ஒரு மனிதர் ஒரு துறையில் உச்சத்தை அடைவதே மிக பெரிய சாதனையாக இருக்கும் காலத்தில், யஷ்வந்த் சிங் கல்லூரிப் பேராசிரியர், அரசு உயர் அதிகாரி, அரசியல்வாதி, நிதி அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் எனப் பல துறைகளில் பல உச்சங்களைத் தொட்டிருக்கிறார்.
தற்போது 84 வயதாகும் இவர், இந்தியாவில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் பிறந்த யஷ்வந்த் சின்ஹா,1958ஆம் ஆண்டு அரசியல் அறிவியல் பிரிவில் தன் முதுகலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்துவிட்டு, பாட்னா பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வானவர்.
ஜவஹர்லால் நேரு காலத்திலேயே இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தன் சொந்த மாநிலமான பீகார் கேடரிலேயே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பீகார் அரசில், பல உயர் பதவி மற்றும் பொறுப்புகளில் பணியாற்றினார். 1970களில் அப்போதைய பீகார் முதல்வர் கர்பூர் தாகூரின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராக இருந்து பல ஆலோசனைகளை வழங்கியதாக டெக்கன் ஹெரால்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் உயர் பதவியிலிருந்த போது, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தடாலடியாக அரசியலில் குதித்தார் யஷ்வந்த்.
ஜனதா கட்சியில் இணைந்தவருக்கு ஒரு சில ஆண்டுகளிலேயே அனைத்து இந்திய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. வி பி சிங் ஜனதா தளத்தைத் தொடங்கிய போது அக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி கொடுக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளம்.
யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1989 - 90 காலகட்டத்தில் வி பி சிங் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. தனக்கு கேபினெட் அமைச்சரவையில் இடம் வேண்டும், இல்லையெனில் பதவியே வேண்டாம் என இணையமைச்சர் பதவியை ஏற்க மறுத்தார். வி பி சிங்கோ யஷ்வந்த் சின்ஹா அரசியலுக்குப் புதியவர் என கேபினெட்டில் இடம் கொடுக்கத் தயங்கினார்.
1990 - 91ஆம் ஆண்டில் சந்திரசேகரின் பக்கம் திரும்பிய யஷ்வந்த் சின்ஹாவுக்கு நிதியமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை.
சந்திரசேகரை தன் அரசியல் குருவாகக் கருதிய யஷ்வந்த் சின்ஹா,
'பாஜக உன்னைப் பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்துவிடும்' என சந்திரசேகர் கூறிய அறிவுரை அல்லது எச்சரிக்கைகளை மீறி பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 1992 - 93 காலகட்டத்தில் இணைந்தார்.
1996ஆம் ஆண்டு பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராகப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அது போக, அன்றைய பாஜகவின் மூத்த மற்றும் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான லால் கிருஷ்ண அத்வானியின் ஆசீர்வாதமும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு பூரணமாக இருந்தது
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த போது மீண்டும் நிதி அமைச்சர் பதவி யஷ்வந்த் சின்ஹாவுக்கே வழங்கப்பட்டது. 1998 - 2002 வரை அப்பதவியில் தொடர்ந்தார். சிக்கலான கலால் வரி கட்டமைப்புகளை எளிமைப்படுத்தியது போன்ற சில விஷயங்களில் ஒரு நல்ல தீர்வை முன்வைத்து நிதி அமைச்சராகப் பல தரப்பினரிடம் நல்ல பெயர் சம்பாதித்தார்.
2001 - 02 காலகட்டத்தில் ஏற்பட்ட யூ டி ஐ ஊழலைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகி, வெளியுறவுத் துறை அமைச்சரானார். அமெரிக்க உள்துறை அமைச்சர் கொலின் பவலுடன் நல்ல நட்பு பாராட்டி வந்தார்.
அன்றைய தேதியில், அமெரிக்க அதிபரைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்கு அழைப்புவிடுக்கப்பட்ட ஒரே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
2004ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பாஜகவிலும் முரளி மனோகர் ஜோஷி, எல் கே அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் மெல்ல ஓரங்கட்டப்படத் தொடங்கினர்.
நரேந்திர மோடி அப்போது குஜராத் முதல்வராகப் பதவியில் இருந்தார். மெல்லக் கட்சிக்கும் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் இடையிலான விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது.
2004க்குப் பிறகு யஷ்வந்த் சின்ஹாவின் அரசியல் வாழ்க்கை தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வந்தது. ஆனால் இவரது மகன் ஜெயந்த் சின்ஹா, இப்போதும் இந்திய ஒன்றிய அரசின் அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவியில் இருக்கிறார்.
அரசியலைத் தாண்டி, யஷ்வந்த் சின்ஹா வாழ்கையில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், யஷ்வந்த் சின்ஹா ஒருபோதும் தன்னை ஓர் ஆர் எஸ் எஸ்காரராகக் மாற்றிக் கொள்ளவோ, காட்டிக் கொள்ளவோ இல்லை என அவரே தன் சுயசரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியில், கடந்த 2018ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, கடந்த 2021ஆம் ஆண்டு மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது இந்தியாவில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சகப் பணிகளை அறிந்தவர், முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆவாரா? தேர்தல்தான் விடை சொல்ல வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust