கீழடி ஆய்வு: குதிரை எலும்புகள் ஏன் கவனிக்க வேண்டியவை? - சிந்துவெளிக்கு சவால்விடும் மதுரை தமிழக தொல்லியல் துறை
தமிழ்நாடு

கீழடி அவிழும் மர்மம்: குதிரை எலும்புகள் ஏன் கவனிக்க வேண்டியவை? - சவால்விடும் மதுரை

கீழடியில் என்ன மாதிரியான கலாச்சாரம் நிலவியது? அது எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது? கீழடியில் வாழ்ந்த மனிதர்கள் விவசாயம் செய்தார்களா? ஆம் என்றால் என்ன பயிரிட்டார்கள்? விலங்குகளை வளர்த்தார்களா இல்லையா? ஆம் என்றால் எந்த விலங்கினங்களை எல்லாம் வளர்த்தார்கள்? என்கிற பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது.

NewsSense Editorial Team

மதுரையில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் உள்ள கீழடி கிராமத்தில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் இரண்டு அகழாய்வுகள் தொடர்பாக, அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சமர்பித்திருக்கும் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தை அடையாளம் கண்டு, கடந்த 2014ஆம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் தன் ஆய்வுகளை ஒரு தென்னந்தோப்பில் தொடங்கினார். அப்போது, இந்தியாவின் பல மாநிலங்களில் நடக்கும் அகழாய்வுப் பணிகளில் இதுவும் ஒன்றென பலரும் கருதினர். சொல்லப் போனால் கீழடி என்கிற பெயர் கூட அப்போது எவருக்கும் அதிகம் தெரிந்திருக்கவில்லை.

ஒருகட்டத்தில் கீழடியில் இருந்து தமிழர் நாகரீகம் எத்தனை பழமை வாய்ந்தது? இந்தியாவில் பல சமூகங்கள் நகர நாகரீகத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்பே, தமிழர்கள் நகர நாகரீகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் போன்ற விஷயங்கள் வெளியான போது ஒட்டுமொத்த உலகமும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் திரும்பிப் பார்த்தது. பல்வேறு அரசியல் பிரச்சனைகளைத் தாண்டி, தமிழ்நாடு அரசு 2017 - 18 காலகட்டத்தில் கீழடியில் தன் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்தது.

அப்படி என்ன தான் கிடைத்தது?

தமிழ்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளில் சுட்ட செங்கற்கல்களால் ஆன கட்டடங்கள் முதன் முதலில் வெளிப்பட்டன. இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை, சிந்து சமவெளி நாகரீகம் தான் முதலாம் நகர நாகரீகம். அதனைத் தொடர்ந்து சுமார் கிமு 6ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இரண்டாவது நகர நாகரீகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரீகம்

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி…” என பெருமை பேசிக் கொண்டிருந்த தமிழ் சமூகத்தில் நகர நாகரீகம் இருந்ததற்குப் போதிய சான்றுகள் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக கீழடியில் அதே கிமு 6ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்தன. இது தமிழ்நாட்டில் நகர நாகரீகம் இருந்ததற்கான சான்றுகளாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சிந்துச் சமவெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆர். பாலகிருஷ்ணன் போன்ற ஆய்வறிஞர்கள், சிந்துசமவெளிக்கும் கீழடிக்கும் இடையில் தொடர்பு இருக்கக்கூடுமென்றே கருதுகிறார்கள் என பிபிசி தமிழ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகையால் தான், தமிழ்நாட்டில் உள்ள மற்ற எந்த தொல்லியல் தளத்தை விடவும், கீழடி, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கிமு 6ஆம் நூற்றாண்டா? ஆதாரம் என்ன?

கீழடியில் கிடைத்த சில பொருட்களை, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பி, Accelerated mass spectrometry முறையில் சோதனைகளை மேற்கொண்ட போது, அந்தப் பொருட்கள், கிமு 3ஆம் நூற்றாண்டுக்கும் கிமு 6ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டது.

கொடுமணல் போன்ற மற்ற தமிழ்நாட்டுத் தொல்லியல் தளங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து, தமிழ் பிராமி எழுத்தின் காலம் கிமு 3ஆம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் ஒரு பானை ஓட்டில் கிடைத்திருக்கும் எழுத்துகளை வைத்து தமிழ் பிராமி கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருக்கக்கூடும் என்றும் தொல்லியல் துறை கருதுகிறது.

ஆகையால் தான் “இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் நிறுவுவதே தமிழ்நாடு அரசின் கடமை" என முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு பேசினார். தமிழர்கள் கீழடியை தங்கள் இனத்தின் வரலாற்றுப் பேழையாகப் பார்ப்பதற்கும் இதுவே காரணம்.

