நேற்று இறுதிப்போட்டி முடிந்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோனி குறித்து எழுப்பிய கேள்விக்கு “நல்லவர்களுக்கு நல்லது தான் நடக்கும், இன்று தோனிக்கு நடந்தது அதைவிட சிறந்தது" என்றார்.
ஐபிஎல் 2023ன் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்து 215 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது குஜராத்.
அதிகபட்சமாக தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சாய் சுதர்ஷன் 96 ரன்கள் எடுத்தார்.
சென்னை அணி களமிறங்கியபோது மழைக் குறுக்கிட்டதால், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போட்டி தடைப்பட்டது. அதன் பிறகு ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் 171 ஆக குறைக்கப்பட்டு சென்னை அணி விளையாடியது.
கடைசி பந்து வரை சென்ற போட்டியில், சென்னை அணி வெற்றிப்பெற்றது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷனில் பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தோனியிடம் தோல்வியுறுவது குறித்து நான் கவலைக்கொள்ளவில்லை என்றார்.
“நான் அவருக்காக (தோனி) மகிழ்ச்சியடைகிறேன். நான் தோற்கவேண்டும் என்று இருந்தால், அவரிடம் தோற்பதில் எனக்கு கவலை இல்லை. வெற்றி அவருடையது என்று விதியே தீர்மானித்துவிட்டது. நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் தோனியும் ஒருவர். நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என கூறியிருந்தேன். இன்று தோனிக்கு நடந்தது அதைவிட சிறந்த ஒன்று” என்று பேசினார் ஹர்திக்.
வரலாற்றில் நேற்று நடந்தது போல இறுதிப்போட்டி இதுவரை நடக்கவில்லை. மே 28ஆம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. மழை வந்ததால் அன்று நடக்கவில்லை. மே 29ஆம் தேதிக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
மே 29ஆம் தேதியும் முதல் இன்னிங்ஸ் முடிந்து மழை வர, மே 30 நள்ளிரவு 12.10க்கு போட்டி நடக்கும் என முடிவுசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த போட்டியில் சென்னை அணி வென்றுள்ளது.
மழையின் காரணமாக நீர் தேங்கியிருந்த மைதானத்தை சரி செய்ய மைதான ஊழியர்கள் அரும்பாடுபட்டனர். பிட்ச் ரோலர்கள் கொண்டு மைதானத்தை உலர்த்தியது இல்லாமல், ஸ்பாஞ்சுகள் கொண்டும், ஹேர் டிரையர் கொண்டும், டவல்கள் வைத்தும் தண்ணீரை எடுத்தனர்.
நேற்றைய போட்டியில் குஜராத் அணியின் நட்சத்திரங்களாக திகழ்ந்தது சாய் சுதர்ஷன் மற்றும் மோஹித் சர்மா. சென்னை அணி இலக்கை அடைய அதிரடியாக விளையாடிக்கொண்டிருக்கையில், ரஹானே, ராயுடு மற்றும் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார் மோஹித் சர்மா.
பார்ட்னர்ஷிப்பை உடைத்து, வெற்றியை திசைத்திருப்பினார். எனினும் கடைசி இரண்டு பந்துகளில் தலா ஒரு சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்து ஜடேஜா சென்னை அணியை வெற்றியடையச் செய்தார்.
இதனால் மனமுடைந்துபோனார் மோஹித் சர்மா. அவரைக் கட்டியணைத்து ஹர்திக் பாண்டியா சமாதானம் செய்தது நெகிழ்ச்சியுறும் தருணமாக இருந்தது.
வின்னிங் ஷாட்டை அடித்த ஜடேஜா ஆரவாரமாக கத்திக்கொண்டு நேரே தோனியை சென்று கட்டியணைத்தார். ஜடேஜாவை தூக்கி அணைத்து பிடித்த தோனி கண்கலங்கியபடி நின்றிருந்தார். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust