அம்பேத்கர் NewsSense
இந்தியா

அம்பேத்கர் : இந்திய ரிசர்வ் வங்கி முதல் பொதுக்குளம் போராட்டம் வரை - நீங்கள் அறிய வேண்டியவை

தலித்துக்கள், சிறுபான்மையினர் மீதான வெறுப்பு பிரச்சாரம் அதிகமிருக்கும் காலத்தில், அவர்களுடைய உரிமை ஒடுக்கப்படும் காலத்தில் அம்பேத்கர் எழுதிய வார்த்தைகளின் தேவை அவரது காலத்தை விட இன்றைக்கு அதிகமாக இருக்கிறது.

Govind

இன்று 14 ஏப்ரல் 2022 வியாழக்கிழமை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் 131ஆவது பிறந்த நாள். அவரது நினைவை நாடு முழுவதிலுமுள்ள பல கட்சிகள், மக்கள் போற்றுகின்றனர்.

அம்பேத்கர் ஒரு பல்துறை பங்களிப்பாளர்

அம்பேத்கர் ஒரு பல்துறை வல்லுநர், மக்கள் களச் செயற்பாட்டாளர். சட்ட நிபுணர், அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி என்று அவரது பங்களிப்புகளைப் பல துறைகளில் விட்டுச் சென்றிருக்கிறார். பலருக்கும் அவர் இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது தெரிந்திருக்கும்.

"கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன் : நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.” - என்று சாதியமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு அவரது இறுதி நாட்களில் பௌத்த மதத்திற்கு மாறினார். பல தலித் இயக்கங்கள், கட்சிகளுக்கு அவர் முன்னோடியாகவும் இருக்கிறார்.

Ambedkar

இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் அம்பேத்கரின் பங்களிப்பு

இவை தவிர அவர் இந்திய ரிசர்வ வங்கி உருவாக்குதற்கும் பங்களித்துள்ளார். நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் பல முக்கிய மாற்றங்கள் அவரால்தான் சாத்தியமானது. இந்திய ரூபாய் குறித்தும் அது தொடர்பான புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

பிரிட்டீஷ் ஆட்சியில் ஹில்டன் யங் கமிஷன் என்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இது இந்திய நாணயம் மற்றும் நிதி தொடர்பான விசயங்களை ஆய்வு செய்தது. இந்த ஆணையத்தின் பணிகள் துவங்கிய போது ஆணையத்தின் உறுப்பினர்கள் அனைவரின் கைகளிலும் ஒரு புத்தகம் இருந்தது. அந்த நூல் அம்பேத்கர் எழுதிய" ரூபாயின் பிரச்சினை - அதன் தோற்றம் மற்றும் அதன் தீர்வு.”

தொழிலாளர் சட்டங்களில் எட்டு மணிநேரப் பணி, அகவிலைப்படி, விடுப்புப் பலன், தொழிலாளர் காப்பீடு, மருத்துவ விடுப்பு, ஒரே வேலைக்கான ஊதியம், குறைந்த பட்ச ஊதியம், ஊதிய விகிதத் திருத்தம் போன்றவை அம்பேத்கரால் சேர்க்கப்பட்டது.

இவற்றையெல்லாம் விட அம்பேத்கரது பங்களிப்பு இந்தியாவை ஒரு புற்று நோய் போல அரித்து வரும் சாதியமைப்பை எதிர்த்ர்தது. அவர் நடத்திய போராட்டங்களும், எழுத்துகளும்தான் முக்கியமானவை.

அம்பேத்கர்

மஹாத் பொதுக்குளத்தில் நீர் எடுக்கும் போராட்டம்

டிசம்பர் 25, 1927 அன்று மகாராஷ்டிராவின் மஹாத் பகுதியில் பொதுக்குளத்தில் தலித்துகள் நீர் எடுக்கும் உரிமைக்காக அவர் அமைதியான முறையில் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் குளத்தை தலித்துக்கள் பயன்படுத்தலாம் என்று அரசு ஆணை இருந்தாலும் மேல்சாதியினர் அதைத் தடுத்து வந்தனர். தண்ணீர் எடுப்பதை எதிர்த்து பார்ப்பனர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் தடை பெற்றிருந்தனர்.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

1. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணாவை நான் நம்பவில்லை.
2. சாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை.
3. தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு ஒரு களங்கம் என்று நான் நம்புகிறேன், அதை முற்றிலுமாக அழிக்க நான் நேர்மையாக முயற்சிப்பேன்.
4. உணவு மற்றும் குடிநீர் குறித்து யாரிடமும் குறைந்த அளவு எல்லா இந்துக்களிடையேயும் எந்த வேறுபாட்டையும் நான் பின்பற்ற மாட்டேன்.
5. கோயில்கள், நீர் நிலைகள், பள்ளிகள் மற்றும் பிற வசதிகளைப் பெறுவதற்குத் தீண்டத்தகாதவர்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இதே போராட்டத்தின் போது சாதி ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும், பெண்களை இழிவு படுத்தும் மனுஸ்மிருதி நூலும் எரிக்கப்பட்டது.

