மஹ்வா மொய்த்ரா NewsSense
இந்தியா

காளி தேவி சர்ச்சை : அமெரிக்க வங்கி டூ பா.ஜ.க எதிர்ப்பு அரசியல் - யார் இந்த மஹ்வா மொய்த்ரா?

NewsSense Editorial Team

நாடாளுமன்ற மக்களவையில் அதிரடிப் பேச்சாளராக கவனத்தை ஈர்த்த மகுவா மொய்த்ரா, காளிதேவி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. அவரை சில நாள்களுக்காவது கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என மமதா பானர்ஜிக்கு பா.ஜ.க. நெருக்கடி கொடுக்கிறது.

கடந்த செவ்வாயன்று வடநாட்டு பத்திரிகை ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, காளிதேவி பற்றி சில கருத்துகளைக் குறிப்பிட்டார். நான் வணங்கும் காளி, இறைச்சி உணவை உண்பவளாகவும் மதுவை அருந்துபவளாகவும் இருக்கிறாள் என்பது மகுவா பேச்சின் சாரம்.

அந்த சமயத்தில்தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலையின் அடுத்த பட விளம்பரத்தில், சுருட்டு பிடித்தபடி ஆவேசம்கொள்ளும் காளியின் தோற்றம் இடம்பெற்று சிக்கலைத் தொடங்கியிருந்தது. கனடா நாட்டில் அந்தப் படத்தின் திரையீட்டுக்கான முயற்சிகள் நடைபெற, அங்குள்ள இந்துத்துவ அரசியல் அமைப்பினர் அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க, பிரச்னை பெரிதானது. டொரண்டோவில் உள்ள இந்தியத் தூதரகமும் கண்டனம் தெரிவிக்க, சர்ச்சைக்குரிய படத்தின் பொருட்டு கனடா தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

காளி தேவி சர்ச்சை

படத்தின் இயக்குநருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நாடளவில் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், மகுவா மொய்த்ராவும் அவரை ஆதரித்துதான் இப்படிப் பேசினார் என கண்டனம் எழுந்தது. அவர் எம்.பி.யாக இருக்கும் மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க. இதைக் கையிலெடுத்து திருணமூல் கட்சிக்கு எதிராகப் பேசிவருகிறது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதியன்று இதுகுறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்ட திருணமூல் கட்சி, மகுவா பேசியது முழுக்க முழுக்க அவரின் சொந்தக் கருத்தே என்றும் கட்சித் தலைமை இதை எந்த வகையிலும் ஆதரிக்கவோ ஆமோதிக்கவோ இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.

ஆனால் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி இதில் கனத்த அமைதி காத்தபடி இருந்துவர, திருணமூல் கட்சியின் ட்விட்டர் கணக்கைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார், மகுவா. இத்தனைக்கும் 6.53 இலட்சம் பின்தொடருநர்களை டுவிட்டரில் வைத்திருக்கும் அவர், இரண்டே இரண்டு ட்விட்டர் பக்கங்களைத்தான் பின்தொடர்ந்துவந்தார். அதில் இப்போது தான் சார்ந்த கட்சியின் ட்விட்டர் பக்கத்தைத் தொடர்வதை நிறுத்திவிட்டார். மேற்குவங்க முதலமைச்சர் மமதாவின் ட்விட்டர் பக்கத்தை மட்டும் அவர் தொடர்கிறார்.

யார் இந்த மஹ்வா மொய்த்ரா?

திருணமூல் கட்சித் தலைமையின் விளக்கத்தை அடுத்து, இரண்டு பதிவுகளை ட்விட்டரில் இட்டுள்ளார், மஹ்வா மொய்த்ரா. முன்னதாக, இந்திய தேசியச் சின்னமான நான்கு சிங்க அசோகத் தூணுடன் உண்மையே வெல்லும் எனும் பொருள்தரும்படி- சத்யமேவ ஜயதே என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பா.ஜ.க., இந்துத்துவ அமைப்புகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, மமதா பானர்ஜியின் முன்னாள் இடதுவலதும் இப்போதைய பாஜக மாநிலத் தலைவருமான சுவேந்து அதிகாரி, மகுவாவை கட்சியைவிட்டு நீக்கியாக வேண்டும்; அந்தக் கட்சித் தலைமை சொல்வதெல்லாம் சும்மா சால்ஜாப்பு என்கிறார்.

ஆனாலும் ட்விட்டரில் மமதாவை மட்டும் நீங்காமல் தொடரும் மகுவா, தன் கருத்தில் ஊன்றி நின்று பேசுகிறார்.

”(மேற்குவங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் பிரபல சக்திபீடமான) தாராபீடத்துக்குச் சென்றால், சாதுக்கள் புகைத்தபடி இருப்பதைப் பார்க்கமுடியும். அங்கிருக்கும் மக்கள் வழிபடும் காளியின் வடிவமே இது. காளியின் ஒரு பக்தையாக இந்து மதத்துக்காரியாக காளியை எப்படி வேண்டுமானாலும் உருவகித்துக்கொள்ள எனக்கு உரிமை உண்டு. அது என்னுடைய சுதந்திரம்.” என ஒரேயடியாக நிற்கிறார்.

இந்த அளவுக்கு கட்சித் தலைமையுடன் பகிரங்கமாக முரண்டுபிடிக்கும் இவர் யார்...?

மக்களவையில் தன் கன்னிப் பேச்சிலேயே அவையை அதிரவைத்தவர்தான், இந்த மொய்த்ரா.

பன்னாட்டு அமெரிக்க வங்கியான ஜேபி மோர்கனில் பணியாற்றிய முன்னாள் வங்கியாளரான மகுவா, 2009ஆம் ஆண்டில் லண்டனில் பணியாற்றியபோது அதை விட்டுவிட்டு முழு நேர அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மகுவா, சிறிது காலத்திற்குள்ளாகவே திருணமூல் கட்சிக்கு மாறினார். இதனிடையே அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மௌண்ட் ஹோலியோக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்தார். முன்னர் அவர் அங்குதான் கணிதவியலும் பொருளாதாரமும் படித்திருந்தார்.

தற்போது 47 வயதாகும் மகுவா, கட்சியின் தேசிய ஊடகத்தொடர்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். தொலைக்காட்சி விவாதங்களில் அனல் பறக்கும் விவாதம் செய்வது இவரின் அடையாளம்.

குடிமக்கள் பதிவேடு பிரச்னை வந்தபோது, எம்.பி.கள் குழுவாக இவரும் அசாம், வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றபோது சிக்கல் ஏற்பட்டது. அதையொட்டி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளும் அந்த சமயத்தில் பரவலான கவனத்தைப் பெற்றன.

மக்களவையில் தன் கன்னிப்பேச்சில், ”நாடு அபாயமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இனப்படுகொலை நினைவு அருங்காட்சியகம் 2017இல் வெளியிட்ட ஒரு எச்சரிக்கை விளம்பரத்தில், பாசிசத்துக்கான 7 முன்னறிகுறிகளைக் குறிப்பிட்டது. அந்த ஏழும் இப்போது இந்தியாவில் இருக்கிறது.” என மகுவா மொய்த்ரா மிகவும் காட்ட்டமாகப் பேசியது, அவையை உண்மையிலேயே அதிரவைத்தது. அவருடைய பேச்சை ஆதரித்தும் கண்டித்தும் உறுப்பினர்கள், தலைவர்கள் பேசிக்கொண்டிருந்ததை, ஒட்டுமொத்த நாடும் கவனித்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?