நன்றாக படித்த சின்னதுரை என்ற மாணவரை ஆசிரியர்கள் பாராட்டியிருக்கின்றனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக உள்ளூரைச் சேர்ந்த சில வேறு சாதி மாணவர்கள், சின்னதுரையின் மீது வன்மம் கொண்டு அரிவாளால் வெட்டியிருக்கின்றனர்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
பள்ளி பருவத்திலேயே சாதி வெறியா? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி- அம்பிகாபதி தம்பதிக்கு சின்னதுரை(17) என்ற மகனும், சந்திரா செல்வி (14) என்ற மகளும் உள்ளனர். அம்பிகாபதியை விட்டுவிட்டு அவரது கணவர் முனியாண்டி சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.
தாத்தா கிருஷ்ணன் வீட்டில் சின்னதுரையும் அவரது சகோதரி, தாய் அம்பிகாபதி வசித்து வருகின்றனர். இவர் சத்துணவுப் பணியாளராக பணியாற்றி வருகிறார். சின்னதுரை வள்ளியூரிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
படிப்பில் முன்னுதாரணமாக விளங்கிய சின்னத்துரையை அவரது ஆசிரியர்கள் புகழ்ந்து பேசியிருக்கின்றனர். ‘சின்னதுரையைப்போல அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும்’ என்றும் ஆசியர்கள் கூறியிருகின்றனர். இது சக மாணவர்கள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திருக்கிறது.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சின்னதுரை மீது ஆத்திரத்தில் இருந்த உள்ளூரைச் சேர்ந்த சில வேறு சாதி மாணவர்கள், சின்னதுரையின் சைக்கிள் டயரில் காற்றைப் பிடுங்கி விடுவது, அவரது பையை எடுத்து மறைத்துவைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
தன்னை உள்ளூர் மாணவர்கள் ராக்கிங் செய்வதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தவர் சில தினங்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார்.
நன்றாகப் படிக்கும் மாணவரான சின்னதுரை தொடர்ச்சியாகப் பள்ளிக்கு வராததால் ஆசிரியர்கள் சிலர் சின்னதுரையின் தாயிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். தாயிடம் நடந்த விவரங்களைச் சொல்லி அழுதிருக்கிறார் சின்னதுரை. அதனால் அவரை அழைத்துக்கொண்டு தாய் அம்பிகாபதி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் விவரத்தைச் சொல்லியிருக்கிறார். அதனால், ஆசிரியர்கள் சக மாணவர்கள் சிலரை அழைத்துக் கண்டித்திருக்கின்றனர்.
ஆசிரியர்கள் கண்டித்ததால், சின்னதுரை மீது கோபமடைந்த அந்த மாணவர்கள் அரிவாளுடன் கடந்த 9ம் தேதி இரவு 10:30 மணிக்கு நாங்குநேரியிலுள்ள மாணவனின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். வீட்டில் இருந்த சின்னதுரையை கொடூரமாக அரிவாளால் வெட்டியிருக்கின்றனர். அதைத் தடுத்த அவரின் சகோதரி சந்திரா செல்விக்கும் வெட்டு விழுந்திருக்கிறது.
அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் ஓடிவந்ததால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தும் உடனடியாக யாரும் வராததால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது மன அழுத்தத்திலிருந்த சின்னதுரையின் தாத்தா கிருஷ்ணன் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே, வெட்டுக்காயமடைந்த சின்னதுரை, அவரின் சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த நாங்குநேரி போலீஸார், ஆறு சிறுவர்களைக் கைதுசெய்திருக்கின்றனர். அதில் நான்கு சிறுவர்கள் சின்னதுரையுடன் படிப்பவர்கள். இருவர் அதே பள்ளியில் படித்துவிட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்ட முன்னாள் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிறுவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலுக்கு பின்னால் இப்படி சாதி வெறி இருப்பது அடுத்த தலைமுறை குறித்து யோசிக்க வைக்கிறது!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust