ஸ்டாலின் Twitter
தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின்: “உங்கள் அரசியல் இங்கு செல்லாது” - வானதிக்கு பதில்

Antony Ajay R

அயோத்தி மண்டபம் தொடர்பாக பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று சட்டமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திலே இருக்கிறது. இன்று அதிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இருந்தாலும், நம்முடைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார்கள். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை.

இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். சாமானிய மக்கள் பாதிக்கிற வகையில், இன்றைக்கு பெட்ரோல் விலை, டீசல் விலை, அதேபோன்று, கேஸ் சிலிண்டர் விலை... இவையெல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நீங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

உயர் நீதிமன்றம்

அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாகச் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களிடத்திலே, குறிப்பாக, பிரதமரிடம் நான் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன். எனவே, அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்து, அதைப் பெறுவதற்கான முயற்சியிலே நீங்கள் ஈடுபட வேண்டும். எனவே, தேவையில்லாமல், அயோத்தி மண்டப விவகாரத்தில் அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டுமென்று நினைத்தார்களேயானால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

அயோத்தி மண்டப விவகாரமும் நீதிமன்ற தீர்ப்பும்

1954ம் ஆண்டு மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டப்பட்ட அயோத்தி மண்டபம் நிர்வாக முறைகேடுகள் காரணமாக 2013ம் ஆண்டு இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் மண்டபத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக மண்டபத்திற்கு வந்தனர்.

அப்போது பா.ஜ.கவினர் அங்குத் திரண்டு வந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மண்டபத்தின் கதவுகளைப் பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட இந்துமுன்னணி மற்றும் பா.ஜ.கவை சேர்ந்த பலர், மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருவதைக் கண்டித்து நேற்று போராட்டம் நடத்தினர்.

இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், “அந்த மண்டபம் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானது. வேறு எந்த தனிப்பட்ட அமைப்புகளும் அதில் தலையிட முடியாது" எனக் கூறி உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?