சமீபத்தில் சீனாவுக்கு சொந்தமான ஒரு ராட்சத பலூன் அமெரிக்க நிலப்பரப்பின் மீது பறந்ததாக, அமெரிக்க தரப்பிலிருந்து கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை) இரண்டாவது சீன பலூன் லத்தின் அமெரிக்க பகுதியில் பறந்ததாக பென்டகன் கூறியுள்ளது.
சீனாவின் இந்த ராட்சத பலூன் அலாஸ்கா, கனடா வழியாக பறந்து அமெரிக்காவின் மோன்ட்டானா பகுதிக்கு மேல் பறந்ததாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது. இந்த மோன்டானா பகுதியில் தான், அமெரிக்காவில் பல்வேறு அணு ஆயுதத் தளங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை காலை சீன பலூன்கள் கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருப்பதாகவும், அதாவது அமெரிக்காவின் மைய நிலப் பகுதியை நோக்கி, 60,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாக அமெரிக்க விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பேட் ரைடர் கூறியுள்ளார். மேலும் இந்த ராட்சத பலூன்கள் இயக்கக் கூடியது (manoeuvrable) என்றும் ரைடர் கூறியுள்ளார். அமெரிக்க தரப்பு, சீன ராட்சத பலூனைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.
சீன ராட்சத பலூன் சர்ச்சையை தொடர்ந்து அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டு இருக்கின்றன. மறுபக்கம் சுட்டு வீழ்த்த வேண்டாம் என்றும் அமெரிக்க தரப்பு தீர்மானித்திருப்பதாக பிபிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த ராட்சத பலூன்களின் அடிப்பகுதியில், அந்த பலூனை இயக்கத் தேவையான ஆற்றலை சூரிய ஒளி மூலம் உருவாக்கிக் கொள்ளும் சோலார் பேனல்கள், கேமராக்கள், ரேடர்கள், சென்சார்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்குத் தேவையான பொருட்கள் என பல சாதனங்கள் இருக்கின்றன.
இந்த பாகங்கள் சுமார் 2 முதல் 3 பள்ளி பேருந்து அளவுக்கு பெரிதாக இருப்பதாகவும், இந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் இந்த பாகங்கள் எல்லாம் அமெரிக்க நிலப்பரப்பில் விழுந்து உயிர் சேதங்களையோ பொருள் சேதங்களையோ ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் சுட்டுவீழ்த்தாமல் இருப்பதாகவும் பிபிசியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பலூன்கள் எல்லாம் வானிலை குறித்து ஆராய்ச்சி செய்ய பயன்படுத்தும் பலூன்கள் என சீன தரப்பு கூறுகிறது. மேலும் மோசமான வானிலை காரணமாக திசை மாறி அமெரிக்க வாந் எல்லைக்குள் நுழைந்து விட்டதாகவும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்னை தொடர்பாக அமெரிக்காவோடு பேச்சு வார்த்தைகளை நடத்தி ஒரு சுமூகமான தீர்வு காணப்படும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தன் செய்தியறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
ஆனால், அமெரிக்காவோ இப்படிப்பட்ட உளவு பலூன்களை அமெரிக்க வான் பரப்பில் பறக்க விட்டது ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பொறுப்பற்ற செயல் எனக் கண்டித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் அத்தனை நல்ல உறவுமுறை இல்லை என்பது கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க சீன வர்த்தகப் போர், கொரோனா வைரஸ் சர்ச்சை போன்றவைகளை உதாரணமாகக் கூறலாம்.
சீனாவுக்குச் சொந்தமான பலூன்கள் அமெரிக்க வான்வெளிப் பரப்பில் நுழைந்தது அமெரிக்காவின் இறையாண்மையை மீறிய செயல் என அமெரிக்காவின் உள்துறைச் செயலர் (Secretary of State) ஆண்டனி ஃபிளிங்கன் தன் வன்மையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் இது ஏற்றுக் கொள்ள முடியாத மற்றும் பொறுப்பற்ற செயல் என்றும் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறார்.
சமீபத்தில் தான் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் தரப்பில் உயர்மட்ட அதிகாரிகள் கூடி, பல்வேறு பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், தைவான் பிரச்னை, கொரோனா வைரஸ் பெருந்தொற்று போன்ற பல விஷயங்களை விவாதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கூட்டம் பிப்ரவரி 5 மற்றும் 6ஆம் தேதி சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த சீன பலூன் சர்ச்சையினால், அமெரிக்க தரப்பு அதிகாரிகள் அக்கூட்டத்தை அதிரடியாக ரத்து செய்து இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட, இப்போது அமெரிக்க தரப்பு அதிகாரிகள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வது அத்தனை சரியாக இருக்காது என்கிற ஆண்டனி ஃப்ளிங்கனின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் பல்வேறு சர்வதேச ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இந்த கூட்டம் மட்டும் திட்டமிட்டபடி நடந்திருந்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் பல்வேறு தலைப்புகளில் பேச்சு வார்த்தை நடத்திய மிக முக்கிய கூட்டமாக இது இருந்திருக்கும் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
அமெரிக்க தரப்பு இந்த கூட்டத்தை ரத்து செய்தாலும், கூடிய விரைவில் இந்த கூட்டத்தை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சீனா தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவும் இந்த சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறது.
சீன பலூன் சர்ச்சை தொடர்பாக கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சீன தூதருக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், தன் கண்டனங்களை அழுத்தமாக பதிவு செய்யும் என்றும், கனடாவின் உலக விவகாரத்துறை செய்தி தொடர்பாளர் தன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல்வேறு எதிர்க்கட்சியினரும் அமெரிக்க ஆளுங்கட்சிக்கு தங்களுடைய கண்டனங்களையும் எதிர் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கின்றனர்.
2022 ஆம் ஆண்டில், தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூட, இது போன்ற சீனாவின் ராட்சத பலூன்களை தங்கள் வான் வெளியில் கண்டதாகக் கூறியது இந்த நினைவு கூரத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust