மனிதர்களுக்கு ஒரு பொருள் அல்லது ஒரு விஷயம் கிடைக்கும் வரை அதன் மீதான நாட்டம் மிக அதிகமாக இருக்கும். அப்பொருள் அல்லது விஷயம் கிடைத்து, ஆண்டு, அனுபவித்த பின் அதன் மீதான ஈர்ப்பு கணிசமாகக் குறைந்துவிடும் அல்லது ஆசை, அவர்களை அடுத்த விஷயத்தை நோக்கி நகர்த்திவிடும்.
அப்படி கார்ப்பரேட் வாழ்க்கை, காசு பணம் எல்லாம் போரடித்து வாழ்கையைத் தேடிய ஒரு இஸ்ரேலிய தம்பதி தான், அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத தமிழ்நாட்டில் வந்து ஒரு பெரு நிலப்பரப்பையே இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியாக மாற்றி இருக்கிறார்கள்.
இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் நகரத்தில் பிறந்த அவிராம் ரோசின் மருத்துவ சாதனங்களைச் தயாரிக்கும் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்தார். காசு, பணம், வசதி, குடும்பம், குழந்தை குட்டி... என எதற்கும் பஞ்சமில்லை.
பல தொழிலதிபர்களின் வாழ்கையில் ஏற்படும் சுணக்கம் போல, அவிராம் ரோசினும் தன் பரபரப்பான வணிக வாழ்கையில் இருந்து வெளியேறி வாழ விரும்பியுள்ளார். 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வாழ்கையைத் தேடத் தொடங்கினார்.
வாழ்கையில் வேறு ஏதாவது வித்தியாசமாகவும், தொழிலாகவோ, பணம் சம்பாதிக்கும் எண்ணத்திலோ இல்லாமல் சேவையாக எதையாவது செய்ய விரும்பியுள்ளார். ஆனால் அதை எப்படி செய்வது, என்ன செய்வது, எங்கு செய்வது என அவருக்குத் தெரியாமல் அதற்கான விடையைத் தேடி அலைந்துள்ளார்.
அவிராம் ரோசின் (Aviram Rozin) மற்றும் அவரது மனைவி யோரிட் ரோசின் (Yorit Rozin) தம்பதி 1998ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரொவில் (Auroville) நகரத்துக்கு வந்த போதே, அதை அவர்களின் சொந்த ஊர் போலவே கருதியுள்ளார்கள்.
"நாங்கள் தமிழ்நாட்டில் வந்திறங்கியதிலிருந்து, இந்நாட்டுக்கும் எங்கள் நாட்டுக்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் எப்போதும் உணரவில்லை. நாங்கள் வீட்டுக்கு வந்திருப்பதைப் போலவே உணர்ந்தோம். நாங்கள் இங்கிருந்த மக்கள் முதல் எல்லோரையும், எல்லாவற்றையும் நேசித்தோம். எனவே இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே இந்தியாவுக்குக் குடியேற தீர்மானித்தோம்" என்கிறார் அவிராம் ரோசின். இவர்கள் இப்போது இந்தியாவையே தங்களது வீடு என்கிறார்கள்.
2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரொவில் நகரத்திலேயே சுமார் 70 ஏக்கர் வறண்ட நிலபரப்பை காடுகளாக மாற்றும் முயற்சியில் களம் இறங்கினர். அதே நிலபரப்பில் நீரை சேமித்து வைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தீர்மானித்தனர். இன்று தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் பசுமை போர்த்திய பகுதியாக உருவெடுத்துள்ளது அந்த 70 ஏக்கர் நிலபரப்பு. அதை சாதனா ஃபாரஸ்ட் என்று அழைக்கிறார்கள்.
"நாங்கள் எங்கள் விருப்பப்படி வாழத் தீர்மானித்தோம். இதை ஒரு பெரிய விஷயமாகக் கொண்டு வரவோ அல்லது ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதோ எங்கள் நோக்கமில்லை. எல்லாம் தானாக உருவெடுத்தது. நாங்கள் எங்கள் வாழ்கையை அமைதியாக வாழ்வதோடு சில மரக் கன்றுகளை நடத் தொடங்கினோம். சில நாட்களிலேயே எங்களுக்கு சில தொண்டர்கள் கிடைத்தார்கள். அடுத்த சில நாட்களுக்குள்ளேயே இந்த எண்ணிக்கை அதிகரித்தது. எங்களோடு எப்போதும் 20 தொண்டர்கள் வசிக்கத் தொடங்கினர்."
வரும் விருந்தாளிகளுக்கு சைவ உணவு கொடுப்பது, மது பானங்கள் உட்கொள்ளக் கூடாது, பீடி சிகரெட் போன்றவைகளை புகைக்கக் கூடாது என்பது மட்டுமே ஒரே விதி.
இது பலரையும் ஈர்க்காது, குறிப்பாக இளைஞர்களுக்கு இது பிடிக்காது என்று அவிராம் ரோசின் கருதினாராம். ஆனால் எதார்த்தத்தில் எல்லாம் தலைகீழாக நடந்ததாம். மக்களும், இளைஞர்களும் பெரிய அளவில் வந்து சாதனா காடுகளில் கணிசமாகப் பங்காற்றினார்களாம்.
"எங்கள் சாதனா காடுகள், இந்திய ரயில் நிலையம் போன்றது. பலரும் அவ்வப்போது வந்து போவார்கள். எங்கள் காடுகளுக்குள் வரும் அனைவருக்கும் நல்ல சைவ உணவு வழங்குகிறோம், அதோடு இக்காடுகளைச் சுற்றிக்காட்டுகிறோம்.
இந்த காடுகள் தொடர்பான பணிகளைத் தொடங்கும் போது, இயற்கை இந்த சூழலுக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்ததைக் கவனித்ததாகக் கூறுகிறார் அவிராம் ரோசின்.
"நாங்கள் தண்ணீர் சேமிப்பதில் சாதனா காடுகளின் பணிகளைத் தொடங்கினோம். நீர் சேமிக்கப்பட்டாலே, மரக்கன்றுகளைக் கூட நாம் நட வேண்டும். தண்ணீர் மண்ணை வளப்படுத்தும். தாவரங்கள் தானாக வளரத் தொடங்கும். தண்ணீர் பறவைகள் மற்றும் விலங்குகளை ஈர்க்கும், அவற்றின் எச்சங்களிலிருந்து செடி, கொடிகளுக்கான விதைகள் வெளியேறி மரமாக வளரும். எனவே இயற்கை தனக்கான இனங்களை தானே தேர்வு செய்கிறது" என்கிறார் அவிராம்.
இன்று பல வகையான செடி, கொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள் சாதனா காடுகளில் வாழ்ந்து வருகின்றன. இதில் மயில்கள், காட்டுப் பன்றிகள், முயல்கள், சிவிட் பூனைகள், நரிகளும் அடக்கம்.
ஓர் இடத்தில் மனிதர்கள் அதிகம் வசித்து வந்தால் அங்கு விலங்குகளோ, விலங்குகள் அதிகம் வசிக்கும் இடத்தில் மனிதர்களோ வசிப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத விஷயம். ஆனால் சாதனா காடுகளில் அது தொடர்ந்து சாத்தியப்படுத்தப்பட்டு வருகிறது.
சாதனா காடுகளில் மனிதர்கள் சென்று வரும் பாதை எப்போதும் மாறுவது இல்லையாம். அதே போல விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் பாதைகளில் எப்போதும் மனிதர்கள் எந்த ஒரு அபாயத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் எப்போதும் அடர்ந்த சாதனா காடுகளில் நடமாடுவதில்லை. இதனால் மனிதர்கள் & விலங்குகள் தொடர்ந்து ஒரே இடத்தில் தொந்தரவு இல்லாமல் வசிப்பது சாத்தியமாகியுள்ளது.
இந்தியாவில் சாதனா காடுகள் வெற்றிபெற்ற பின், அவிராம் ரோசின் இதே சாதனா காடுகள் திட்டத்தை ஹைதி (Haiti) மற்றும் கென்யா (Kenya) நாட்டுக்கும் எடுத்துச் சென்றுள்ளார். தன் காடுகள் மற்றும் வாழ்க்கை முறை சைவத்தின் அடிப்படையாக, தான் கருதும் பரிவை அடிப்படையாகக் கொண்ட செயல்.
"பரிவு செயல்களை நன்மையாக்க பயன்படுத்துங்கள் என்னும் செய்தியை தான் நாங்கள் உலகுக்கு சொல்ல விரும்புகிறோம். நம்மால் பரிவு என்கிற கண்ணாடியை அணிந்து கொண்டு நம் வாழ்க்கை தொடர்பான தீர்மானங்களை எடுப்பது, உணவு உண்பது, வீடு கட்டுவது, மற்றவர்களோடு உரையாடுவது போன்ற செயல்களை செய்யமுடிந்தால் சிறப்பு. இதை வெறும் வார்த்தை மட்டுமின்றி, செயலில் கொண்டு வர வேண்டும். நீங்கள் உணவு சாப்பிடும் போது, முழு ஈடுபாட்டோடு சாப்பிடுங்கள். வீடு கட்டும் போது முழு உணர்வோடு பரிவோடு மேற்கொள்ளுங்கள். ஒருவரை பணியில் அமர்த்தும் போது, அவரை நல்லபடியாக நடத்துங்கள் என்கிறார் அவிராம் ரோசின்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு முன் சாதனா காடுகளில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட, பல நாடுகளைச் சேர்ந்த தொண்டர்கள் பணியாற்றினர். தற்போது கொரோனா கெடுபிடிகளில் இருந்து உலகம் முழுமையாக வெளி வந்து கொண்டிருக்கும் போது, சாதனா காடுகள், வீகன் ஃபாரஸ்ட் ஃபெஸ்டிவல் மூலம் பரிவை உலகம் முழுக்க பரப்ப விரும்புகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். எந்த வித கட்டணமும் இல்லை என்கிறது சில பத்திரிகை செய்திகள். ஆயுதங்கள் துருபிடிக்கட்டும், அன்பு எனும் பூ அகிலமெங்கும் மலரட்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust