Hikers

 

Facebook

உலகம்

தேசாந்திரியின் தடங்கள் : ஏன் சுவீடன், நார்வே சொர்க்கபுரியாக இருக்கிறது? | பகுதி 1

பயணங்களால் உருவான உண்மை நிகழ்வுகளின் கதையினை தொகுத்து எழுதும் கட்டுரைகளை இனி பார்க்க இருக்கிறோம்.

விஜய் அசோகன்

இலக்குகள் நோக்கிய பயணங்கள், பொருள் தேடிப் பயணங்கள், வேலை தேடிப் பயணங்கள், உணவினைத் தேடிப் பயணங்கள் என பலவற்றைப் பார்த்திருப்போம்! பயணங்களை தேடிய கதைகள், பயணங்களால் உருவான உண்மை நிகழ்வுகளின் கதையினை தொகுத்து எழுதும் கட்டுரைகளை இனி பார்க்க இருக்கிறோம்.

கடந்த 14 வருடங்களாக ஐரோப்பாவெங்கும் ஊர்ச்சுற்றித் திரிந்ததோடு இல்லாமல், பல நாடுகள் தொடும் தொடர் பயணங்கள், பல்லாயிர மையில்களை பல்லாயிர மனிதர்களை கடந்தும், பலவகை திடீர் திருப்பங்களை கொண்ட பயணங்களை ஆங்காங்கே வரிசைப்படுத்தி எழுதி இருந்தாலும், சொல்லாத செய்திகளும் எழுதாத கதைகளும் இன்னும் ஏராளம்!

Norway 

என் பயணங்களின் கதை

என் பயணங்களின் கதை 2008இல் நோர்வே நாட்டினில், பேர்கன் நகரத்தில் இருந்து தலைநகர் ஓஸ்லோவிற்கு பேருந்தில், தமிழர் நிகழ்ச்சி ஒன்றிற்காக குழுவாக சென்றதில் இருந்து தொடங்கியது. உலகின் அழகிய சாலைப் பயணங்களில் ஒன்றெனெ வரிசைப்படுத்தப்பட்டு, உலகப் பயணிகளை அதிகளவு ஈர்க்கும் பயணத்தடங்களில் ஒன்றான பேர்கன்-ஓஸ்லோ சாலையினை மட்டும் அன்றிலிருந்து இன்று வரை குறைந்ததேனும் 50 முறை பேருந்து, தொடர் வண்டி, மகிழுந்து என பயணித்திருப்பேன்.

ஸ்காண்டினேவியன் நாடுகளில் (நோர்வே, சுவீடன், ஃபின்லாந்து) உயரமான தொடர்வண்டி நிலையமுமாக, உலக நாடுகளில் உயரமான தொடர்வண்டி நிலையங்களில் ஒன்றுமாக இருக்கிற ஃபின்சே (Finse) இவ்வழித்தடங்களில் அமைந்துள்ளது.

உலகின் சாலை வழி குகைப் பாதை அமைந்துள்ள பேருந்து/மகிழுந்து வழித்தடங்களில் நீளமான (24.5 கிமீ) லார்டால் குகைப்பாதை இவ்வழித்தடத்திலேயே அமைந்துள்ளது.

நோர்வே நாட்டின் மையப்பகுதிகளின் மலைகளின் அடிவாரத்தில் இருந்து தொடங்கி நோர்வே நாட்டின் மேற்குக் கரைகளில் பல நூறு மைல்களுக்கு கடல் தொடும் நீர்ப்பாதை, இதனை ஆங்கிலத்தில் Fjords என்பார்கள், தமிழில் கடனீர் அல்லது இடுக்கேரி என்பார்கள்.

இடுக்கேரிகளில் உலகின் நீளமானதான சோக்னோ ஃபியார்டு இவ்வழித்தடங்களைத் தொட்டே தொடங்குகிறது.

உலகின் அழகிய சுற்றுலாத் தலங்கள் எனவும் UNESCO பாரம்பரிய அமைவிடம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ள பல ஊர்களும் தலங்களும் இவ்வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இப்படியாக, ஒரே வழித்தடத்திலேயே, பல அருமையான, பலரையும் ஈர்க்கும், பல நூறு அதிசயங்களையும் ஒளித்து வைத்திருக்கும் செய்திகளை படிக்கவே அத்தனை இன்பத்தைக் கொடுக்கும். இதனை எல்லாம் பார்ப்பதற்காகவே, எழுதுவதற்காகவே தொடர்ந்தும் பயணித்து பல சவால்களையும் கூட கடந்த என்னுணர்வின் தொகுப்புகளே இனி வரும் கட்டுரைகள்.

சோக்னோ ஃபியார்டு

இதில், என்னவெல்லாம் பார்க்க இருக்கிறோம்.?

எல்லோருக்கும் பயணங்களில் அழகியலை காண்பதும், அதிசயங்களை ஆராதித்து மகிழ்வதும் என்பதுவாகவே இருக்கும்.

என் பயணங்களில் பெரும்பாலும் திடீர் திருப்பங்களும் கடும் சவால்களும் தேடி வந்துவிடும்..அதனை கடக்கும்பொழுது எதிர்பாராத படிப்பினை கூடவே வந்து சேரும்!

குறும்படம் போல, படங்களின் சுருக்கக் கதை போல (trailer) அடுக்கடுக்காக முதலில் பார்த்திடுவோம்.

2021 நிறைவினை அழகியப் பயணத்தோடு கொண்டாட வேண்டும். உலகின் அதிசயங்களையும் காண வேண்டும், கொரொனா நோய்த் தொற்றுப் பரவலும் அதிகமாக தொடங்கிவிட்ட காரணத்தால் பக்கத்து நாட்டிற்குக் கூட செல்ல முடியாத நிலையில், சுவீடனிற்குள்ளாக மட்டுமேவும் இருக்க வேண்டும்.

Ice Hotel

எங்கு செல்லலாம்?

2014இல் உலகின் வடதுருவம் தொட்டப் பயணமாக 5 நாட்களில் 5000 கி.மீ 24 மணி நேர இருட்டில் (வடதுருவப் பகுதியில் குளிர்காலத்தில் வெறும் இருட்டும் கோடை காலத்தில் வெறும் சூரிய வெளிச்சமும் இருக்கும்), மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் பருவக்காலத்தில், “யாருமில்லா காட்டிற்குள்ளே நான் தான் ராஜா!” போல கிருஸ்துமஸ் நாட்களில் ஆளில்லா சாலைகளில் தனியாக மகிழுந்து ஓட்டி, வடதுருவ ஒளியினையும் (northern lights) மற்றும் ஆர்டிக் கடலின் நோர்வே-ருசியா எல்லை வரை சென்று பனிக்கட்டியிலான தங்குமிடம் (ICEHOTEL) பார்த்தாச்சு!

ஆனால், அன்றைய பயணம் நண்பர்களோடு!

இப்போ, குடும்பத்தோடு செல்ல வேண்டும்!

குழந்தைகள் 5 நாட்களில் 5000 கி.மீ, வடதுருவ ஓளி காண வேண்டுமென்றால், நள்ளிரவில், கடுமையான கடும் குளிர், பனிப்பாறைகளில், பனி மலைகளில் நடக்க வேண்டிய நிலை, கிருஸ்துமஸ் விடுமுறை நாட்களில் உணவகங்கள் மட்டுமல்ல, தேநீர் கடைகளுமே கூட இருக்காது என்ற நிலை!

ஏற்கனவே, 2014ஆம் ஆண்டு தந்த அனுபவம் இதில் கைக்கொடுக்கும் என்ற நிலையில் கடும் சவாலான சாலை வழிப் பயணத்தினைத் திட்டமிட்டு, கடந்து வந்தோம்!

ஏற்கனவே 2014இல் கடந்து வந்த வட துருவ-ஆர்டிக் சாலை பயணத்தினைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருந்தாலும், 2014, 2021 பயணங்கள் இரண்டையும் ஆங்காங்கே ஒப்பிட்டே கட்டுரைகள் வர இருக்கிறது. நோர்வே-சுவீடன்-ஃபின்லாந்து நாடுகளின் ஊடாக பயணித்த இன்ப ஒளியினையும், வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் ஊர்களின் புராணங்களையும் காண இருக்கிறோம்.

Frankfurt

சொல்ல மறந்த கதைகள்

குறுகிய நாட்களில் பல ஊர்கள், பல நாடுகள் சுற்றும் திடு-திடு பயணங்களை தொடங்கியது 2010இல்.

நோர்வே நாட்டில் நான் வசித்து வந்த பேர்கன் நகரத்தில் இருந்து விமானத்தில் கிளம்பி, ஜெர்மனியின் ஃபிராங்க்புர்ட் நகரம் வந்திறங்கி, பேருந்தில் இன்னொரு சிறு நகரம் சென்று, அங்கிருந்து விமானம் ஏறி ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் சென்று ஊர்ச்சுற்றிவிட்டு, விமானம் ஏறி பாரிஸ் சென்று, அங்கு பல ‘திடுக்’ திருப்பங்களை எதிர்கொண்டு ரசித்துவிட்டு, தொடர்வண்டியில் ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்புர்ட் நகரம் வந்து, இரண்டு நாட்கள் ஊர்ச்சுற்றிவிட்டு, மீண்டும் விமானம் ஏறி பேர்கன் நகரம் வந்தடைந்தேன்.

இந்த பயணங்கள் குறித்து, பொங்கு தமிழ் இணையத்தில் 2010லேயே தொடர் கட்டுரைகளாக கோர்த்து 12 கட்டுரைகள் எழுதியிருந்தேன். இருப்பினும், “சொல்ல மறந்த கதைகள்” பலவும் இருப்பதால், இனி வரக்கூடிய தொடர்களில் இப்பயணத் தொகுப்பும் கட்டாயம் இருக்கும்.

Singer

பயணம் வெறும் பயணம் மட்டுமல்ல

2009-2010-2011 என ஒவ்வொரு ஆண்டும் ஏதோவொரு காரணத்திற்காக பெல்ஜியம் தலைநகர் புருஸ்ஸல்ஸ் சென்று வந்திருக்கிறேன். அதன் அருகாமை ஊர்களின் பல சுவையான கதைகளை சேகரித்து வந்துள்ளேன். இதுவரை இதனை குறித்து எங்குமே பதிவு செய்ததில்லை. எழுதப்போகும் தொடர்களில் பெல்ஜியத்தின் அழகியலோடு, ரசித்துப் பருகும் குளிர்கால தேநீர் போன்ற பல செய்திகளும் வந்து சேரும்.

அதேபோல, பிரான்ஸ்-சுவிசர்லாந்து-ஜெர்மனி-நெதர்லாந்து-பெல்ஜியம் என 5 நாடுகளை 5 நாட்களில் கடந்து, மீண்டும், ஜெர்மனி-சுவிசர்லாந்து-நோர்வே என பயணித்து, பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள் கொண்ட 2011ஆம் ஆண்டு பயணத்தினையும் காண இருக்கிறோம்!

இது வெறும் பயணங்கள் மட்டுமல்ல, பிரபல தமிழ்த் திரைப்பட பாடகி ஒருவரின் அவர்களின் 50ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியினை 4 நாடுகளில் ஏற்பாடு செய்யவும், 2011 காலக்கட்டங்களில் தமிழ்ப்படங்களின் பாடல்களில் ஒலித்துக் கொண்டிருந்த பிரபல திரைப்பட பாடகர்-பாடகிகளை அழைத்து வந்த சென்னையின் பிரபல இசைக்குழுக் கலைஞர்கள் அனைவரையும் இணைத்து நிகழ்ச்சிகளுக்கான பயணங்களுக்காக அழைத்துச் சென்ற போது நடந்த சவாலான நிகழ்வுகளின் தொகுப்பாகவும் இருக்கும்!

உலகைச் சுற்றலாம் 

உலகைச் சுற்றிய அனுபவங்கள்

இதன் அனுபவம் கொடுத்த தைரியத்தில், 2018இல் சுவீடன்- ஜெர்மனி- சுவிசர்லாந்து- இத்தாலி- ஆஸ்திரியா-செக் குடியரசு - ஜெர்மனி - சுவீடன்-நோர்வே - சுவீடன் என 6 நாட்களில் 6000 கி.மீ பயணித்தோம், உலக அதிசயங்களை கொண்ட இத்தாலி நாட்டின் பைசா கோபுரம், ரோம் நகரத்தின் வரலாற்றுக் கட்டிடங்கள், நீர் நகரமான வெனிஸ், பழம்பெருமை கொண்ட செக் குடியரசின் சார்ல்ஸ் பாலம், அமெரிக்கா-ருசியாவின் பனிப்போரின் சாட்சியமாக விளங்கும் பெர்லின் நகர மிச்சங்கள் என பலவற்றை கடந்து வந்தோம்.

இப்படி பல திடீர் திருப்பங்களை கொண்ட பயணங்களின் தொடர்ச்சியாக 2019இல் மட்டும் அமெரிக்கா, இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி (3 முறை), டென்மார்க் (4 முறை), நோர்வே (3 முறை) ஆராய்ச்சிப் பணிகளுக்காக, கல்வித்துறைக்காக, சமூக-அரசியல் காரணங்களுக்காக, ஊர்ச்சுற்ற என ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டினில் பயணத்திலேயே இருந்தேன். இதில், தமிழ்நாட்டிற்கு மட்டும் 2 முறையும் பறந்தேன்.

பயணங்கள் என்பது ரசித்துப் பார்க்கும் ஊர்களின் தொகுப்பாக மட்டுமில்லாமல், என் பயணங்களில் வரலாற்றுத் தேடல்கள் நிறைந்திருந்தன, அதனை விடவும் திடுக்கிடும் திருப்பங்கள் பல இருந்தன என்று முன்பே சொன்னேன் அல்லவா?

எல்லா திருப்பங்களையும் எல்லா அதிர்ச்சிகளையும் பயணங்களில் எதிர்கொண்டு, எல்லாவற்றிலும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொண்டு, வாழ்வின் தருணங்களை அவ்வப்பொழுது பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, “வாழ்ந்திருக்கோம்டா” மன நிலை தந்து வருகிறது எனலாம்.

“சென்றுடுவீர் எட்டுத்திக்கும்! கொணர்ந்துடுவீர் கேள்விச்செல்வங்களை யாவும்!” என்பதை கேட்டு வளர்ந்ததாலேயோ என்னவோ, பயணங்களை ரசித்து எழுதுவது 2008இல் இருந்தே வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

என் இணையேற்பு விழாவில் நான் வெளியிட்ட என் புத்தகமே, “நோர்வே பயணக்கட்டுரைகளின் தொகுப்புதான்”.

ஆங்கிலத்தில் மட்டுமே படித்த கதைகளை, திரைப்படங்களில் மட்டுமே பார்த்த பல ஊர்களின் மலைகளையும் அருவிகளையும், வாழ்க்கையில ஒரு முறையேனும் பயணித்துப் பார்க்க வேண்டும் என்ற கணக்கில் இருக்கும் ஊர்களையும் தமிழின் எழுத்துக்கள் வழியாக முதலில் சென்றடையலாம்!

வாங்களேன்! – கொஞ்சம் உலகைச் சுற்றலாம்!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?