Sri Lanka Economic Crisis NewsSense
Opinion

இலவசங்களால் இந்தியாவில் இலங்கை போன்றதொரு நிலை வருமா? - Analysis

Govind

பல பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்நெருக்கடியை கையாண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகிறார்கள். போலீசாரின் தாக்குதல் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்நியச் செலவாணி பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ள இலங்கை அரசி, மருந்துகள், எரிபொருள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. நாட்டில் 13 மணிநேர மின்வெட்டு நீடிக்கிறது.

இலங்கையும், இந்தியாவும்

ஏப்ரல் 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு, கோவிட் முடக்கம், உக்ரைன் போர் காணமாக சுற்றுலாத் துறை முடங்கியுள்து. உலக வங்கி கூற்றுப்படி இலங்கையின் சுற்றுலா வருமானம் 2018 இல் 5.6 பில்லியன் டாலராக இருந்து 2020 இல் 1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதனால் அதன அந்நியச் செலவாணி கையிருப்பு 70% வீழ்ச்சியடைந்து தற்போது சுமார் 2.31 பில்லியன் டாலர் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு மட்டும் திருப்பி செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் 7 பில்லியன் டாலராக உள்ளது. மொத்த வெளிநாட்டுக் கடன் 56.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இது இலங்கையின் கதை என்றால் இந்தியாவிலும் கடன் பட்டுள்ள மாநிலங்கள் அதிகம் உள்ளன. தமிழ்நாடு 6.6 இலட்சம் கோடி ரூபாய், மகாராஷ்டிரா 6.8 இலட்சம் கோடி, மேற்கு வங்கம் 5.62 லட்சம் கோடி, ராஜஸ்தான் 4.7 இலட்சம் கோடி, பஞ்சாப் 3 இலட்சம் கோடி ரூபாய் கடனில் தவித்து வருகின்றன. உத்திரப் பிரதேசம் 6.5 இலட்சம் கோடி ரூபாயை கடனாக வைத்திருக்கிது.

ஒவ்வொரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு வேறு என்பதால் இதை வெறும் எண்களில் மட்டும் ஒப்பிடக்கூடாது. 2023 நிதியாண்டில் ஒன்றிய அரசு மட்டும் மாநில அரசுகளின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% இருக்குமென்று ஒரு அரசுத்துறை கூறியுள்ளது. இதில் 40% ஒன்றிய அரசும், 20% மாநில அரசுகளும் கடனாக வைத்திருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் சதவீதம் எவ்வளவு என்று பார்ப்போம். பஞ்சாப் 53.3%, ராஜஸ்தான் 39.8%, மேற்கு வங்கம் 38.8%, கேரளா 38.3%, ஆந்திரப் பிரதேசம் 37.6%, மகாராஷ்டிரம் 20%, குஜராத் 23%, தமிழ்நாடு 26.29% மும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடனின் அளவை வைத்துள்ளன. ஒன்றிய அரசோ மொத்த இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 40% கடன் அளவை வைத்துள்ளது.

எனவே இது ஏதோ மாநிலங்களின் பிரச்சினை மட்டுமல்ல, ஒன்றிய அரசையும் சேர்த்து இந்தியாவின் பிரச்சினையும் கூட.

இலவசங்களும், நிதி நிலையும்

ஏப்ரல் 2ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடிய மூத்த அதிகாரிகள் கூட்டம், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவசங்களால் மாநில நிதியை காலி செய்கிறார்கள் என்று கூறியது. எனில் மத்திய அரசு அப்படி எதுவும் செலவழிக்கவில்லையா என்ன?

இப்படி இலவசங்கள் தொடருமானால் இலங்கையின் தலைவிதியைப் போன்றே மாநிலங்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் மோடியிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் இலங்கையின் நெருக்கடி இலவசங்களால் உருவான ஒன்றல்ல. இந்தியாவிலும் இலவசங்களால் மட்டும் கடன் நெருக்கடி உருவாகிவிடவில்லை.

