Rakesh Jhunjhunwala Twitter
இந்தியா

ராகேஷ் ஜுன்ஜுன் வாலா: கலங்கும் தேசம், கண்ணீர் பகிரும் தலைவர்கள் - யார் இவர்?

ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவுக்கும் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாட்டாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

Gautham

இந்திய பங்குச் சந்தையை குறித்து கடுகளவு ஆர்வம் இருக்கும் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் கூட, ராகேஷ் ஜூன் ஜுன் வாலாவைப் பற்றி அறிந்து வைத்திருப்பர். இந்திய பங்குச் சந்தையின் பிதாமகர், இந்தியாவின் வாரன் பஃபெட் என செல்லமாக அழைக்கப்பட்டு வந்த ராகேஷ் ஜூன் ஜுன் வாலா ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

அன்னாருக்கு இந்திய பிரதமர், இந்திய நிதி அமைச்சர் உட்பட பல பெரும் அரசியல் புள்ளிகள் தொடங்கி, வணிக உலக ஜாம்பவான்கள் வரை பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பங்குச்சந்தை சமூகமும் இந்திய தொழில் துறை சமூகமும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது ஏன்? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

யார் இந்த ராகேஷ் ஜூன் ஜுன் வாலா?

1960 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்த ராகேஷ் ஜூன் ஜுன் வாலாவின் தந்தை ஒரு வருமானவரித்துறை அதிகாரி.
தந்தை வருமானவரித்துறையில் உயர் அதிகாரி என்பதால் சிறுவயதிலிருந்தே பெரியவர்கள் கூட புரிந்து கொள்ள சிரமப்படும் கடுமையான பொருளாதார சொற்கள், வணிகம், வரி, லாபம், நஷ்டம் தொடர்பான விஷயங்கள் அவர் காதில் விழத் தொடங்கின.

பட்டயக் கணக்காளர்:

அப்போதே அவருக்கு பங்குச் சந்தையின் மீது ஒரு காதல் ஏற்பட்டு விட்டது. முதலில் சிடென்ஹாம் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பும் பிறகு பட்டயக் கணக்காளர் படிப்பையும் நிறைவு செய்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே பங்குச் சந்தையில் மெல்ல முதலீடு செய்ய தொடங்கினார். பின் டி-மார்ட் நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமாணியிடம் பங்குச்சந்தை குறித்த பால பாடங்களை படிக்க தொடங்கினார்.

பட்டயக் கணக்காளர் படிப்பை நிறைவு செய்திருந்ததால் ஒவ்வொரு நிறுவனத்தையும் அதன் நிதிநிலை அறிக்கைகளையும் தன் பாணியில் ஆழமாக அலசி ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொண்டார்

முதல் முதலீடு:

இந்திய பங்குச் சந்தையில் 1985 ஆம் ஆண்டு வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய தன் முதலீட்டாளர் பயணம் கிட்டதட்ட 5.8 பில்லியன் அமெரிக்க டாலரில் நிறைவடைந்து இருக்கிறது என ஃபோர்ப்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 46,000 கோடி ரூபாய்.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவுக்கும் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாட்டாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

டாடா குழுமத்துடனான உறவு:

அவர் உயிரிழக்கும் தருவாயில் கூட டாடா மோட்டார்ஸ், டாடா கம்யூனிகேஷன், டைட்டன் போன்ற டாடா குழும நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்திருந்ததே இதற்கு சாட்சி.
1986 ஆம் ஆண்டு ராகேஷ் ஜுன் ஜுன் வாலா, சுமார் ஐந்தாயிரம் ரூபாயில் டாடா டி நிறுவன பங்குகளை வாங்கினார்.

43 ரூபாய்க்கு வாங்கிய அப்பங்குகள் அடுத்த சில மாதங்களிலேயே 143 ரூபாயாக அதிகரித்தது. தோராயமாக மூன்று ஆண்டுகள் கழித்து ராகேஷ் ஜுன் ஜுன் வாலா டாடா டி நிறுவன பங்குகளிலிருந்து மட்டும் சுமார் 25 லட்சம் ரூபாய் சம்பாதித்தார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பங்குசந்தை வருமானம் என்கிறது மின்ட் பத்திரிக்கை.

தொடக்கத்தில் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த டாடா குழுமத்தின் மீது அப்போது இருந்து ஒரு நல்ல உறவு ஏற்பட்டது. இன்று வரை அவருடைய ஒட்டு மொத்த போர்ட்ஃபோலியோவில் டைட்டன் நிறுவன பங்குகள் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் கதைக்கு வருவோம். 1991 ஆம் ஆண்டு இந்திய அரசு தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகளை அமல்படுத்திய போது, தன் முதலீடுகளை சட்டென அதற்கு தகுந்தார் போல மாற்றி அமைத்துக் கொண்டு நல்ல லாபம் பார்த்தவர்களில் ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவும் ஒருவர்.

1990களின் தொடக்க காலத்தில் ஹர்ஷத் மேத்தா பிரச்னை வெளிவரத் தொடங்கிய போது, ஹர்ஷத் மேதாவுக்கு எதிராக முதலீடுகளை செய்து லாபம் சம்பாதித்த விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சில முதலீட்டாளர்களில் ஒருவர் நம் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா.

சிறந்த முதலீட்டாளர், சிறந்த டிரேடர்:

பொதுவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் நல்ல வர்த்தகர்களாக (Trader) இருக்க மாட்டார்கள். அதே போல நல்ல வர்த்தகர்களாக இருப்பவர்கள் நல்ல முதலீட்டாலர்களாக (Investor) இருப்பது மிக மிக அரிது. ஆனால் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா, ஒரே நேரத்தில் ஒரு நல்ல முதலீட்டாளராகவும் ஒரு நல்ல வர்த்தகராகவும் இருந்தார்.

டிரேட் செய்வதன் மூலம் ஒரு நல்ல கணிசமான தொகையை திரட்டி முதலீடு செய்தார். முதலீடு செய்வதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை மீண்டும் டிரேட் செய்ய பயன்படுத்தினார்.

தன்னை இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்க வேண்டாம் என ஒரு ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணலில் கூறியிருந்தார். "வாரன் பஃபெட் என்னை விட பல மடங்கு முன்னேறி இருக்கிறார், நான் யாருடைய பிரதியும் அல்ல. நான் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா" என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது.

சினிமா காதலர்:

ராகேஷ் ஜுன் ஜுன் வாலா ஒரு சினிமா காதலரும் கூட. சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி சந்தையில் சக்கை போடு போட்ட இங்கிலீஷ் விங்கிலீஷ் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா, ராதாகிஷன் தமாணி, ஆர் பால்கி உட்பட பலர் தயாரித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருக்கும் நடிகைகளோடு பங்குச் சந்தை குறித்தும் பொருளாதாரம் குறித்தும் ஒரு பேட்டி கொடுப்பது இவரது குறும்பு வழக்கம். ஆலியா பட், தீபிகா படுகோன், சித்ரங்கதா சிங், கரீனா கபூர்... போன்ற முன்னணி நடிகைகளோடு இவர் பொருளாதாரம் பேசிய காணொளிகளை இப்போதும் யூட்யூபில் காணலாம்.

ஆகாசா ஏர்:

கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பை நகரத்தில், மலபார் ஹில்ஸ் என்கிற பகுதியிலிருந்த ரிட்ஜ் வே அபார்ட்மெண்ட்டை முழுமையாக வாங்கி, தானும் தன் குடும்பமும் வாழ்வதற்கு சுமார் 70 ஆயிரம் சதுர அடிக்கு 13 அடுக்கு கொண்ட சொகுசு வீட்டைக் கட்டும் பணியை தொடங்கி இருந்தார். துரதிர்ஷ்ட வசமாக அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்பே காலமாகிவிட்டார்.

5,000 ரூபாயில் முதலீடு செய்யத் தொடங்கிய ராகேஷின் சொத்து மதிப்பு இன்று சுமார் 46,000 கோடி ரூபாய். இவர் ஒரு பங்கை வாங்குகிறார் என்றால், அதில் கண்ணை மூடிக் கொண்டு முதலீடு செய்ய ஒரு கூட்டமே இருக்கிறது. அந்த அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில் இவரது தாக்கம் இருப்பதால்தான் இந்திய பிரதமரே இவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கிறார்.

ஆகாசா ஏர் என்கிற பட்ஜெட் ஏர்லைன் நிறுவனம் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ப்ரொமோட்டராகவும் சிறப்பாக சில வணிகங்களை நடத்தி வந்தார் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?