உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் பெலாரஸ் நாடு ரசியாவின் ஆக்கிரமிப்பிற்கு துணை நிற்கும் முக்கியமான நாடாகும். பெலாரஸில் ஆயிரக்கணக்கான ரசியத் துருப்புகளும், தளவாடங்களும் நிலை கொண்டு உக்ரைனைத் தாக்கி வருகின்றன.
பெலாரஸ் குடியரசு என்று அழைக்கப்படும் இந்நாட்டை அதிபர் அலெக்சாண்டர் லுகாஸ்ஹென்கா 1994 முதல் ஆட்சி செய்கிறார். ஆன்ட்ரி காபியகோவ் 2014 முதல் பிரதமராக பணி புரிகிறார்.
நாட்டில் சுமார் 96 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆயுள் சராசரி 72.15. நாட்டின் தலைநகரான மென்ஸ்க்கில் சுமார் 18 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். பெலோரசியன் ரூபிள் இந்நாட்டின் செலவாணியாகும்.
பெலாரஸ்
நாட்டின் அதிகாரப்பூர்வமான மொழிகளான பெலாருசியனை 23.45% மக்களும், ரசிய மொழியை 70.2% மக்களும் பேசுகின்றனர். கிழக்கத்திய ஆர்த்தோடக்ஸ் எனும் கிறித்தவப் பிரிவை 80% மக்கள் பின்பற்றுகின்றனர். மீதி 20% மக்கள் ரோமன் கத்தோலிக், புராட்டஸ்டண்ட் கிறித்தவ பிரிவுகளையும் மற்றவர் யூத, முஸ்லீம் மதங்களையும் பின்பற்றுகின்றனர். நாட்டின் கல்வியறிவு 99.6%.
விவசாயத்தில் 9.4% மக்களும், தொழிற்துறையில் 45.9% மக்களும், சேவைத் துறையில் 44.7% மக்களும் பணிபுரிகின்றனர். தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் பெலாரசின் ஏற்றுமதி - இறக்குமதி நாடுகளாக ரசியா, நெதர்லாந்து, ஜெர்மனி, உக்ரைன், சைனா, லாட்வியா இருக்கின்றன. ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகின்றது. சாலைகளும், ரயில் பாதைகளும் அதிகம் இருக்கும் நாட்டில் 65க்கும் மேற்பட்ட விமானநிலையங்கள் உள்ளன.
Belarus country during World War II
முதல் உலகப்போரைத் தொடர்ந்து 1917 இல் ரசியப் புரட்சி ஏற்பட்டது. 1918 இல் சோவியத் யூனியனின் செம்படை பெலாரசில் நுழைந்ததை தொடர்ந்து அந்நாடு குடியரசாக மலர்ந்தது.1939 ஆம் ஆண்டில் போலந்தில் இருந்த பெலாரஸ் பகுதியை சோவியத் யூனியன் பெலாரசோடு இணைத்தது. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படைகளால் பெலாரசின் மக்கள் தொகையில் கால்வாசிப் பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பலரும் ஜெர்மன் நாஜி வதை முகாம்களில் இறந்தவர்கள். இன்றைக்கு உக்ரைனில் இருக்கும் நியோ நாஜிப்படை உக்ரைன் இராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. கிழக்கு உக்ரைனில் பலரைக் கொன்றிருக்கிறது. எனவே பெலாரஸ் தனது பழைய நாஜி வதை முகாம் வரலாற்றிலிருந்தும் இன்று ரசியாவை ஆதரிப்பதற்கு முகாந்திரம் இருக்கிறது.
Belarus
சோவியத் யூனியனில் ஒரு குடியரசாக சேர்ந்த பெலராஸ் நாட்டின் மின்ஸ்க் நகரப் பகுதி ஒரு தொழிற்துறை மையமாக விளங்கியது. ஆனால் 1986 ஆம் ஆண்டில் உக்ரைனில் நடந்த செர்னோபில் அணு உலை விபத்து பெலாரசில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. நாட்டின் ஐந்தில் ஒரு மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அதன் பக்க விளைவுகளை இன்றும் எதிர் கொள்கின்றனர்.
1990 களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தது. ஜூலை 1990 இல் தனது இறையாண்மையை அறிவித்த பெலாரஸ் ஆகஸ்டு 1991 இல் தனது சுதந்திரத்தை அறிவித்தது. டிசம்பர் 1991 இல் ரசியா தலைமையிலான காமன்வெல்த் ஆஃப் இன்டிபென்டன்ட் ஸ்டேட்ஸ் (CIS) இன் இணை நிறுவனராக பெலாரஸ் மாறியது. 1994 ஆம் ஆண்டில் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்த ஸ்டானிஸ்லாவ் ஷூஷ்கெவிச் அதிபராக இருந்தார். நேரடிய முதலாளித்துவ ஆதரவாளரன அவர் பாராளுமன்றத்தால் அகற்றப்பட்டார்.
அவருக்குப் பதில் அலெக்சாண்டர் லுகாஷ்ஹென்கா பதவியில் அமர்த்தப்பட்டார். அடுத்த இரண்டு வருடத்தில் அவர் அதிபரின் அதிகாரங்களை விரிவுபடுத்தினார். ஏப்ரல் 1997 இல் அவர் ரசியாவுடன் ராஜாங்க, பாதுகாப்பு ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டார். இரு நாடுகளும் மிகவும் நெருக்கமானது. அதன் பொருட்டு 1998 ஆம் ஆண்டில் ரசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பெலாரசையும் பாதித்தது.