எனினும் ஒரு சில மாநிலங்கள் நிதி நெருக்கடியில் திணறுவது உண்மை. சான்றாக பஞ்சாப்பை எடுத்துக் கொள்வோம். தற்போது இம்மாநிலத்தை ஆம்ஆத்மி ஆட்சி செய்கிறது. அதன் தேர்தல் வாக்குறுதிகளில் மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ 1000 கொடுப்போம் என்று கூறியிருக்கிறது.

ஆம்ஆத்மியின் பகவந்த் மான் அரசு பதவியேற்கும் போது அதற்கு முந்தைய காங்கிரசு அரசு 2.82 இலட்சம் கடனை விட்டுச் சென்றது. அம்ரீந்தர் சிங் அரசு பதவியேற்கும் போது அதற்கு முந்தைய பாஜக – அகாலிதள் அரசு 1.82 இலட்சம் கடனை விட்டுச் சென்றது. தற்போது 2020-21 நிதியாண்டின் படி மாநிலத்தின் மொத்த கடன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 46.3% ஆக இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி பஞ்சாபில் 1.02 கோடி பெண்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். அதை ஒரு கோடி என்று வைத்துக் கொண்டால் அவர்களுக்கு மாதம் தலா ரூ.1000 கொடுத்தால் ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் வரும். ஐந்தாண்டுகளில் 60,000 கோடி வரும். இது தற்போதுள்ள கடனில் சுமார் 20% ஆகும்.

ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டி அரசு 27 இலடசம் பழங்குடி பெண்களுக்கு ஆண்டு தோறும் ரூ.15,000 நிதியுதவி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ஒய்வூதியமாக மாதம் 2,250 ரூபாய் வழங்குகிறது. 14 இலட்சம் மாணவர்களுக்கு கட்டணத்தை தள்ளுபடி செய்தது. 1.5 கோடி பேருக்கு இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கியது. தமிழகத்திலும் இத்தகைய நலத்திட்டங்கள் ஏராளம் செயல்படுத்தப்படுகின்றன.

பொதுவில் உயர்சாதியினர், மேட்டுக்குடியினர் இத்தகைய நலத்திட்டங்களை இலவச விரயம் என்று ஏதோ பிச்சை போடுவது போல இழிவு படுத்துகின்றனர். உண்மையில் ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் அளிக்கப்படும் நலத்திட்டங்கள் சமூகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கானவை.

பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம்

இராணுவத்திற்கும், புல்லட் ரயிலுக்கும், விமான நிலைய விரிவாக்கம், அதிவேக சாலை போன்றவற்றிக்கு மிக அதிக நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஒதுக்கும் நலத்திட்ட நிதி என்பது மொத்த வரவு செலவு அறிக்கையில் சிறு பங்கைத்தான் கொண்டிருக்கின்றன. இதை இலங்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு.

பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், திடீர் கோவிட் முடக்கத்தால் நிலை குலைந்த தொழிலாளர்கள் போன்றவற்றால்தான் நாட்டின் சிறு குறு தொழிலும், வணிகர்களும், தொழிலாளர்களும் தமது வாழ்க்கையை இழந்தார்கள். இலங்கையின் மக்கள் தொகை 2 கோடியே 20 இலட்சம் என்றால் மோடி அரசின் தவறான முடிவுகளால் வாழ்விழந்தவர்கள் போல கோடிப் பேர் இருப்பார்கள். இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடிக்கும் மேல்.

எனவே நமக்கு இலங்கை அரசு போன்றதொரு நெருக்கடி வருவதாக இருந்தால் அது ஒன்றிய அரசின் தவறான கொள்கையினால்தான் வருமே அன்றி மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் இல்லை. உண்மையில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு பாக்கியில்லாமல் மாநிலங்களுக்கு கொடுத்தாலே மாநில அரசுகள் கடன் சுமையில் இருந்து விடுபடும் என்பது உண்மை.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?