உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், அடுத்த ஆண்டு சில பிரிவுகளில் பணியமர்த்தல் மற்றும் செலவு வீதத்தைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. உலகின் பல நாடுகள் எதிர் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆப்பிள் நிறுவனம் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்திருக்கிறது.
பொருளாதார மந்தநிலை காரணமாக, மெட்டா மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதைச் சற்று பொறுமையாக கையாளுகின்றன. அந்த வரிசையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் இணைவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக, ஆப்பிள் நிறுவனத்தின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்த நடவடிக்கையின்படி, ஏற்கனவே இருக்கும் ஆப்பிளின் எந்த தொழில்நுட்ப ஊழியர்களும் பாதிப்பிற்குள்ளாக மாட்டார்கள். அதே நேரத்தில், வருகிற 2023 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ”Mixed-Reality Headset” தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கணிசமான அளவு பணியமர்த்தல் மட்டுமே திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது 2015 -ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க இருக்கும், முதல் பெரிய புதிய வகை சொந்த தயாரிப்பாகும்.
கடந்த ஆண்டு புள்ளிவிவரத்தின் படி, ஆப்பிள் நிறுவனம் சுமார் 154,000 முழுநேர ஊழியர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த வாரம், தங்களுடைய நிறுவனம் ஊழியர்களை பணியமர்த்துவதில் மந்தநிலையை கடைப்பிடிக்க இருப்பதாக அறிவித்தார். உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2023 ஆம் ஆண்டு முழுவதும் ஊழியர்களை பணியமர்த்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதே நேரத்தில் முதலீட்டாளர்களை வரவேற்பதாகத் தெரிவித்தது.
இந்த மாத தொடக்கத்தில், அனைத்து மெட்டா தொடர்புடைய தளங்களிலும் இந்த ஆண்டு பொறியியலாளர்களுக்கான பணியமர்த்தல் இலக்குகளைக் குறைந்தது 30% குறைப்பதாகக் குறிப்பிட்டது. மேலும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள அனைத்து ஊழியர்களும் தயாராக இருக்க வேண்டுமென எச்சரித்தது. அமெரிக்காவின் ஒரு வாராந்திர இதழுக்குப் பேட்டியளித்த மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷுக்கர்பெர்க், "சமீபத்திய வரலாற்றில் நாம் கண்ட மிக மோசமான வீழ்ச்சிகளில் ஒன்றை எதிர் நோக்கி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதேபோல கடந்த வாரம், மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இது அதன் மொத்த பணியாளர்களில் 1% ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் அலுவலக குழுக்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமும் ஏற்கனவே 10% பணிநீக்கத்தை தொடங்கியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், IMF தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, அடுத்த ஆண்டு உலகளாவிய மந்தநிலையின் பாதிப்பை யாராலும் தவிர்க்க முடியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust