வங்க தேசத்தில் ஒரே வாரத்தில் பெட்ரோல் விலை 50% அதிகரிப்பு  Twitter
உலகம்

வங்கதேசம்: பெட்ரோல் விலை ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு - அடுத்த இலங்கை ஆகிறதா பங்களாதேஷ்?

NewsSense Editorial Team

உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு அருகில் இருக்கும் வங்கதேசமும் ஒன்று. அப்படிப்பட்ட நாட்டிலேயே கடந்த ஒரு வாரக் காலத்துக்குள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை சுமார் 50% உயர்த்தி இருக்கிறது அந்நாட்டு அரசு.

அத்தியாவசிய எரிபொருட்களின் விலை உயர்வால் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர், அரசுக்கு எதிராகச் சாலைகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பதாக வங்கதேச அரசு விளக்கம் கொடுத்துள்ளது. ஆகையால் தங்களால் பெட்ரோல் டீசல் போன்ற மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பது தவிர வேறு வழி தெரியவில்லை என்றும் மக்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஜிடிபி வளர்ச்சி, தேசிய வருமான வளர்ச்சி, முக்கிய துறைகளின் வளர்ச்சி... போன்ற விஷயங்களில் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறதோ இல்லையோ அது சாமானிய மக்களை வெகுண்டிடச் செய்யாது. ஆனால் பெட்ரோல், டீசல், மின்சாரம், பால், அரிசி, கோதுமை, பருப்பு... போன்ற மக்கள் அனுதினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் அது மக்களை கொதிப்படையச் செய்யும். அதுதான் தற்போது வங்கதேசத்திலும் நடந்திருக்கிறது.

உலக ஆடை தொழிற்சாலைகளில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் வங்கதேசம் அடுத்த இலங்கை ஆகிறதா? வாருங்கள் பார்ப்போம்.

மக்கள் போராட்டம்

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 86 டாக்காவாக (வங்க தேச கரன்சி) இருந்தது, சமீபத்தில் 130 டாக்காவாக அதிகரித்து இருக்கிறது. அதேபோல டீசல் மற்றும் அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்யின் விளையும் சுமார் 42 சதவீதம் அதிகரித்து இருப்பதாக பிபிசி ஊடகத்தின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை மல்டிபிளையர் கமாடிட்டி என்பர். அதாவது இது போன்ற பொருட்களின் விலை அதிகரித்தால் தன்னிச்சையாகவே அது அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், ஆடை, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தி விடும்.

தற்போது வங்கதேசத்தில் வேலை பார்த்துக் கிடைக்கும் தினசரி கூலி அல்லது வாரக் கூலியைக் கொண்டு, தங்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பலர் தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியாமலும் தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் பேருந்து பயணச் சீட்டுக்கான கட்டணங்கள் கூட கணிசமாக அதிகரித்து இருக்கின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் மிக மிக அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற பயணங்களைத் தவிர்க்கின்றனர். பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் கிட்டத்தட்ட எல்லாவிதமான போக்குவரத்து மற்றும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிப்பதாக பல்வேறு தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

கச்சா எண்ணெய்

எரிபொருட்களின் விலை உயர்வால் அடிப்படை பொருட்களின் விலைவாசி அதிகரித்திருக்கும் அளவுக்கு மக்களின் கையில் புழங்கும் பணப்புழக்கம் அதிகரிக்கவில்லை. சுருக்கமாக நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பெறும் சம்பளம் மற்றும் கூலித் தொகை அதிகரிக்கவில்லை. ஆகையால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க போதிய அளவுக்குப் பணம் இல்லை.

நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை விலைவாசி இத்தனை கடுமையாகப் பாதிக்கிறது என்றால், வியாபாரம் செய்யும் வணிகர்களையும் இந்த எரிபொருள் விலை உயர்வு விட்டு வைக்கவில்லை.

இந்த திடீர் எரிபொருள் விலை உயர்வால், போக்குவரத்து நிறுவனங்கள் போன்ற பல கம்பெனிகளால் தங்களின் ஊழியர்களுக்கு வழக்கமாகக் கொடுக்கும் சம்பளம் மற்றும் கூலித் தொகையைக் கூட முறையாகக் கொடுக்க முடியவில்லை என வருத்தப்படுகிறார்கள்.

வங்கதேசத்தின் தலைநகரான தாக்கா நகரத்திற்கு தங்களுடைய விவசாய பொருட்களை மற்றும் விளைச்சல்களை வெளியூர் மற்றும் கிராமங்களில் இருந்து எடுத்து வந்து வியாபாரம் செய்து பிழைக்கும் வியாபாரிகளும் எரிபொருள் விலை உயர்வால் தங்கள் வியாபாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

Bangladesh Market

காய்கறிகள் மற்றும் கனிகள் வியாபாரம் செய்து பிழைப்பவர்களுக்கு திடீரென 40 முதல் 50 சதவீதம் எரிபொருளின் விலை அதிகரிப்பால், அதை அப்படியே விவசாய பொருட்களின் மீது விலை வைத்து விற்று விட முடியாது. அப்படி வைத்தாலும் மக்கள் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.

மக்கள் வாங்கவில்லை என்றால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து விற்றுக் கொள்ளலாம் என சேமித்து வைத்துக் கொள்ள இது ஜவுளி ஆடைகளோ, தங்கம் வெள்ளி போன்ற உலோகமோ அல்ல. ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அழுகிப் போகக்கூடிய காய் மற்றும் கனிகள் என குமுறத் தொடங்கியுள்ளனர்.

இந்த விலைவாசி ஏற்றம் உண்மையிலேயே பெரியது தான் என்பதை நாங்கள் அறிவோம். சர்வதேசச் சந்தையில் எரிபொருளின் விலை வெளிநாட்டு கரன்சியில் அதிகரித்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? என வங்கதேசத்தின் எரிசக்தித் துறை அமைச்சர் நஸ்ருல் ஹமீத் பிபிசி பங்களா சேவையிடம் கூறியுள்ளார். மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் வந்தால் நிச்சயம் எதையாவது செய்து நிலைமையைச் சமாளிப்போம் என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் வங்கதேசத்தின் பொருளாதாரம், அரசால் தவறாக நிர்வகிக்கப்படவில்லை என்றும், முன்பே எரிபொருட்களின் விலை அதிகரிக்காமல் இருக்க மானியங்கள் எல்லாம் வழங்கப்பட்டு வந்ததாகவும் தற்போதைய விலை ஏற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

வங்கதேசத்தின் அரசாங்க தரப்பிலிருந்து எத்தனையோ விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் மக்கள் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. இந்த விலை ஏற்றத்தை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். இதைவிட மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால் மக்களின் கோபமும் எதிர்ப்புணர்வும் மெல்ல வங்கதேசம் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது.

இலங்கையைப் போல வங்கதேசத்தின் பொருளாதாரம் முடங்கி விடாது. அதற்குள் அரசாங்கம் விலை வாசிப் பிரச்சனை உட்பட, எரிபொருட்களின் விலையைச் சரி செய்து விடும் என ஒரு தரப்பு மக்கள் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்புதான் உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் வங்கதேசப் பொருளாதாரமும் ஒன்று எனப் பலரும் பெருமிதமாகக் கூறிய செய்திகள் பத்திரிகைகளில் பார்க்க முடிந்தது. எனவே தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி என எதையாவது வைத்து வங்கதேச அரசாங்கம் நிலைமையைச் சமாளித்து விடும் என ஒரு தரப்பினர்கள் கருதுகிறார்கள்.

மற்றொரு தரப்பினரோ சமீபத்தில் தான் சர்வதேச பன்னாட்டு நிதியிடம் (IMF) வங்கதேச அரசு கடன் கேட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். தெற்காசியாவில் இருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தானைத் தொடர்ந்து சர்வதேச பன்னாட்டு நிதியத்திடம் கடன் கேட்டிருக்கும் நாடு வங்கதேசம் தான் என்றால் சூழலை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்கின்றனர்.

அடிப்படைப் பொருட்களின் விலை ஏற்றம், தலைவிரித்தாடும் விலைவாசிப் பிரச்சனை, மக்கள் கையில் பணப் புழக்கம் இல்லாமை, அப்படிப் பணம் புழங்கினாலும் குறைவாகப் புழங்குவது, சந்தையில் பொருட்கள் இருந்தும் மக்களால் அதை வாங்க முடியாதது போன்ற பிரச்சனைகள் எல்லாம் ஒரே நேரத்தில் வங்கதேசத்தில் தலையெடுத்திருப்பது, உண்மையிலேயே அந்நாட்டு அரசாங்கத்துக்கு வைக்கப்பட்டுள்ள அக்னிப் பரிச்சை எனலாம். விரைவில் வங்கதேசம் தன்னை இப்பிரச்சனைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும், இலங்கை போல ஆகாது என நம்புவோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?