'நீட்' தேர்வால் தமிழகத்தில் முன்பை விட தற்போது அதிக மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருகின்றனர் என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் செந்தில் நீட தேர்வு மிக அவசியம் என கூறி உள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போது அவர் இவ்வாறாக கூறி உள்ளார்.
மதுரை மாநகராட்சி புதுார், நரிமேடு உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகர் செந்தில் பேசினார்.
அவர் பேசியதாவது: மத்தியில் பிரதமர்மோடி தலைமையில் பா.ஜ., அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம்மை அச்சுறுத்திய கொரோனாவை ஒழிக்க பிரதமர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமங்களிலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற பா.ஜ., உள்ளாட்சிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
எதிர்கட்சியினர் அரசியலுக்காக 'நீட்' தேர்வு வேண்டாம் என்கின்றனர். அரசு உள் இடஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் அதிகம் சேருவதிலிருந்து 'நீட்' தேர்வு அவசியம் என அறியலாம் என்றார்.