பிற தலைவர்களுடன் அம்பேத்கர்

காந்தியின் சாதிய சமத்துவ கருத்துக்களுக்கு எதிராக அம்பேத்கர்

மேலும் சாதியமைப்பின் இழிவுகளை மட்டும் அழித்து விட்டு சாதியமைப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தினை மகாத்மா காந்தி கொண்டிருந்தார். அம்பேத்கார் அதை எதிர்த்து பெரும் யுத்தமே நடத்தினார். காந்தியின் சாதிகளுக்கிடையே சமத்துவம் என்பது எப்படி இருக்க முடியாது என்பது குறித்து அம்பேத்க்ர் விரிவாகவே எழுதியிருக்கிறார். அதே போலத் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் செய்யக் கூடாது என்று காந்தி கூறியதையும் அம்பேத்கர் கடுமையாகக் கண்டித்து எழுதியிருக்கிறார்.

ஒரு மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறவியல், மகிழ்ச்சி, விடுதலையைப் பேசுகின்ற கொள்கைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இந்து மதம் என்பது கொள்கைகளின் தொகுப்பா அல்லது தண்டனைகளைப் பட்டியலிடும் குற்றவியல் சட்ட விதிகளின் தொகுப்பா? சாதிப்படி நிலையில் சூத்திர – பஞ்சம மக்கள் எப்படி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதையே விதிகளாய் வைத்திருக்கும் இந்த மதத்தை ஒரு மதம் என்று அழைக்கமாட்டேன் என்றார் அம்பேத்கர். சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையைக் கிழித்துக் காட்டினார்.

அம்பேத்கர்

சாதிய அமைப்பின் தீமைகள் குறித்து அம்பேத்கர்

சாதிய அமைப்பு என்பது தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் ஏற்றத்தாழ்வாகச் செயற்கையான தனித்தனித் தீவுகளாய்ப் பிரித்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாய் குலத்தொழில் செய்து வரும் ஒருவன் தன் தொழிலின் நலிவால் வாழ இயலாத போதும் பட்டினி கிடந்து சாவானே ஒழிய வேறு தொழில் செய்ய மாட்டான். அப்படிச் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத வாழ்வைத்தான் இந்து மதம் விதித்திருக்கிறது என்று வழக்காடினார் அம்பேத்கர்.

இப்படி வாழ்வையும் சிந்தனையையும் மட்டுமல்ல உடற்கூற்றையும் சாதியம் தனது மீற முடியாத அகமண முறையால் எப்படி நலிவடைய வைத்திருக்கிறது என்றால், இந்திய மக்களில் 100-க்கு 90 பேர் ராணுவத்துக்கு (உடல், எடை, உயரம்) இலாயக்கில்லாதவர்களாக உருவாக்கியிருக்கிறது என்று கேலி செய்தார் அம்பேத்கர். அது மட்டுமா, ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட தனித்தனி உடை, உணவுப் பழக்கங்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வேடிக்கைப் பொருளாக, அருங்காட்சியகமாக இந்தியா இருப்பதைச் சினத்துடன் எடுத்துக் காட்டினர்.

கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும 130 லட்சம பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில் உள்ள எண்ணிக்கை) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று விமர்சனம் அம்பேத்கர். இம்மக்களுக்குக் கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருகாலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே வர்ணாசிர தர்ம மதத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.

அம்பேத்கர்

தாய்மதம் திரும்பினால் எந்த சாதியில் வைப்பார்கள்?

ஆரிய சமாஜத்தின் ‘தாய் மதம்’ திருப்பும் மதமாற்றச் சடங்கை ஒரு மோசடி என நிரூபித்தவர் அம்பேத்கர். ஏனைய மக்கள் ‘தம் கொள்கையால் மட்டுமே விடுதலை பெற முடியும்’ என்று தம் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்து மதமோ அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாததோடு, அப்படி ஒரு முயற்சியையும் செய்ய முடியாது. காரணம் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்தச் சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளது. சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.

இந்தியாவில் ஏன் ஒரு புரட்சி நடக்கவில்லை?

மேலை நாடுகளைப் போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது பௌதீக ஆயுதத்தையும், போராடும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும் கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருந்தான். அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன.

இங்கே பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமை கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடு போல உழைத்துச் சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர – பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒருவாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது என்றார் அம்பேத்கர்.

தலித்துக்கள், சிறுபான்மையினர் மீதான வெறுப்பு பிரச்சாரம் அதிகமிருக்கும் காலத்தில், அவர்களுடைய உரிமை ஒடுக்கப்படும் காலத்தில் அம்பேத்கர் எழுதிய வார்த்தைகளின் தேவை அவரது காலத்தை விட இன்றைக்கு அதிகமாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?