சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங், மூன்று நாட்கள் பயணமாக செளதி அரேபியா சென்றுள்ளார். சர்வதேச அரங்கத்தில் சீனா - செளதி அரேபியாவுக்கு மத்தியிலான உறவு எத்தனை முக்கியத்துவமிக்கது என்பதை உணர்த்துகிறது.
அதோடு செளதி அரேபியா அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கீழ் படிந்து கிடக்காது என்பதையும் அமெரிக்காவுக்கு கூறுவதாக அமைந்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் செளதி அரேபியாவுக்கு முதல் முறையாக பயணித்துள்ளார் ஷி ஜின்பிங்.
இப்பயணம் செளதியின் முடி இளவரசர் & பிரதமர் மொஹம்மத் பின் சல்மான் சர்வதேச அரங்கில் எத்தகைய வளர்ந்து வரும் முக்கிய ஆளுமை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
இந்த வாரம் நடக்க உள்ள இருநாடுகளுக்கு இடையிலான சந்திப்பில், பெரும்பாலும் இருநாட்டு பொருளாதாரத்தைச் சார்ந்ததாக இருக்கும் என செளதி பத்திரிகை முகமை கூறியுள்ளது.
இந்த சந்திப்பில் சுமார் 29.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் வணிகம், வர்த்தகம், முதலீட்டு உறவுகள் என எல்லாம் அடங்குமாம்.
2021 ஆம் ஆண்டு, செளதி அரேபியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக சீனாவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது செளதி விஷன் 2030 திட்டத்துக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் செளதி அரேபியாவின் பொருளாதாரத்தை பரவலாக்குவது மற்றும் நியோம் (Neom) நகரத்தைக் கட்டமைப்பது போன்ற பணிகள் அடக்கம். ஏற்கனவே நியோம் நகரக் கட்டுமானப் பணிகள் நடந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
செளதி தன் எரிசக்தி துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிகளை தீவிரப்படுத்தவும், தன் பொருளாதாரத்தை டிஜிட்டலாக்கும் பணிகளை வேகப்படுத்தவும் சீனாவோடு கூட்டணி சேர்கிறது.
மேலும், செளதி அரேபியாவின் கச்சா எண்ணெய் நிறுவனமான செளதி அராம்கோவுக்கு சீனா ஒரு முக்கிய முதலீட்டு மையமாகத் திகழ்கிறது. ஹைட்ரஜன் மற்றும் மரபுசாரா எரிபொருள் விவகாரத்தில் இருநாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடர்பான விஷயங்கள் தொடக்க நிலையில் இருக்கின்றன.
சீனாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு, மிக முக்கியமான எரிசக்தி மூலமாக விளங்குகிறது செளதி அரேபியா. செளதி அரேபியா நிலையாக கச்சா எண்ணெயை தொடர்ந்து உற்பத்தி செய்யக் கூடிய நாடாக இருக்குமா என சீனா அறிந்து கொள்ள விரும்புகிறது என வாஷிங்டன்னில் உள்ள நேஷனல் டிஃபென்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் டேவ் டெஸ்ராஸ் (Dave Desroches) அல் ஜசீராவிடம் கூறியுள்ளார்.
இது போக, கடந்த 2020ஆம் ஆண்டு தரவுகள் படி, சீனாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 31.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான சீன ஏற்றுமதிகள் செளதிக்கு செல்கின்றன. எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளிகள், உலோகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், போக்குவரத்து வசதிகள் & சாதனங்கள், கல் & கண்ணாடிப் பொருட்கள் போன்றவற்றைக் கூறலாம்.
செளதி அரேபியா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக ரீதியிலான கூட்டாண்மை உறவு நீண்டு வருகிறது. சீனா மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையிலான உறவு பெரும்பாலும் வணிக நடவடிக்கைகளையே சார்ந்து இருக்கிறது. ஆனால் இப்படித் தொடங்கும் உறவுகள் மற்றும் கூட்டணிகள் மெல்ல மற்ற துறைகளுக்குப் பரவும், இதில் பாரம்பரிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களும் அடக்கம்.
ஓராண்டு காலத்துக்கு முன், செளதி அரேபியாவின் உள்நாட்டு பெலாஸ்டிக் ஏவுகணை உற்பத்தியை சீனா ஆதரித்தது. அதே போல ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் டிரோன்களை அமெரிக்கா செளதி அரேபியாவுக்கு விற்கவில்லை அல்லது விற்கத் தயங்கியது. அவ்விடத்தை சீனா தன் ஆயுதமேந்திய டிரோன்களை விற்று இட்டு நிரப்பியது.
செளதி அரேபியாவின் பார்வையில், சீனாவோடு சேர்ந்து பணியாற்றுவது எளிமையானதாக இருக்கிறது. சீனாவில் ஒரு அரசியல் நிலைத்தன்மை இருக்கிறது.
மனித உரிமைகள் போன்ற பிரச்னைகளில் செளதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சீனா பாடம் எடுக்காது. அதே போல சீனா, செளதி அரேபியாவுக்கு விற்கும் ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனறும் கட்டுப்பாடுகளை விதிக்காது என அல் ஜசீராவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அமெரிக்காவைப் போல, சீனா, செளதியின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் விஷயத்தில் நெருங்கக் கூட முடியாத இடத்தில் இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில், அமெரிக்காவின் இடத்துக்கு சீனா வருவதாகக் கூடத் தெரியவில்லை.
செளதி அரேபியாவின் ராணுவம் அமெரிக்காவின் ராணுவ உதவி, பயிற்சி, ராணுவ தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் என பலவற்றுக்கும் அமெரிக்காவையே பெரிதும் நம்பி இருக்கிறது. எனவே, அமெரிக்காவுக்கு பதிலாக களத்தில் சீனாவை இறக்க முயன்றால் கூட, செளதி அரேபியா தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்வதாக அமையும் என டுனிசியாவின் முன்னாள் அமெரிக்க தூதர் கோர்டன் கிரே அல் ஜசீராவிடம் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீனா ஒரு பாதுகாப்பு கூட்டாளி அல்ல என டேவ் டெஸ்ராஸ் (Dave Desroches) கூறினார். சீனா டிஜிபூட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெபல் அலி, பாகிஸ்தான், இலங்கை போன்ற இடங்களில் ராணுவ தளத்தை அமைத்தாலும், அவர்களால், அமெரிக்காவைப் போல செளதி அரேபியாவை பாதுகாக்க முடியாது என்கிறார் டேவ். அதற்கு ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்மை உதாரணமாகக் கூறுகிறார்.
ஒருவேளை, செளதி அரேபியாவை இரான் நாட்டின் ராணுவம் தாக்கத் தொடங்கினால், செளதி அரசாங்கத்தின் முதல் அழைப்பு அமெரிக்காவின் சென்ட்காமுக்குத் தான் செல்லுமே தவிர பீஜிங்குக்கு அல்ல என்கிறார் கிரே. அந்த அளவுக்கு வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ சொத்துக்கள் இருக்கின்றன, அவை செளதி அரேபியாவை பாதுகாக்கும் என்கிறார்.
எனவே, இந்த தருணத்தில் சீனா உடனடியாக செளதி அரேபியாவில் ராணுவத் தளங்களை அமைக்கும் என எதிர்பார்க்க எந்த ஒரு காரணமும் இல்லை. எனவே சீனா மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறது அல் ஜசீரா.
ஆனால் செளதி அரேபியாவோ, எதார்த்தத்தில் இருப்பதை விட, சீனா உடன் பாதுகாப்பு விவகாரங்களில் பெரிய அளவில் ஒத்துழைக்க தயாராக இருக்கிறது.
அமெரிக்காவோடு பேரம் பேசவும் தனக்குத் தேவையான காரியங்களை சாதித்துக் கொள்ளவும் செளதி இப்படிச் செய்வதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், செளதிக்கு வேறு சில சக்திவாய்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் இப்படிச் செய்வதாக அல் ஜசீரா கட்டுரை ஒன்றில் ஷெஹப் அல் மகஹ்லெ & ஜியார்ஜியோ கஃபிரோ குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள வெளியுறவுத் துறை, செளதி அரேபியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு கொடுத்த பிரமாண்ட வரவேற்பைப் பார்த்து மகிழவில்லை. சுமார் ஐந்து மாதங்களுக்கு முன் ஜெடாவில் அமெரிக்க அதிபர் பைடனுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு இந்த அளவுக்கு பிரமாண்டமாக இல்லை.
அதே நேரத்தில், செளதி அரேபியா, சீன அதிபருக்கு கொடுத்த வரவேற்புக்கு எதிர்மறையாக எதிர்வினையாற்றினால் அல்லது பொதுவெளியில் எதிர்மறையாக எதையாவது கூறினால், அது அமெரிக்காவுக்கே மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
அமெரிக்கா கூறுவது போல ஒரு பிரச்சனை இருந்தால் கூட, அது குறித்து பொதுமக்கள் கவனம் குவியாத படி தவிர்த்துக் கொள்வதே அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு நல்லது. சீனாவின் அபாயத்தை அளவுக்கு மீறி பெரிதாக்கினாலோ, செளதி அரேபியா அல்லது எந்த ஒரு வளைகுடா நாட்டுக்கும் அழுத்தம் கொடுத்தாலோ அது அமெரிக்காவுக்கே எதிராகத் திரும்பலாம்.
பிரச்சனை என்னவாக இருந்தாலும் அதை, பொதுவெளியில் விமர்சிக்காமல் அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் அது தான் அமெரிக்காவுக்கு நல்லது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust