடையோ இருக்காது.

Agnipath Scheme

அக்னிபாத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் குறுகிய மற்றும் நீண்ட கால நோக்கங்கள் என்ன?

இத்திட்டத்தின் படி 90 நாட்களுக்குள் அனைத்திந்திய அடிப்படையில் 45,000 வீரர்கள் (கடற்படை மற்றும் விமானப்படை உட்பட) பணியில் அமர்த்தப்படுவார்கள். இது ஆயுதப்படைகளின் மொத்த எண்ணிக்கையில் 3 சதவீதமாக இருக்கும்.

இந்த ஆட்சேர்ப்புக்கு பின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவத்தில் மீண்டும் சேர்ப்பதற்கு முன்பு அக்னி வீரர்களின் செயல்திறன் சோதிக்கப்படும். அப்படித்தான் இதிலிருந்து 25% அக்னி வீரர்கள் மீண்டும் பணி நீட்டிப்பு பெறுவார்கள்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் இத்திட்டம் 14 இலட்சத்திற்கும் மேலான எண்ணிக்கை கொண்ட இராணுவத்தில் படிப்படியாக இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் வீரர்களின் சராசரி வயது 32-லிருந்து 24-26 ஆக குறையும் என்றும் கூறினார். எதிர்காலத்தில் வரும் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ளவும், படைகளை மேலும் நவீனமாக்கவும், தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்தவும் இது உதவும் என்று அவர் கூறினார்.


லெப்டினன்ட் ஜெனரல் பிஎஸ் ராஜு கூறுகையில் 2030 – 2032 ஆம் ஆண்டுக்குள் 12 இலட்சம் பேர் கொண்ட இராணுவத்தின் பாதி எண்ணிக்கையில் அக்னி வீரர்கள் இருப்பார்கள் என்றார். இத்திட்டம் தேவைகளின் அடிப்படையில் பெண்களுக்கு படிப்படியாகத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி வரும் ஆண்டுகளில் ஆயுதப்படைகளில் அக்னி வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு தற்போதைய ஆட்சேர்ப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

Lt.BS Raju

ஆனால் இத்திட்டம் பற்றி இளைஞர்கள் ஏன் பயப்படுகிறார்கள்?

நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பெருமளவிலான வீரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் இந்த தீவிரத் திட்டம், ராணுவத்தின் தொழில்முறைப் பணி, படைப்பிரிவு நெறிமுறைகள் மற்றும் சண்டை மனப்பான்மையைப் பாதிக்கும் என்ற பரவலான கவலைகள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான வீரர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றும் பரவலாக அஞ்சப்படுகிறது. இந்த திட்டமானது பல அக்னி வீரர்களுக்கு ஆபத்து-வெறுப்பை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர், ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தொழிலைத் தேட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.


"இது சமூகத்தின் இராணுவ மயமாக்கலுக்கு வழிவகுக்கும்... இது ஒரு நல்ல யோசனையல்ல" என்று முன்னாள் DGMO லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா (ஓய்வு) கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இத்திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Aravind Kejriwal

அக்னிபாத் திட்டத்தால் படைப்பிரிவு அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுமா?

அக்னிபாத் திட்டமானது குறிப்பிட்ட பகுதி, சாதி, இனப்பிரிவுகளில் இருந்து இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் பல படைப்பிரிவுகளின் அமைப்பை மாற்றுமா என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. இப்போது இராணுவத்தில் ராஜபுத்திரர்கள், ஜாட்கள், சீக்கியர்கள் போன்றோருக்கு தனிப் படைப்பிரிவுகள் இருக்கிறது.

ஆனால் இத்தகைய படைப்பிரிவு அமைப்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக சிறந்த அக்னிவீர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இத்தகை பிரிவுகள் வலுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


மேலும் நான்கு ஆண்டுகள் சீருடை அணிந்து பணிபுரியும் இளைஞர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போதும் ஆயுதப்படைகளிலிருந்து பலர் ஓய்வு பெற்றாலும் அவர்கள் தேச விரோதிகளாக மாறிய சான்றுகள் எதுவும் இல்லை என அரசு கூறுகிறது.

Air force

அக்னிபத் திட்டம் ஆயுதப்படைகளின் செயல்திறனைப் பாதிக்கும் என்ற அச்சத்தை அரசாங்கம் நிராகரிக்கிறது. முதல் ஆண்டில் சேர்க்கப்படும் அக்னி வீரர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் என்று அது கூறுகிறது. மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தெரிவு செய்யப்படும் 25% அக்னிவீர்கள் பல முறை சோதிக்கப்பட்டே பணி நீட்டிப்பு பெறுவார்கள் என்றும் அரசு கூறுகிறது.


ஆயுதப்படைகளில் இத்தகைய குறுகிய கால பணியமர்த்தும் முறை பெரும்பாலான நாடுகளில் இருப்பதாகவும் அரசு கூறுகிறது. இதன் மூலம் இந்த முறை சிறந்த முறை என பல நாடுகளில் சோதிக்கப்பட்ட ஒன்று என அரசு இத்திட்டத்தை நியாயப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆயுதப்படைகளில் 50% இளைஞர்கள் 50% அனுபவசாலிகள் என்ற சரியான கலவை கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Indian army

அக்னிபத் திட்டம் போன்று மற்ற நாடுகள் எப்படி செயல்படுகின்றன?

ஆக்னிபத் திட்டத்திற்காக இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதிலிருந்து நம் நாட்டிற்குத் தேவையான அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு கூறுகிறது.

அமெரிக்காவில் நான்கு ஆண்டுக் காலத்திற்கென படை வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிந்தைய நான்கு ஆண்டுகள் அவர் ரிசர்வ் படை வீரர்களாக கடமையாற்றுவார்கள். அதாவது தேவை வந்தால் போருக்கு செல்வார்கள். மேலும் அவர்கள் விரும்பினால் முழுநேர இராணுவ சேவையை தெரிவு செய்யலாம்.


அப்படி 20 வருடங்கள் பணி புரிந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சேவைகள் கிடைக்கும்.

சீனாவில் கட்டாய இராணுவ சேவை அமலில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 4.5 இலட்சம் பேர் இப்படி இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். இவர்கள் இரண்டு ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும். இஸ்ரேலிலும் இத்தகைய கட்டாய ராணுவ சேவை திட்டம் அமலில் உள்ளது. ரஷ்யாவில் கட்டாய சேவையும், ஒப்பந்த அடிப்படையில் ஆட் சேர்ப்பும் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?