Chennai Super Kings IPL
ஸ்போர்ட்ஸ்

IPL 2022: CSK vs MI: சிங்கங்கள் வேட்டையாடுவதை மறப்பதில்லை; கடைசி ஓவரில் கெத்துகாட்டிய தோனி

ரத்தம் கொப்பளிக்க; இதயத்துடிப்பு எகிற நாயகன் அடிக்கும் அடியில் எதிரணி வீழும்போது ரசிகர்களின் உடலில் ஹார்மோன்கள் மேஜிக் நிகழ்த்த இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும். அதே கதை தான் நேற்றும் நடந்தது

NewsSense Editorial Team

ஐபிஎல் 2022 சீசனில் 200 ரன்களுக்கு மேல் பல அணிகள் அடித்துவிட்டன, பல ஆட்டங்களில் சேஸிங் செய்யும் அணி எளிதாக வென்றிருக்கிறது.
ஆனால் சென்னை மும்பை அணிகள் மோதிய நேற்றைய போட்டி தான் பரபரப்பின் உச்சமாக இருந்தது, நார்மலான ஸ்கோர் தான், ஆனால் விடாக்கண்டன் கொடாக்கண்டன் ஆக இரு அணிகளும் ஆடிய மிரட்டல் ஆட்டம் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்தது.
கொஞ்சம் பழைய கதை தான், ஆரம்பத்தில் அடித்து நொறுக்கும் ஹீரோ, பின்னர் ஒரு சிறு சறுக்கல் சந்திப்பார். அதன்பின் மீண்டும் ஹீரோ பாதாளத்தில் இருந்து மீண்டு வந்து ஹீரோயிசம் காட்டுவார்; வில்லனும் சளைக்காமல் போரிட்டு ஒரு கட்டத்தில் முன்னேறுவார். ஆனால் இறுதியில் ரசிகர்கள் சீட்டின் நுனியில் உட்கார்ந்து நகத்தைக் கடித்து விரல்களைத் தின்று கொண்டிருக்கையில், ஹீரோ நம்பமுடியாத வகையில் வில்லனைத் துவம்சம் செய்து ஜெயித்து ரசிகர்களின் அப்ளாசை அள்ளுவார்.

captains


ரத்தம் கொப்பளிக்க; இதயத்துடிப்பு எகிற நாயகன் அடிக்கும் அடியில் எதிரணி வீழும்போது ரசிகர்களின் உடலில் ஹார்மோன்கள் மேஜிக் நிகழ்த்த இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும்.

அதே கதை தான் நேற்றும் நடந்தது, மும்பை - சென்னை ஆட்டங்களைப் பொறுத்தவரையில் யார் ஹீரோ, யார் வில்லன் என்பது ஆட்டத்துக்கு ஆட்டம் வேறுபடும். அந்த வகையில் நேற்றைய போட்டியின் நாயகன் தோனி தான்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியும் ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது, சென்னை அணியும் ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் மும்பை அணியை விடச் சென்னை ஒரு ரன் கூடுதலாக எடுத்திருந்தது, அந்த ஒரு ரன் தான் ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் வித்தியாசம். அந்த வித்தியாசம் மகேந்திர சிங் தோனி தான்.

CSK

நேற்றைய ஆட்டத்தில் என்ன நடந்தது?

ஐபிஎல் 2022 தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோற்று அவமானகரமான நிலையை எதிர்கொண்டுள்ளது மும்பை அணி, சென்னை அணியும் கிட்டத்ட்ட அதே நிலையை என்றாலும் ஒரே ஒரு போட்டியில் வென்றதால் கடைசி முந்தைய இடத்தில் இருந்தது.

வழக்கமாக சென்னை மும்பை அணிகள் மோதும் போட்டிகள் என்றால் அனல் பறக்கும்.

ஆனால் தற்போது கடைசி இரு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும் போட்டி என்பதால், ஐபிஎல்லின் எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் CSK vs MI ஆட்டத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.

நேற்றைய தினம் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ஜடேஜா சேஸிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதல் ஓவரை முகேஷ் வீசினார். ரோகித் ஷர்மா எதிர்கொண்டார், இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை முகேஷ் சிறப்பாகப் பந்துவீசவில்லை. பவர்பிளேவில் அவர் எவ்வளவு ரன்களை விட்டுக்கொடுக்கப் போகிறாரோ என சென்னை ரசிகர்கள் வயிற்றில் புளி உருண்டை ஓடியது.

