பஞ்சாப் அணிக்கும் கொல்கத்தாவுக்கும் நடந்த போட்டியில் ஆண்ட்ரே ரஸல் விளையாடிய ருத்ர தாண்டவத்தால் பஞ்சாப் பௌலர்கள் நேற்று இரவு கதி கலங்கினர்.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி, இந்த ஐபிஎல் சீசனில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் படும்பாட்டை தெரிந்து வைத்திருந்ததால் எதுக்குடா வம்பு என சேஸிங்கை தேர்ந்தெடுத்தது.
தனது முதல் போட்டியிலேயே பெங்களூரு அடித்த 205 ரன்களை அசால்ட்டாக சேஸிங் செய்த பஞ்சாப் அணி, மிகப்பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும் என இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
முதல் ஓவரிலேயே பஞ்சாப் கேப்டனை கெளம்பு கெளம்பு என பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் உமேஷ் யாதவ்.
அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய பனுகா ராஜபக்ச பேட்டில் பட்ட பந்துகள் ஒவ்வொன்றும் பௌண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறந்தன. 9 பந்துகளில் மூன்று பௌண்டரி மூன்று சிக்ஸர் என மாஸ் ஆட்டம் ஆடிய ராஜபக்ச 31 ரன்களில் வீழ்ந்தார். அதன்பிறகு பஞ்சாப் ஆடியது எல்லாம் சோக எபிசோட்.
கடைசி கட்டத்தில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் ரபாடா பேட்டிங்கில் களமிறங்கி பொளந்துகட்டி 25 ரன்கள் குவிக்க, பஞ்சாப் கொல்கத்தாவுக்கு வெற்றி இலக்காக 138 ரன்களை நிர்ணயித்தது. உமேஷ் யாதவ் 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உமேஷ் மாமாவுக்கு கோவம் வந்துருச்சு என மீம்ஸ்கள் வைரலாய் பறந்தன.
கொல்கத்தா அணி 51 ரன்களை எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது. சரி, லோ ஸ்கோர் மேட்சா இருக்கும்போல என குத்தவைத்து உட்கார்ந்தால், அந்த சீன்லாம் என் கிட்ட இல்லனு ரஸல் பஞ்சாபுக்கு மரண குத்து ஆடத் துவங்கினார்.
குறிப்பாக ஒடியன் ஸ்மித் வீசிய 12வது ஓவரில், இந்தா வாங்கிக்கோ என சிக்ஸர் சிக்ஸராய் பறக்கவிட்டு வாணவேடிக்கை காண்பித்தார்.
சக நாட்டு வீரர் என்றும் பாராமல் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து மிரளவைத்தார். 26 பந்தில் அரை சதம் அடித்த ரஸல், கடைசியில் தான் சந்தித்த மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
இந்த 137 ரன்களை எடுக்கத்தான் இம்புட்டு நேரம் உருட்டிக்கிட்டு கிடந்தியா என பஞ்சாப் அணியை கேட்கும் விதமாக 15வது ஓவர் முடிய மூன்று பந்துகள் மீதமிருக்கும் முன்னரே மேட்சை முடித்துவிட்டு டின்னருக்கு கிளம்பிவிட்டார் ரஸல்.
இந்த ஆட்டத்தில் 31 பந்துகளில் 8 சிக்ஸர்கள், இரு பௌண்டரிகள் உதவியுடன் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரஸல் தந்த டார்ச்சரால் படுதோல்வியடைந்த பஞ்சாப் புள்ளிபட்டியலில் ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ரன் ரேட் வேறு (-1-ஐ) தாண்டி கீழே சென்று விட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது.
உமேஷ் யாதவ் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார். உமேஷுக்கு பஞ்சாப் அணிக்கு பந்து வீசுவது என்றால் அவ்வளவு இஷ்டம் போல. இதுவரை ஐபிஎல் சீசனில் ஆறு முறை பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றுள்ளார்.
இதுவரை வேறு எந்த ஒரு வீரரும் எந்தவொரு குறிப்பிட்ட அணிக்கு எதிராகவும் ஆறு முறை மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்றதே இல்லை என்பது ஐபிஎல் வரலாறு. அதை நேற்று தகர்த்தெறிந்தார் உமேஷ் யாதவ்.