(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். Newssensetn தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
ஆங்கிலம் தான் உலகம்! ஆங்கிலம் இன்றி ஒரு அணுவும் அசையாது! ஆங்கிலம் இருந்தால் மட்டுமே வணிகம், வேலை வாய்ப்புகள் என நம்மைப் போன்ற பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் ஆங்கிலத்திற்கு அடிமைசாசனம் இன்னும் வாசித்து வரும் வேளையில், ஆங்கிலம் பேசும் நாடுகள் உலக ஓட்டத்தோடு இணைய வேண்டுமெனில் ஆங்கிலம் மட்டும் போதாது என்ற போக்கில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர், பல மொழிகள் கற்க வேண்டிய அவசியம் குறித்தான விவாதங்கள் மேலெழுந்து வந்தாலும், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே, ‘பிரித்தானியாவின் ஒற்றை மொழி அறிவு வருங்கால வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்ற எச்சரிக்கைகள் வரத்தொடங்கியிருந்தன.
குறிப்பாக 2013இல், பிரித்தானிய அவை (British council) வெளியிட்ட, “வருங்கால மொழிகள்” என்னும் ஆய்வறிக்கையில் பிரித்தானியாவின் வளர்ச்சி, பாதுகாப்பு, உலகத்துடனான உறவாடலுக்கும் பன்மொழி அறிவு அவசியம் என்றும் அதற்கென ஸ்பானிஷ், மாண்டரின், ஃபிரன்சு, அராபிக், ஜெர்மன் – (முதல் 5), இத்தாலியன், டச்சு, போர்த்துகீசு, ஜப்பானியம், ரஷ்ய மொழிகள் ஆகிய 10 மொழிகளை வகைப்படுத்தியிருந்தனர்.
மே 2016இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்ட The Value of Languages அறிக்கையில், பன்மொழிப் புலமைகள் இல்லாமையால், “பிரித்தானியாவின் மென் அணுகுமுறைக்கான வாய்ப்புகள் குறைந்து, தேசப் பாதுகாப்பில் குறைப்பாடுகள் வரும், அதோடு, ஐரோப்பிய ஒன்றியக் கூட்டிலும் ஐ.நாவின் உறவிலுமே வருங்காலத்தில் பாதிப்பு ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியர் ஜேம்ஸ் ஃபோர்மேன் அவர்களின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி, 2013இல் செய்தி வெளியிட்டு இருந்த The Gaurdian இதழ், “பன்மொழிப் புலமைக் குறைப்பாட்டினால், பிரித்தானியா வருடத்திற்கு 3.5% GDP இழப்பைச் சந்திக்கிறது “ எனத் தெரிவித்தது.
British Academy’s Born Global Initiative-ன் ஆராய்ச்சியாளர் பெர்னாடட்டெ, “பிரித்தானியாவின் பொருளை பிற நாடுகளுக்கு விற்பனைச் செய்யும் பொழுது மொழிகள் தெரியாதக் காரணங்களால் பொருளாதார இழப்பை மட்டுமல்ல, முறைப்படியான தகவல் பரிமாற்றங்களின் தடையால், சட்ட சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்தார்.
அடுத்ததாக, Think Global மற்றும் British Council இணைந்து நடத்திய சுற்றாய்வில், 500 வணிகக்குழுமத் தலைவர்களில் 74% பேர், பிரித்தானியாவின் இளைஞர்களுக்கு பல மொழிகளில் திறமை அவசியம் எனக் கூறியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, British Chambers of Commerce நடத்திய சுற்றாய்வில், 62% பிரித்தானிய நிறுவனங்கள் மொழிவளத் தடையால் ஏற்றுமதி வணிகத்தில் பின் தங்கியுள்ளதாகவும் ஏற்கனவே ஏற்றுமதி தொழில் செய்யும் 70% நிறுவனங்கள் மொழிகளின் வளம் குறைவால் வருங்காலத்தில் இழப்பைச் சந்திப்பார்கள் எனவும் எச்சரித்திருந்தனர்.
Aston Business School 2021இல் வெளியிட்ட அறிக்கையில், பிரித்தானியாவின் சிறு-குறுத்தொழிலில் பல மொழிகளின் அறிவுக் கூட்டால், 30% வளர்ச்சியை அடுத்த 5 ஆண்டுகளில் பெற முடியும் என எடுத்துரைத்தனர்.
Languages of Global importance ஆய்வறிக்கையில், “அறிவியல், கணிதம் தொழிற்நுட்பக் கல்விக்கு ஈடாக பன்னாட்டு மொழிக் கல்விக்கும் பிரித்தானியா முக்கியவத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
ஏப்ரல் 2018இல் வெளியான European Commission’s Flash Barometer அறிக்கையில், பிரித்தானியாவில் 32% பேருக்கு மட்டுமே ஆங்கிலத்தோடு கூடுதல் மொழிகளில் புலமை இருப்பதாகவும், ஃபிரான்சில் 79%, ஜெர்மனியில் 91%, ஏனைய ஐரோப்பிய நாடுகளில் 80% ஆங்கிலம், தாய்மொழி, பன்னாட்டு மொழிப் புலமை வளர்த்துள்ளமைச் சுட்டிக்காட்டப்பட்டது.
2020 முதல் 11-16 வயதினருக்கு கற்றுக்கொடுக்கப்படும் பல மொழிகளின் கல்வி வழியே 2020-2050 வரையில் உருவாகும் உலகத்தொடர்பு, அதனால் மாற்றமடையும் வணிகத்தின் மூலம் பல்லாயிரம் மில்லியன் பவுண்டு பொருளாதார லாபம் கிடைக்கும் என கணக்கிட்டனர்.
உதாரணமாக, பிரித்தானியாவின் 10 சதவீத இளையோர்கள் அரேபிய மொழியைக் கற்பதன் வழியே 2050இல் 944 மில்லியன் வரையும், 10 சதவீத இளையோர்கள் மாண்டரின் கற்கும்பொழுது, 730 மில்லியன் வரையும் ஃபிரன்சு மொழி வழியே 625 மில்லியன் வரையிலும் பிரித்தானிய பவுண்டு பொருளாதார லாபம் ஈட்ட வாய்ப்புகள் கூடிவரும் என்கின்றனர்.
பிரித்தானியக் கல்விக்கழகம், அமெரிக்கக் கலைக் கழகம், ஆஸ்திரேலிய சமூக அறிவியல் கழகம், ஆஸ்திரேலிய மனிதவியல் கழகம், கனடா உயரியச் சமூகவை இணைந்து 2020இல் வெளியிட்ட கூட்டறிக்கையில், “கொரொனா பெருந்தொற்றின் காலம் உணர்த்தியச் செய்திவழி, முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மனிதகுல வரலாற்றில், பாதுகாப்பு, சுகாதார மேம்பாட்டிற்காக உலகளாவிய அளவிலான கூட்டுச் சேர்க்கை எல்லா நாடுகளுக்கும் அவசியம் ஆகிறது” என்றனர்.
பன்மொழிப் புலமைகள் வழியாக மட்டுமே, சமூகம், அரசியல், பொருளாதாரக் கூட்டில் வெற்றியடைய முடியும், அதன்வழியாகவே, பல்துறை ஆராய்ச்சிகள் கல்வித்துறையிலும் சுகாதாரத்துறையிலும் மேம்படும் என்றுத்துரைத்தனர்.
இத்தகைய பன்மொழிப் புலமை வளர்ப்பில், ஆங்கிலம் மட்டுமே அறிந்தச் சமூகம் (Anglophone communities) எல்லா நாட்டினருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்ற கற்பனையால் தடையாக உள்ளது என்றனர்.
இந்தியச் சூழலில் இந்த உலக ஓட்டத்தை ஒப்பிட்டுப் பார்ப்போம். மும்மொழி அவசியம் என்ற வாதம் பெருகும் நிலையில், ஆம், தாய்மொழி, காலனியாக்கத்தின் சுவட்டின் வழியாகவும் உலகத்தோடு நிகழ்கால இணைப்பிற்காகவும் ஆங்கில மொழி, ஆங்கில நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், நார்டிக் நாடுகள் போன்றவைகள் பரிந்துரைக்கும் பன்னாட்டு தொடர்பு மொழிகளில் ஒன்று என முன் செல்வதே எல்லோருக்கும் சிறப்பாகும்.
இந்திப் பேசும் மாநிலங்கள், ஏனைய இந்திய மாநிலங்களிலும் இதுவே சாத்தியாகும்பொழுது அனைவருக்கும் வளர்ச்சி கிட்டும். இந்திய மொழிகளில், ஒருவேளை இந்தியை மூன்றாம் மொழியாக நாம் தேர்ந்தெடுத்தால், இந்திப் பேசும் மாநிலங்கள், அவர்களின் தாய்மொழியான இந்தியை முதலில் தேர்ந்த்தெடுப்பார்கள், உலக ஓட்டத்தில் ஆங்கிலம், வருங்காலத்திற்கான பன்மொழிகளின் வாய்ப்பில் பன்னாட்டு மொழியென முன் செல்வர், ஏனைய மொழிப் பேசும் மாநிலத்தவர்கள் வருங்கால உலகில் தேங்கி விடுவோம். இங்கே எல்லோரும் வளர வேண்டும், சமமாக வளர வேண்டும், அதன்வழியாகவே வளமான இந்திய ஒன்றியத்தினை நாம் எல்லோரும் இணைந்து உருவாக்க முடியும்.
இந்தக் கட்டுரையின் ஆசிரியரை தொடர்பு கொள்ள : thamilinchelvan@gmail.com
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust