கொலை

 

Twitter

தமிழ்நாடு

Morning News Wrap : மகளை எரித்துக்கொன்ற தாய், எஸ்.கே-க்கு ஆப்பு - இன்றைய முக்கிய செய்திகள்

இன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன

Antony Ajay R

திருக்காட்டுப்பள்ளியில் 10 வயது சிறுமியை எரித்துக் கொலை செய்த தாய், 3-வது கணவருடன் கைது

சென்னை திருவொற்றியூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 41). இவர், இந்தியன் ஆயில் கம்பெனியில் தற்காலிகமாக டேங்கர் லாரி ஓட்டி வருகிறார். இவருக்கும், ஜெயலட்சுமி (40) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே பால்வண்ணன் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்குப் பிறந்த மகள், தூத்துக்குடியில் நர்சிங் படித்து வருகிறாள். பின்னர் பால்வண்ணன் பிரிந்து சென்றதால் அவருடைய 3-வது தம்பி துரைராஜ் என்பவரை ஜெயலட்சுமி 2-வதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு பவித்ரா (10) என்ற‌ மகள் இருக்கிறாள். அவரும் பிரிந்து சென்றதால் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த பத்மநாபனை ஜெயலட்சுமி 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

வேறு ஒருவருடன் ஜெயலட்சுமிக்குக்கு தொடர்பு உள்ளதாக அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார் பத்மநாபன். அத்துடன் அடிக்கடி 2-வது கணவருக்குப் பிறந்த மகள் பவித்ராவை, அவளது பாட்டி வீட்டில் விட்டு விடுமாறும் வற்புறுத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் பத்மநாபன் தகராறில் ஈடுபட்டார். அப்போது பத்மநாபன், “உனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை என்றால் உன் மகள் பவித்ரா மீது சத்யம் செய்” என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி, மகள் பவித்ரா இருப்பதால் தானே இந்த பிரச்சனை என்று கூறி பவித்ரா உடலில் மண்எண்ணெயை ஊற்றி உயிருடன் தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் பவித்ரா அலறி துடித்தாள். உடனே கணவன்-மனைவி இருவரும் பவித்ரா உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதற்கிடையில் பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி தலைமையிலான போலீசார் பவித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தாள்

முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பவித்ராவிடம் மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் மரண வாக்குமூலம் பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து, பெற்ற மகளை உயிருடன் எரித்துக்கொன்றதாக தாய் ஜெயலட்சுமி மற்றும் அவருடைய 3-வது கணவர் பத்மநாபன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

போர் விமானம்

மாயமான ஜப்பான் விமானம்

தென் கிழக்காசிய நாடான ஜப்பானில் மத்திய இஷிகாவா பிராந்தியத்தில் கொமட்சு விமான படை தளம் உள்ளது. இங்கிருந்து புறப்பட்ட 'எப் 15' போர் விமானம் ஒன்று சிறிது நேரத்தில் திடீரென மாயமாக மறைந்தது. விமான தளத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சென்ற விமானம் அதன் பின், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தின் 'ரேடார்' சாதனத்தில் இருந்து காணாமல் போனது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து விமான படை செய்தி தொடர்பாளர் கூறும்போது, 'மாயமான விமானத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விபரம் தெரியவில்லை' என்றார். காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 2019ல் இது போல மாயமான 'எப்-35ஏ' போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

மாணவியின் பள்ளி

தஞ்சாவூர் மாணவி வழக்கு - சிபிஐக்கு மாற்றம்

தஞ்சை மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக நேற்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுவரை மாணவி வழக்கு விசாரணையில் மூன்று வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் மாணவி மதமாற்றம் குறித்துப் பேசியுள்ளார். ஆனாலும் காவல் துறையும், ஆளும் கட்சியினரும் மதமாற்றம் என்கிற குற்றச்சாட்டை மறுத்து வந்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி (முதலில் சிபிசிஐடி விசாரணை கேட்டிருந்தனர்) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

வழக்கு விசாரணையில் இறுதியாக, ``மேற்கண்ட விஷயங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மதமாற்றம் என்பது எளிதில் புறக்கணிக்கக்கூடிய ஒரு குற்றச்சாட்டு இல்லைதான். அது பொய்யாகவும் இருக்கலாம்; உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அதுகுறித்து விசாரித்து நாம் உண்மையை அறியவேண்டும். நிச்சயம் சி.பி.ஐ உண்மையை வெளிக்கொண்டுவரும் என நம்புகிறேன்” எனக் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள சகாயமேரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையையும் மேற்கொண்டு தொடங்கிட, மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

ஆவேசமாக வெளியேறிய ஜோதிமணி

கரூர் அறிவாலயத்தில் இருந்து அவேசமாக வெளியேறிய ஜோதிமணி - பின்னணி என்ன?

கரூர் தி.மு.க கட்சி அலுவலகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, தன்னை தி.மு.க-வினர் ஒருமையில் பேசி வெளியேற்றியதாக, காங்கிரஸ் கரூர் எம்.பி ஜோதிமணி அதிரடியாகக் குற்றம்சாட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் தி.மு.க மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டணிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்டத் தலைவர் சின்னசாமி, ஒரு பட்டியலைத் தயார் செய்து வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தனது ஆதரவாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி தனிப் பட்டியல் கொடுத்தாராம்.

ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, 50 சதவிகிதப் பட்டியலுக்கு மட்டும் ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஒன்பது வார்டுகளை ஜோதிமணி கேட்டதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து, 'நாங்கள் கொடுத்த பட்டியல்படி வாய்ப்பு வழங்க வேண்டும்' என கூறி ஜோதிமணி வலியுறுத்தியதால், அங்கிருந்த தி.மு.க-வினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பேச்சுவார்த்தையின் போது, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், எம்.பி ஜோதிமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் கோபமான தி.மு.க-வினர், ஜோதிமணியை வெளியேறும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க அலுவலகத்தைவிட்டு திடீரென வெளியேறினர்.

அப்போது, தி.மு.க-வினர் பேச்சுவார்த்தையின்போது ஒருமையில் பேசி, தன்னை வெளியே செல்லுமாறு கூறியதாகக் குற்றம்சாட்டிய ஜோதிமணி, ஆவேசமாக வெளியே வந்தார். அவரை காங்கிரஸ் கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி, கையைப் பிடித்து அழைத்துப் போய் காரில் ஏற்றி அனுப்பிவைத்தார். அப்போது ஜோதிமணி, தி.மு.க-வினரைப் பார்த்து, `உங்கள் வீட்டுக்கு நான் விருந்துக்கு வரவில்லை. ஒருமையில் எனக்கும் திருப்பி பேசத் தெரியும்' என ஆவேசமாகப் பேசியபடி வெளியேறினார்" என்றார்கள்.

தி.மு.க பேச்சுவார்த்தையின்போது எம்.பி ஜோதிமணி வெளியேறிய சம்பவம் இப்படிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ``மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது சுமுகமாகப் பேசித் தீர்க்கப்படும்" என தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டான்

கொரோனா தளர்வுகள் - ரிலீஸுக்கு தயாராகும் படங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிரூத் இசையில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள திரைப்படம்
"டான்". காலேஜ் சப்ஜக்ட்டாக வரும் இதில் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டான் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ம் தேதி ரிலீஸாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதே மார்ச் 25-ல் எஸ்.எஸ்.ராஜ மௌலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீஸ் அறிவிக்கப்ப்ட்டது. இதனால் ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் படத்தின் லாஞ்ச் ஈவட்-க்கு சிவகார்த்திகேயனை அழைத்து அவரது பட ரிலீஸ் அன்றே தன் பட வெளியீட்டையும் அறிவித்து, சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படம் விரைவில் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெளியாகும் எனப் பேசப்பட்டு வருகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்க தான் வேண்டும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?