Mukesh

ஆனால் அந்த சீன் எல்லாம் இந்த ஆட்டத்தில் இல்லை. இது மும்பை - சென்னை மேட்ச். திடீரென யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆவார்கள் அல்லவா. முகேஷுக்கும் அப்படி ஒரு தினமாக நேற்றைய ஆட்டம் அமைந்தது.

முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே மும்பை அணியின் கேப்டனை தூக்கினார் முகேஷ். ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார் ரோகித் ஷர்மா.

அந்த அதிர்ச்சியில் இருந்து மும்பை மீள்வதற்கு அதே ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனையும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் முகேஷ் சவுதரி, முகேஷ் அம்பானியின் மும்பை அணி முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இரண்டாவது ஓவரை சான்ட்னர் வீசினார். இந்த முறை அதிர்ச்சி சென்னை ரசிகர்களுக்கு காத்திருந்தது. ஆம், சற்று கடினம் தான் என்றாலும் தோனி சூரியகுமார் யாதவை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை தவற விட்டார். அதே ஓவரின் கடைசி பந்தில் ப்ரெவிஸ் கொடுத்த ஒரு கேட்சை ரவீந்திர ஜடேஜா தவறவிட்டார்.

Tilak

ஜடேஜா ஒரு கேட்சை தவறவிடுவது என்பது அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வாகும்.

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீச மீண்டும் முகேஷ் வந்தார், அவரை ஒரு பௌண்டரி வைத்து welcome சொன்னார் சூரியகுமார் யாதவ். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் ப்ரெவிஸ் விக்கெட்டையும் தகர்த்து மும்பை அணியை நிலைகுலையச் செய்தார் முகேஷ், அப்போது மும்பை அணியின் ஸ்கோர் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 23 ரன்கள்.

அதன்பின்னர் திலக் வர்மா, சூரிய குமார் ஜோடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது, ஆனால் பவர்பிளே முடிந்தவுடன் சாண்ட்னர் பந்தில் முகேஷிடம் கேட்ச் கொடுத்து சூரியகுமார் வீழ்ந்தார். அவர் 21 பந்துகளில் மூன்று பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் வைத்து 32 ரன்கள் அடித்திருந்தார். அப்போது ஸ்கோர் 47 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள்.

10 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் எடுத்திருந்தது மும்பை.

Bravo, Pollard

அபாயகரமான பொல்லார்டை தோனியின் விரித்த வியூக உதவியோடு மஹீஷ் தீக்ஷண வீழ்த்தினார். அவர் 14 ரன்களில் நடையை கட்டினார். ஆட்டத்தின் கடைசி இரு ஓவர்களில் திலக் வர்மா - உனத்கட் ஜோடி சிறப்பாக விளையாடி 29 ரன்கள் சேர்க்க, மும்பை அணியின் ஸ்கோர் 150-ஐ கடந்தது.

குறிப்பாக உனத்கட் கடைசி ஓவரில் தான் எதிர்கொண்ட ஐந்து பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பூவுண்டரி உட்ப14 ரன்கள் குவித்தார். திலக் வர்மா அரை சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் அடித்தது.

சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஆனால், அந்த சீன்லாம் இங்க இல்ல.

இது சென்னை vs மும்பை ஆட்டம் என நிரூபிக்கும் விதமாக சென்னை அணி சேசிங் செய்ய களமிறங்கியபோது

முதல் ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் விக்கெட்டை தகர்த்தார் டேனியல் சாம்ஸ்.

Ambati Rayudu

கோல்டன் டக் அவுட் ஆனார் ருதுராஜ். சென்னை உடனே பௌலர் மிச்செல் சான்ட்னரை களமிறக்கியது.

சான்டனரை தனது இரண்டாவது ஓவரில் வீழ்த்தினார் டேனியல் சாம்ஸ். இப்படி ஓவருக்கு ஓவர் சென்னை மும்பை அணிகள் இடையே ஆட்டம் மாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ராயுடு உத்தப்பா இணை பொறுப்பாக விளையாடியது. ஆனால் ஒன்பதாவது ஓவரில் இந்த ஜோடியை பிரித்தார் உனத்கட். உத்தப்பா 30 ரன்களோடு வெளியேற 10 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி.

மெரிடித் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார் ஷிவம் துபே. ஆட்டம் மெல்ல மெல்ல சென்னை பக்கம் மீண்டும் நகர்ந்த நிலையில் டேனியல் சாம்ஸ் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஷிவம் துபே மற்றும் ராயுடு அவுட் ஆயினர்.

அப்போது சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது

Pretorius

கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு தேவை 53 ரன்கள். களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி இருந்தனர்.

மெரிடித் வீசிய 16வது ஓவரில் ஜடேஜா வீழ்ந்தார், அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே சென்னையால் எடுக்க முடிந்தது. அப்போது ஆட்டம் மெல்ல மெல்ல மும்பை பக்கம் நகரத் தொடங்கியது. 17வது ஓவரை வீசிய பும்ரா ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆட்டத்தில் டென்ஷன் எகிறியது.

அப்போது சென்னை அணி 18 பந்துகளில் 42 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை.

உனத்கட் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்தார் பிரிட்டோரியஸ், 14 ரன்கள் எடுத்தது சென்னை,

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 28 ரன்கள். பிரிட்டோரியஸ் இரு பௌண்டரிகள் அடித்தார், கடைசி பந்தில் தோனி இரண்டு ரன்கள் எடுக்க விரும்பினார், ஆனால் பிரிட்டோரியஸ் கவனிக்கவில்லை. அந்த ஓவரில் 11 ரன்கள் விளாசியது சென்னை.

Dhoni

கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 17 ரன்கள். பேட்டிங் முனையில் பிரிடோரியஸ் இருந்தார். உனத்கட் வீசிய சிறப்பான முதல் பந்தில் எல்பி ஆனார் பிரிட்டோரியஸ், ஆனால் அம்பயர் அவுட் ஏதும் கொடுக்கவில்லை. மும்பை அணி மூன்றாவது அம்பயரிடம் ரிவ்யூ கேட்டது. அதில் பிரிட்டோரியஸ் அவுட் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இரண்டாவது பந்தில் டுவைன் பிராவோ ஒரு ரன் மட்டுமே எடுத்தார், அப்போது தோனி பேட்டிங் முனைக்கு வந்தார். சென்னை அணி அப்போது வெற்றி பெற 4 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டும் எனும் நிலை.

அதாவது கிட்டதட்ட 4 பந்துகளையும் பௌண்டரிக்கு விளாச வேண்டும் என்பது போன்ற சூழல்,

மூன்றாவது பந்தை வீசினார் உனத்கட் தோனி அபாரமான ஒரு சிக்ஸர் விளாசினார். ஆட்டம் இன்னும் முடியவில்லை எனச் சென்னை ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர்,

3 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 10 ரன்கள்.

முகேஷ்

ஒரு பௌன்சர் வீசினார் உனத்கட். தோனி இதற்குத் தான் காத்திருந்தேன் என்பது போல ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஒரு பௌண்டரியை தட்டிவிட்டார்.

ஆட்டத்தில் பரபரப்பு எகிறியது. இப்போது வெற்றிக்குத் தேவை 2 பந்துகளில் ஆறு ரன்கள்.

ஐந்தாவது பந்தில் அதிவேகமாய் ஓடி இரண்டு ரன்கள் அடித்தார் தோனி.

கடைசி பந்தில் வெற்றிக்குத் தேவை 4 ரன்கள். மூன்று ரன்களுக்கு கீழ் எடுத்தால் தோல்வி தான் எனும் நிலை. தோனி அபாரமாக ஒரு பௌண்டரி அடித்து அணியை வெற்றி பெறச்செய்தார்.

உச்சகட்ட பரபரப்பில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் ஒரு முறை தனது அணியை வெற்றிபெற வைத்தார் தோனி. அவர் 13 பந்துகளில் மூன்று பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 28 ரன்கள் அடித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் அதிக ஸ்ட்ரைக்ரேட் வைத்திருந்த நபரே தோனி தான். ட்விட்டர் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் என நேற்று இரவு முதல் எங்கும் தோனி புகழ்தான்.

சென்னை மும்பை ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றிய முகேஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியும் சந்திக்காத அவமானகாரமான ரெக்கார்டை பதிவு செய்தது. ஆம் இதுவரை எந்தவொரு அணியும் ஐபிஎல் தொடரின் முதல் ஏழு போட்டிகளையும் தோற்றது இல்லை.
கடைசி ஓவரின் கடைசி பந்தில் தோனியின் பௌண்டரியால், அந்த மோசமான ரெக்கார்டை தனதாக்கியது ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?