சென்னையில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ஆளுநர் ஏன் நீட் விலக்கு மசோதாவை நிராகரித்தார் என்ற ஆளுநரின் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனப் பேசியிருக்கிறார். அப்போது கடந்த 1ம் தேதி ஆளுநர் சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து, அரசு தரப்பில் ஏன் விளக்கம் அளிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது என்று அவர் விமர்சித்தார். மேலும் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது. ஆளுநர் கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு கூட்டம் நடத்தினால் முதல் கட்சியாக பாஜக பங்கேற்கும் என்று தெரிவித்தார்.
ராகுல்காந்தி
அடுத்த தேர்தலில் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல், அதனால்தான் நாடாளுமன்றத்தில் தமிழகம் பற்றிப் பேசியுள்ளார். ராகுல் தமிழகம் குறித்தும், பாஜக குறித்துப் பேசியதை வரவேற்கிறோம், ராகுல் ஜாதகப்படி அவர் சொன்னதற்கெல்லாம் எதிராக நடக்கும். புதுச்சேரியில் நுழைந்து விட்டோம், எனவே தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கும்.
நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் இறுதியாகப் பேசும்போது ராகுல் பேச்சுக்குப் பதில் கொடுத்துவிடுவார். 12 முதல்வருக்குத் தமிழக முதலமைச்சர் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து கடிதம் எழுதினார், யாராவது ஒருவர் மதித்துப் பதிலளித்தார்களா? அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 வேண்டும் என்று முதன் முதலில் சொன்னது பாஜக தலைவர் ஜே.பி.நட்டாதான்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.