ஆய்வறிக்கை சொல்வதென்ன?

கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த ஆய்வறிக்கை கடந்த பல ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களால் சமர்பிக்கப்படவில்லை. தற்போது பல தடைகள் & சவால்களைத் தாண்டி, இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கை சமீபத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணண் அவர்கள் சமர்ப்பித்தார்.

கீழடியில் என்ன மாதிரியான கலாச்சாரம் நிலவியது? அது எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது? கீழடியில் வாழ்ந்த மனிதர்கள் விவசாயம் செய்தார்களா? ஆம் என்றால் என்ன பயிரிட்டார்கள்? விலங்குகளை வளர்த்தார்களா இல்லையா? ஆம் என்றால் எந்த விலங்கினங்களை எல்லாம் வளர்த்தார்கள்? என்கிற பல கேள்விகளுக்கு சில ஆரம்ப கட்ட விடையளிப்பதாக அமைந்திருக்கிறது அவ்வறிக்கை.

அமர்நாத் ராமகிருஷ்ணண்

கீழடி காலம்:

இந்திய தொல்லியல் துறையின் இரு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வைத்து, கீழடியில் 3 பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்கலாம் என்கிறது ஆய்வறிக்கை.

கிமு 8ஆம் நூற்றாண்டு - கிமு 5ஆம் நூற்றாண்டு

மண் அடுக்கில் சுமார் 2 மீட்டர் ஆழத்தில் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில், இந்த காலகட்டத்தில் கீழடியில் மக்கள் வாழத் தொடங்கி இருக்க வேண்டும். அப்போது எளிதில் மட்கிப் போகக் கூடிய மரம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரும்பு போன்ற உலோகப் பொருட்களும், இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கூர்மையான கற்கருவிகள், சிவப்பு - கருப்பு மண்பாண்டங்கள், கிறுக்கல்களைக் கொண்ட பானை ஓடுகளும் இந்த காலத்தைச் சேர்ந்த மண் அடுக்கில் கிடைத்தன. சுருக்கமாக கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கி இருக்கலாம் என்றாலும், இது தொடர்பாக மேற்கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிமு 5ஆம் நூற்றாண்டு - கிமு 1ஆம் நூற்றாண்டு

கீழடிப் பகுதி, ஒரு முதிர்ச்சியடைந்த வாழ்விடமாக இருந்த காலகட்டமிது எனலாம். சிறியதும் பெரியதுமாக பல செங்கல் கட்டுமானங்கள் கட்டப்பட்டன. சிக்கலான செங்கற்கட்டுமானங்கள், இரட்டைச் சுவர் கொண்ட உலைகள் இந்த காலத்தைச் சேர்ந்தவை.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில், வரலாற்று துவக்க காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. காவிரிப்பட்டினம், கொற்கை போன்ற சில இடங்களைத் தவிர, இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. ஆகவே, கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இரண்டு அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டடத் தொகுதிகள், ஒரு மிகக் பெரிய கட்டடத் தொகுதியாக இருக்கலாமென கருதப்படுகிறது. மேற்கொண்டு விரிவாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியாததால், இந்தக் கட்டடத் தொகுதிகள் எத்தனை பெரியவை, விரிவானவை என அறிய முடியவில்லை என்கிறார் அமர்நாத்.

தானியங்களை சேகரித்து வைக்க பயன்படுத்தப்படும் பண்ட பாத்திரங்கள், சுடு மண் குழாய்கள், சுடு மண் உறை கிணறுகள் என பல முக்கிய விஷயங்கள் இந்த காலத்தைச் சேர்ந்த அடுக்கில் கிடைத்தன. குறிப்பாக கிறுக்கல்களைக் கொண்ட பானை ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட பானை ஓடுகள் இந்த காலத்தைச் சேர்ந்த மண் அடுக்கில் கிடைத்தன.

ஆகையால், இந்த காலகட்டம், கீழடி நகரப் பண்புகளுடனான ஒரு முக்கிய இடமாக இருந்திருக்கலாம். குறிப்பாக மதுரைக்கு மிக அருகில் இருப்பதையும் தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் அமர்நாத். மேலும் கீழடியில் கிடைத்த விலை மதிப்புமிக்க கற்கள், தந்தத்தாலான கலைப் பொருட்கள், கீழடிக்கும் வெளி உலகத்துக்கும் வணிக ரீதியில் தொடர்பு இருந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

கிமு 1ஆம் நூற்றாண்டின் கடைசி காலகட்டம் - கிபி 10ஆம் நூற்றாண்டு வரை

கீழடியில் கிடைத்த நாணயங்கள் முதல் ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள் வரையானவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த காலகட்டம் கிபி 10ஆம் நூற்ராண்டு வரை கூட போகலாம் என்று கருதப்படுகிறது. அதன் பிறகு மக்கள் கீழடியில் வாழ்வது குறையத் தொடங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுருக்கமாக கீழடி, கிமு 8ஆம் நூற்றாண்டு முதல் கிபி 10ஆம் நூற்றாண்டு வரை (சுமார் 18 நூற்றாண்டுகள்) நீண்டது என்பதை அமர்நாத் ராமகிருஷ்ணண் அவர்களின் ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.

விவசாயம் செய்தார்களா கீழடி மக்கள்?

தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கீழடி பகுதி, ஒரு காலத்தில் வைகை நதி ஓடும் வழித்தடமாக இருந்திருக்கலாம், காலப்போக்கில், வைகை நதி தன் பாதையை மாற்றிக் கொண்ட பிறகு கீழடியில் இருக்கும் வளமிக்க வண்டல் மண் உள்ள நிலம், விவசாயம் நிலமாக மாறியது என்கிறது அறிக்கை.

உயிரினங்களின் எச்சங்களில் கணிசமான அளவுக்கு நெற்பயிர்களும், உமியும் கிடைத்திருக்கின்றனவாம். ஆக, கீழடியில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது. நல்ல நெல் விளைச்சல் காரணமாக உள்நாட்டு - வெளிநாட்டு வணிகம் தொடங்கியதாகவும், மெல்ல கீழடி நகர்புறமாக உருவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

என்ன விலங்கினங்கள் வாழ்ந்தன?

கீழடியில் கிடைத்த விலங்கின எச்சங்களை ஆராய்ந்த போது, அப்பகுதியில் காளை மாடு, பசு மாடு, எருமை, ஆடு, பன்றி, நாய், Nilgai & Antelope போன்ற மான் வகைகள் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கீழடிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் எருமை மாடு, ஆடு போன்றவைகளை உணவாக உட்கொண்டார்கள் என்றும், பன்றி இறைச்சி குறைவாகவே உட்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது போக, விலங்குகளின் தோல், கொம்பு போன்ற பொருட்களுக்காக காட்டெருமை போன்ற விலங்குகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன. நாய்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவோ, செல்லப் பிராணிகளாகவோ வளர்க்கப்பட்டு இருக்கலாம் என்கிறது அவ்வறிக்கை.

கீழடி அகழாய்வு

குதிரையும் தமிழர்களும்

ஒட்டுமொத்த தென் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில், குதிரைகள் வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் மிகக் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. எனவே, கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குதிரைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கலாம் என்கிறது அவ்வறிக்கை.

இத்தனை விஷயங்கள் கிடைத்திருக்கும் போதும், மீன்கள் தொடர்பான எலும்புக் கூடுகள் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால், நன்னீர் சங்குகள் கிடைத்திருக்கின்றன.

இரண்டு அகழாய்வுகளையும் சேர்த்து மொத்தம் 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும், குறிப்பாக 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன.

மேற்படி ஆய்வுகள் தேவை

மதுரை மாநகரத்தை அடுத்துள்ள வைகை நதிக்கரையில் அமைந்த ஒரு தமிழ்நாட்டு நகர நாகரீகத்தின் ஆரம்பக்கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் ஆய்வு முடிவுகள் வெளிக் கொண்டு வந்திருக்கின்றன. கீழடி குறித்த இன்னும் ஆழமான விவரங்களுக்கு அந்தத் தொல்லியல் தளத்தில் இன்னும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் அமர்நாத்.

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் நகர வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பல்வேறு சங்க காலத்துப் பாடல்கள் விரிவாக உரைக்கின்றன. கீழடியில் கிடைத்திருக்கும் சில சான்றுகள், சங்க காலத்துப் பாடல்களுக்கான தொல்லியல் ஆதாரங்களாகக் சுட்டிக்காட்டலாம். தமிழ்நாட்டில் சங்க காலம் எப்படி இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதாக பெருங்கற்காலப் பண்பாட்டைக் கூறலாம். சங்க கால நகர நாகரீகம் எப்படி இருந்தது என்பதை மேலும் அறிய, கீழடியில் இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும், தமிழர் பெருமையை முழுமையாக வெளிக்கொணறும் என நம்புவோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?