aliens  Twitter
அறிவியல்

ஏலியன்கள் : ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? - 3 முக்கிய காரணங்கள் இதுதான்

Govind

மனிதக் குலத்தின் சுவாரசியமான ஆர்வங்களில் ஒன்று இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் உள்ளோமா? மற்ற அண்டங்களில், பிரபஞ்சத்தில், நமது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திர குடும்பத்தில் நமக்கு முடிந்த அளவு அருகாமையில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்க வாய்ப்பிருக்கிறதா? இவையெல்லாம் என்றும் வற்றாத ஆர்வத்தைத் தரக்கூடிய கேள்விகள்.

வேற்றுக்கிரக வாசிகள் குறித்த விடைகள் நமக்குத் தெரியவில்லை என்றாலும் நமது கற்பனையில் அவர்கள் எப்போதும் குடியிருக்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இருப்பது போன்ற உணர்வு நமக்கு எப்போதும் இருக்கிறது. ஆனால் இதுவரை அறிவியல் பூர்வமாக வேற்றுக்கிரக வாசிகளை ஏன் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. அதைப் பார்ப்போம்.

நமது பால்வெளி எனப்படும் மில்க்கிவே அண்டத்தில் 100 பில்லியன் கிரகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எங்கோ, அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகள் இந்த நூறு பில்லியன் கிரகங்களில் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால், அதன் ஒரு குறிப்பைக் கூட நாம் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் கேள்வி. வேற்றுகிரகவாசிகள் இல்லை அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அது நமக்கு அருகில் இல்லை என்ற விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக கூறிகின்றனர்.

Aliens

ஆனால் அதற்கு நேர்மாறாக பெருகிவரும் சான்றுகள் ஏலியன்ஸ் இருப்பார்களா என்பதற்கான புதிய சாத்தியக்கூறுகளை ஆராய அதிக எண்ணிக்கையிலான நிபுணர்களை ஊக்கப்படுத்தியுள்ளன.

2017 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு ஏலியன்ஸ்கள் குறித்து ஒரு கருதுகோளை ஊகமாக முன்மொழிந்தது. பெரும்பாலான வேற்றுகிரகவாசிகள் ஒரு கரடியைப் போல நீண்ட காலத்திற்கு உறக்க நிலையில் இருக்கிறார்கள் என்ற கருத்துதான் அந்த ஊகம். எந்தவொரு மேம்பட்ட நாகரிகமும் இறுதியில் இயந்திரங்களுடன் ஒன்றிணைந்து, நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவில் சிந்திக்கவும், செயல்படவும் கூடிய முழுமையான டிஜிட்டல் சமூகத்தை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் காரணம் கூறுகின்றனர்.

அதில் ஒரே பிரச்சனை குளிர்ச்சி. பூமியில் உள்ள செயலாக்க அமைப்புகள், எடுத்துக்காட்டாக, 10 மடங்கு குளிர்ச்சியான சூழலில் இருக்கும் போது 10 மடங்கு அதிக திறன் கொண்டதாக மாறும். எனவே டிஜிட்டல் ஏலியன்கள் பிரபஞ்சம் விரிவடைந்து குளிர்ச்சியடையும் போது சில டிரில்லியன் ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக உறக்க நிலையில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அந்த வகையில், அவர்கள் தங்கள் உயிர் வாழும் அமைப்புகளை அதிக வெப்பத்தின் பொருட்டு செலவழிக்காமல் அண்டம் எனப்படும் காலெக்சியை வெல்வது போன்ற முக்கியமான செயல்களுக்கு அதிக சக்தியைச் செலவிட முடியும்.

2016 இல் முன்மொழியப்பட்ட மற்றொரு முன்மொழிவு கயன் பாட்டில்நெக் கருதுகோள் என்று அழைக்கப்படுகிறது. பல இளம் பாறைக் கோள்கள் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் மிகவும் நிலையற்ற காலநிலையைக் கொண்டிருக்கின்றன. மேலும் இறுதியில் அதிக வெப்பமாகவோ அல்லது மிகக் குளிராகவோ வளர்கின்றன, மேலும் அவை நீண்ட காலத்திற்கு உயிர் வாழ முடியாது. உதாரணமாக வீனஸ் எனப்படும் வெள்ளி, பூமி, மார்ஸ் எனப்படும் செவ்வாய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு கிரகமும் வாழ்க்கைக்கான சரியான நிலைமைகளைக் கொண்டிருந்தது. மேலும் எளிமையான நுண்ணுயிரிகளைக் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால் இன்று பூமியில் மட்டும் உயிர்கள் வாழ்கின்றன. காரணம், பாட்டில்நெக் கருதுகோளின் படி, பூமியில் ஆரம்பகால வாழ்க்கை விரைவாக உருவாகி, வளிமண்டலத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களை வெளியிட்டது. இது இறுதியில் காலநிலையை உறுதிப்படுத்த உதவியது. ஆனால் இந்த நடத்தை விதிமுறை ஒரு விதிவிலக்காக கூட இருக்கலாம். ஒருவேளை நாம் இன்னும் வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிக்காததற்கு உண்மையான காரணம், அவர்கள் அனைவரும் இறந்து கூடப் போயிருக்கலாம்.

ஆனால் தீவிர வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பாக முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ்க்கை செழிக்க முடிந்தால் என்ன செய்வது? புளூட்டோ ஒரு நிலத்தடி கடலைக் கொண்டுள்ளது என்று சான்றுகள் பரிந்துரைத்த ஒரு வருடத்திற்குப் பிறகு, கிரகவியல் விஞ்ஞானி ஆலன் ஸ்டெர்ன் 2017 இல் இதைத்தான் முன்மொழிந்தார்.

உண்மையில், புளூட்டோ, யூரோபா மற்றும் என்செலடஸ் போன்ற உலகங்கள், ஒரு பரந்த நிலத்தடி கடலுக்கு மேலே ஒரு பனிக்கட்டி ஓட்டைக் கொண்டுள்ளன. பூமி போன்ற கிரகங்களை விட வாழ்க்கைக்குச் சிறந்த காப்பகத்தை அவை வழங்கக்கூடும். அவை தீவிர வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் உயர் ஆற்றல் கதிர்வீச்சுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. இதனால் மேற்பரப்பு தாக்கப்படுகிறது. இது நடந்தால், இந்த உலகங்களில் நீந்திக் கொண்டிருக்கும் எந்தவொரு அறிவார்ந்த வாழ்க்கையும் மற்ற பிரபஞ்சத்திலிருந்து தொடர்பு கொள்ள முடியாத படி மூடப்பட்டிருக்கும், தொடர்பு கொள்ள முடியாமலும் போகும்.

காரணம் எதுவாக இருந்தாலும், மனித வரலாற்றில் ஏலியன்ஸ் எனப்படும் இந்த வேற்றுக்கிரக வாசிகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது ஒரு முக்கியமான ஆய்வு. இதற்கு நமது தேடலை எவ்வாறு மேம்படுத்துவது என்ற கேள்விக்கு நாம் விடைதேட வேண்டும். இல்லையேல் பல மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளில் நாமும் மறைந்து போகலாம். அதற்குள் உயிரினங்கள் வாழ்ந்த அல்லது இறந்த ஒரு கிரகத்தை நாம் கண்டுபிடித்து அதன் காரண காரணங்களை ஆராயும் போது நமது மனிதக் குலத்தின் எதிர்காலம் உத்திரவாதப்படுத்தப் படுவதோடு இந்த பிரபஞ்சம் அறிவார்ந்த முறையில் தன்னை புரிந்து கொள்ளும் முயற்சியும் தொடர முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?