90கள் மற்றும் 2000 ம் தலைமுறையினரின் காலத்தில் அறிமுகமானதுதான் சிக்கன் ரைஸ். அதற்கு முன்பு வரை சீன உணவு வகைகள் தமிழகத்தில் பெரிய அளவுக்கு அறிமுகமானதில்லை. இன்று மதியம் பிரியாணி விற்கும் சிறு கடைகள் கூட மாலை நேரத்தில் சூடு பறக்க சிக்கன் ரைஸ் உணவை நள்ளிரவு வரை விற்கின்றன. பொறித்த கோழித்துண்டுகளோடு ஒரு முட்டையைப் பொறித்து, முக்கால் பங்கு வேக வைத்த பாசுமதி அரிசியோடு பலவகை மசாலாக்கலையும், காய்கறிகளையும் இணைத்து மாஸ்டர் சமைப்பார்.
அவரது கை, சிக்கன் ரைஸ் வறுபடும் சட்டியோடு நடனமாடும். தவாவில் உள்ள சிக்கன் ரைஸை அவர் இரண்டடி உயரத்திற்குத் தூக்கிப் போடுவதைப் பார்க்க கண்கோடி வேண்டும். எக் ரைஸ், பீஃப் ரைஸ், காய்கறி ரைஸ், நூடுல்ஸ் என பல வகையான துரித உணவுகள் இருந்தாலும் சிக்கன் ரைஸ் தான் தமிழக இளைஞர்களிடம் பிரபலம். பிரியாணியைப் போல அல்லாது இந்த உணவு உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படுவதால் இளைஞர்கள் மத்தியில் இந்த உணவு இன்னும் பிரபலமாக இருக்கிறது. விரைவில் பிரியாணியின் இடத்தை சிக்கன் ரைஸ் முந்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
தமிழகத்தின் நிலை இதுவென்றால் சிங்கப்பூரின் கதை வேறு. அங்கே சிக்கன் ரைஸ்தான் தேசிய உணவு. எப்படியும் மக்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று முறையாவது சிக்கன் ரைஸைச் சாப்பிடுவார்கள். சிங்கப்பூர் வாழ்விலிருந்து சிக்கன் ரைஸைப் பிரிக்க முடியாது. ஆனால் இப்போது இந்த இணைபிரியா உறவுக்கு உக்ரைன் போரால் ஒரு பிரச்சினை வந்திருக்கிறது.
733 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தீவு நகரமான சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் 55 இலட்சம் ஆகும். உலகில் அதிக தனிநபர் வருமானம் இருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 7,800 பேர்கள் வாழும் அளவுக்கு சிங்கப்பூர் மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள நாடாகும்.
பீட்சா இல்லாத நியூயார்க் எப்படி சாத்தியமில்லையோ அப்படி சிக்கன் ரைஸ் இல்லாத சிங்கப்பூரை கற்பனை செய்ய முடியாது என்கிறார் சிங்கப்பூரில் சிறு உணவகம் நடத்தும் ஒரு கடைக்காரர்
அப்பேர்பட்ட சிக்கன் ரைசுக்குத்தான் இப்போது ஒரு சோதனை உக்ரைன் போரால் வந்திருக்கிறது. சிக்கன் ரைஸின் முக்கியமான அங்கம் கோழிக்கறி. அந்தக் கோழிக்கறி வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதியாக வேண்டும். கோழி என்று அல்ல சிங்கப்பூர் தனது உணவுத் தேவைக்கான பொருட்களில் 90% தை இறக்குமதி தான் செய்கிறது. சிங்கப்பூர் மக்கள் சாப்பிடும் கோழிக்கறியின் மூன்றில் ஒரு பங்கு மலேசியாவிலிருந்து இறக்குமதியாகிறது.
ஆனால் உக்ரைன் போரால் உலக உணவுச் சங்கிலி அறுபட்டுள்ளது. உலகின் முன்னணி கோதுமை ஏற்றுமதியாளர்களாக உக்ரைனும், ரஷ்யாவும் உள்ளன. இது போக ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதியும் நடக்கிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பினால் இந்த ஆண்டு ஏற்றுமதியாக வேண்டிய கோதுமை பல நாடுகளுக்குக் கிடைக்கவில்லை. இதனால் பல நாடுகளில் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளன. இதன் அடிப்படையில் மலேசியா தனது கோழி ஏற்றுமதியை பெருமளவு குறைத்து விட்டது. இதன் மூலம் உள்நாட்டில் கோழியின் விலை அதிகரிப்பை குறைக்க நினைக்கிறது.
தெற்காசிய நாடான இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதோடு சர்க்கரை ஏற்றுமதியையும் வெகுவாகக் குறைத்திருக்கிறது. உள்நாட்டு எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மலேசியா கோழி ஏற்றுமதியைக் குறைத்திருக்கிறது.
இப்படியாக உக்ரைனில் ரஷ்யா போடும் குண்டுகள் சிங்கப்பூர் மக்களின் வயிற்றில் வந்து விழுகின்றன. தற்போது இந்த செய்திகளைக் கேள்விப்பட்ட சிங்கப்பூர் மக்கள் சிக்கன் ரைஸ் விற்கும் கடைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாப்பிடுகிறார்கள். இந்த நிலை திவாலான இலங்கையை நினைவுபடுத்துகிறது.
சிங்கப்பூரில் ஒரு சிக்கன் ரைஸின் சராசரியான விலை இந்திய மதிப்பில் ரூபாய் 240 ஆகும். தற்போது இதன் விலையும் கோழி தட்டுப்பாட்டால் உயர்ந்து வருகிறது.
“இந்நேரம் வரை கிடைத்து வரும் கோழி இனி இல்லாமல் போகலாம். நாம் வேறு ஒன்றை சாப்பிட வேண்டி வரலாம். அதற்காக நாம் தயாராக வேண்டும்" என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அவர்களே அறிவித்து விட்டார்.
மலேசியாவிலிருந்து உயிருள்ள கோழிகள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகி அங்கே வெட்டப்பட்டு சமைக்கப்படுகின்றன. தற்போது மலேசியா கோழி ஏற்றுமதிக்குத் தடை விதித்திருப்பதால் சிங்கப்பூர் தவிக்கிறது. உள்நாட்டில் கோழி உற்பத்தி சீராகி விலை கட்டுக்குள் வரும் வரை கோழி ஏற்றுமதிக்கான தடை தொடருமென மலேசிய அரசு கறாராக அறிவித்து விட்டது.
உக்ரைன் போரினால் உலக நாடுகளின் எரிபொருள் விலை உயர்ந்து கோழி உணவான சோளத்தின் விலையும் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டில் மலேசியக் கோழி உற்பத்தியாளர்கள் தமது விலையை 20% உயர்த்திவிட்டனர். இருப்பினும் சிங்கப்பூர் உணவகங்கள் சிக்கன் ரைஸ் விலையைப் பெரிய அளவுக்கு உயர்த்தவில்லை. ஆனால் தற்போது கோழி இறக்குமதி முற்றிலும் நின்று போனால் சிங்கப்பூர் உணவகங்கள் ஒரு பிளேட் சிக்கன் ரைஸின் விலையை 50% வரை உயர்த்த வேண்டி வரும்.
மலேசியாவிலிருந்து உயிருள்ள கோழியை வாங்குவதற்குப் பதில் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை உலக நாடுகளிலிருந்து சிங்கப்பூர் இறக்குமதி செய்யலாம். ஆனால் உயிருள்ள கோழி வெட்டி சமைக்கப்படும் போது உள்ள சுவையும், மணமும் உறைந்து போன, பதப்படுத்தப்பட்ட கோழித்துண்டுகளுக்கு இருக்காது. தமிழகத்தில் கூட நாம் கோழிக்கடைகளில் உயிருள்ள கோழிகள் வெட்டி சுத்தம் செய்வதைப் பார்த்தவாறுதான் வாங்குகிறோம்.
ஆனால் வேறு வழியில்லை என்றால் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை வைத்து சிங்கப்பூர் உணவகங்கள் சிக்கன் ரைஸ் தயாரிக்க வேண்டி வரலாம். அதற்கு மக்களும் தயாராகி விடுவார்கள். சிக்கன் ரைஸ் இனி இல்லை என்பதற்கு இது மேல் என்பதால் மக்கள் வேறு வழியின்றி இதை ஏற்பார்கள் என்று ஒரு ஓட்டல் உரிமையாளர் கூறுகிறார்.
சிங்கப்பூர் கோழி இறைச்சி விற்கும் கடைகளிலிருந்து கறியை மக்கள் அச்சத்தில் வாங்கிக் குவிக்கிறார்கள். இதனால் சரக்கு வேகமாக காலியாகி வருகிறது. பல கோழி இறைச்சி கடைகள் தமது விற்பனையை நிறுத்தி வைத்துள்ளன. மலேசியாவிலிருந்து கோழிகள் வரும் வரை கடைகளை திறக்க இயலாது என அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஆக சிங்கப்பூரின் தேசிய உணவான சிக்கன் ரைஸுக்கு உக்ரைன் போரால் இப்படியொரு சோதனை நேர்ந்திருக்கிறது.
சிங்கப்பூர் நகரின் சந்து பொந்துகளில் கூட இருக்கும் சிக்கன் ரைஸ் கடைகள் எனும் அடையாளம் பெரும் சோதனையை சந்தித்து வருகிறது. ரஷ்யாவின் போர் தனது வயிற்றை நிறைக்கும் சிக்கன் ரைஸுக்கு ஒரு அடியைத் தருமென்று ஒரு சிங்கப்பூர் குடிமகன் நினைத்திருக்கமாட்டார். ஆனால் அதுதான் உண்மை. சிங்கப்பூர் மட்டுமல்ல பல உலக நாடுகளில் அடிப்படை உணவு வகைகள் விலை ஏறி வருகின்றன.
பண வீக்கமும் அதிகரித்து வருகிறது. ஆர்டர் செய்து சாப்பிடுவது இருக்கட்டும் இனி அடிப்படை உணவே கேள்விக்குள்ளாகி வருகிறது.
போர் எப்போது முடியும்? உலக உணவு சங்கிலி எப்போது சரியாகும்? இதற்கு நாம் காத்திருக்கத் தான் வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu