தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுபோல, ஞாயிறு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஞாயிறு ஊரடங்கு ரத்து : கூடுதல் தளர்வுகள் இவைதான்! - விரிவான தகவல்கள்
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஜனவரி 7 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம்
திரையரங்கம்
பொதுமுடக்கம்
தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால் கரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பினும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ – மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாக, பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1-2-2022 முதல் 15-2-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்,” என குறிப்பிட்டுள்ளார்.
1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
2. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.