அதிபர் லுகாஷ்ஹென்காவின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அமெரிக்காவம், ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம் சாட்டின. அவரை சர்வாதிகாரி எனவும் அழைத்தன. அவர் சில எதிர்க்கட்சி தலைவர்களையும், எதிர்ப்போரையும் மறைமுகமாக கொன்றதாகவும் குற்றம் சாட்டின.
ஆனால் செப்டம்பர் 2001 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். மார்ச் 2006 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் 83% வாக்குகளைப் பெற்றார். இந்த தேர்தல் முடிவுகள் ஒரு முறைகேடு என எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார்கள். இந்த தேர்தல் என்பதே ஒரு மோசடி என்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. ஐரோப்பிய ஒன்றியம் லூகாஷ்ஹென்கா மற்றும் அவரது சில அமைச்சர்கள் மீது பொருளதாரத் தடைகளை விதித்தன.
ரசியாவிற்கும் பெலாரசிற்கும் கூட முரண்பாடு 2006 -2007 ஆம் ஆண்டில் ஏற்பட்டது. பெலராசிற்கு ஏற்றுமதி செய்த கச்சா எண்ணெயின் விலையை ரசியா இருமடங்காக உயர்த்தியது. பதிலுக்கு பெலாரஸ் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் எண்ணைய்க்கு பெலாரஸ் வரியை உயர்த்தியது. பின்னர் ரசியா பெலராசுடன் பேச்சுவார்த்தை நடத்தி எண்ணெய் விலையையும், வரியையும் குறைத்தது.
டிசம்பர் 2010 இல் லூகாஷ்ஹென்கா மீண்டும் அதிபரானார். அரசு அறிவிப்பின்படி அவர் பெற்ற வாக்குகள் 79.7.%. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஒரு எதிர்க்கட்சி தலைவர் ஒரு பிரச்சாரப் பேரணியில் போலீசால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்டசி தொண்டர்கள் அரசு அலுவலங்களை சூறையாடினார்கள். லூகாஸ்ஹென்காவை பதவியில் இருந்து அகற்றுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உதவுதாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுதி அளித்தன. அதிபரை ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்றும் அழைத்தன.
ஏப்ரல் 2011 இல் லூகாஷ்ஹென்காவின் அலுவலகத்திற்கு அருகே உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் குண்டு வெடித்து 12 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அதிபர் தெரிவித்தார்.
Belarus
ஜூன் 2011 இல் ரசியா மூன்று பில்லியன் டாலரை பெலாரசுக்கு கடனாக வழங்கியது. பதிலுக்கு பெலாரசின் பொதுத்துறை நிறுவனங்களை ரசியாவிற்கு விற்க வேண்டும் என்று கோரியது. இதன்படி பெலாரசின் பல நிறுவனங்கள் தனியார்மயமாகின. நவம்பரில் எண்ணெய் ஒப்பந்தத்தின் படி ரசியா பெலாரசுக்கு 14 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புக் கொண்டது. பதிலுக்கு பெலாரஸ் தனக்குச் சொந்தமான ஏமல் யூரோப் எனும் ஐரோப்பாவிற்கு எண்ணெய் சப்ளை செய்யும் நிறுவனத்தை ரசியாவின் காஸ்ப்ரோம் நிறுவனத்திற்கு வழங்கியது. இப்படி பெலாரஸ் ரசியா உறவு மேலும் நெருக்கமாகியது.
மார்ச் 2012 இல் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனது தூதரக உறவை பெலராசில் இருந்து துண்டித்துக் கொண்டன. பதிலுக்கு லூகாஷ்ஹென்கா அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களை பெலராசிலிருந்து வெளியாறுமாறு கேட்டுக் கொண்டார்.
செப்டம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆச்சரியம் ஏதுமின்றி லூகாஷ்ஹென்காவின் ஆதரவாளர்களே வென்றனர். சர்வதேச பார்வையாளர்கள் இந்த தேர்தல் ஜனநாயகமற்ற முறையில் போட்டியின்றி நடந்ததாக தெரிவித்தனர். முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. தேர்தலில் 74.3% வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டாலும் தனிப்பட்ட பார்வையாளர்களின் கணிப்புப்படி வாக்கு பதிவு 19% மட்டுமே.
இதே போன்று 2020 தேர்தலிலும் லூஹென்ஷ்கா பெற்ற வெற்றி சர்ச்சைக்குள்ளானது. பெரும் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிலர் கொல்லப்படவும் செய்தனர். இந்த தேர்தல் முறைகேடு என அறிவித்த மேற்கத்திய நாடுகள் லூஹென்ஷ்ஹாவை அதிகாரப்பூர்வ அதிபராக இன்று வரை ஏற்கவில்லை.
தற்போது பெலாரஸ் தனது நாட்டின் பகுதிகளை ரசியாவின் படைகள் உக்ரைன் மேல் படையெடுப்பதற்கு பயன்படுத்துவதற்கு அனுமதித்திருக்கிறது.
மேற்கத்தி நாடுகளுடன் அதிபர் லூஹன்ஷ்ஹாவிற்கு உள்ள பகையும், ரசியாவுடன் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கமும் பெலாரஸ் இன்று உக்ரைன் மீதான படையெடுப்பில் ஒரு முக்கிய கூட்டாளியாக ரசியாவிற்கு இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu