உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா, தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் பல பிரச்னைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
சீன பொருளாதாரத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் ரியல் எஸ்டேட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய சமூகங்களைப் போன்று சீனாவிலும் சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்பது பல குடும்பங்களின் கனவு.
சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் (சீனாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில்) ரியல் எஸ்டேட் மற்றும் அதனை சார்ந்த துறைகள் மட்டும் சுமார் 29 சதவீதம் பங்களிக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக சீனாவின் ஜிடிபி தொடர்ந்து நிலையாக வளர்ந்து வந்ததற்கும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறைக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
சீன குடும்பங்களின் கையில் இருக்கும் ஒட்டுமொத்த சொத்துக்களில் சுமார் 70% சொத்துக்கள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான சொத்துக்களாகவே இருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இரு தரவுகளிலேயே சீன பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் & கட்டுமானத் துறை எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சைனா சமீபத்தில் தன் ஐந்தாண்டு காலத்திற்கான அடிப்படை கடன் வட்டி விகிதத்தை (Loan Prime Rate - LPR) 1.5 சதவீதம் குறைத்தது. இதனால் அடிப்படை கடன் வட்டி விகிதம் 4.2% ஆக குறைந்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பினால் சீனாவில் வீட்டுக் கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கும் மக்களின் கடன் சுமை வெகுவாக குறையும் என 'தி இந்து' நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நேஷனல் பீரோ ஆப் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்கிற சீனாவின் புள்ளியில் அமைப்பு வெளியிட்ட தரவுகளில் ரியல் எஸ்டேட் போன்ற சொத்துபத்துகளில் முதலீடு செய்வது, கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 12 சதவீதம் சரிந்து இருப்பதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமையில் செய்தி வெளியாகி உள்ளது.
இதையே கட்டுமானங்களை நில அளவை (சதுர அடி அல்லது சதுர மீட்டர்) கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், சுமார் 45 சதவீதம் சரிந்து இருப்பதாகவும் இது கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சரிவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் ரியல் எஸ்டேட்டில் என்ன நடக்கிறது?
சீனாவில் பெரும்பாலான வீடுகள் ப்ரீ சேல்ஸ் என்று அழைக்கப்படும் முறையில் (வீடு முழுமையாக கட்டி முடிப்பதற்கு முன்பே வீடுகள் வாடிக்கையாளர்களால் வாங்கப்படும்) விற்பனை ஆவதாகக் கூறப்படுகிறது. ஓர் ஆண்டு காலத்தில் சீனாவில் விற்கப்படும் மொத்த வீடுகளில் சுமார் 70 முதல் 80 சதவீத வீடுகள் இந்த பிரி சேல்ஸ் என்று அழைக்கப்படும் முறையில் விற்கப்படுவதாக பிபிசி கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டை வாங்கிய வாடிக்கையாளர்கள், வீட்டை கட்டும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் பில்டர்களுக்கு வங்கி கடன் மூலம் பணத்தைச் செலுத்துவர்.
வீட்டை வாங்கிய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணத்தை செலுத்தி வந்த போதும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த நேரத்தில் வீட்டை முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. வீட்டை வாங்கிய வாடிக்கையாளர்கள் தங்களது வீடுக் கடனுக்கான தவணைகளை செலுத்த மறுத்தனர் அல்லது செலுத்துவதை நிறுத்திவிடுவேன் என அச்சுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாததால் தங்கள் கடனை செலுத்த மறுக்கும் கடனின் அளவு, சீனாவின் ஒட்டுமொத்த கடனில் சுமார் நான்கு சதவீதமாக இருக்கிறது. இதனால் 1.5 லட்சம் கோடி யுவான் கடன் தொகை பாதிக்கப்படும் என 'தி இந்து' பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி சீனா முழுக்க 90 நகரங்களில் சுமார் 300 மிகப்பெரிய குடியிருப்புத் திட்டங்கள் திட்டமிட்டபடி கட்டுமான பணிகள் நிறைவடையாததால் இவர்கள் தங்கள் கடன் தொகையை செலுத்த மறுக்கின்றனர் அல்லது செலுத்தாமல் இருப்போம் என அச்சுறுத்துகின்றனர்.
இதனால் சீன பொருளாதாரத்தில் சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 370 பில்லியன் அமெரிக்க டாலர் வரையான கடன்கள் திரும்ப வராமல் போகலாம் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான தி எவர்கிரண்டே குழுமம் (The Evergrande Group) சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை திரும்ப செலுத்த முடியாமல் திவால் ஆனது. அதுபோக சுமார் 15 லட்சம் வீட்டு வாடிக்கையாளர்களிடமிருந்தும் பணத்தைப் பெற்று இருந்தது.
துரதிஷ்டவசமாக எவர்கிராண்டே குழுமம் லட்சக்கணக்கான மக்களுக்கு சொன்னபடி வீட்டு பணிகளை நிறைவு செய்து வீட்டையும் கொடுக்கவில்லை, மறுபக்கம் தன்னுடைய கட்டுமான பணிகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை விநியோகித்த பல நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுக்கவில்லை. இது இருமுனைக் கத்தி போல ஒட்டுமொத்த சீன பொருளாதாரத்தையும் பாதித்தது.
இப்படி சீனாவில் பல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் கடனை திரும்பச் செலுத்த முடியாமலும் திட்டங்களை நிறைவு செய்ய முடியாமலும் திவால் ஆகி வருகின்றன. இதைத் தான் ஊடகங்கள் 'தி சீனா கிரைசஸ்' என்று அழைக்கிறார்கள்.
சீன அரசு சமீபத்தில் 148 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை தத்தளித்துக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு கொடுத்துள்ளது.
அதோடு வீட்டை வாங்கிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கும் தற்காலிக விடுப்பு காலங்களை அறிவித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
என்னதான் அரசு புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டு வந்தாலும் சீனாவில் இருக்கும் சில அரசு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளே ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை நிறுவனங்களை மீட்கும் திட்டங்களில் பெரிய ஆர்வம் காட்டாமல் தான் இருக்கின்றன.
இப்போது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு உதவி விட்டால், பிற்காலத்தில் தங்களுடைய நிதிநிலைகள் பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் சீன வங்கியாளர்கள் மத்தியில் பார்க்க முடிவதாகச் செய்திகளைப் பார்க்க முடிகிறது.
இத்தனை விஷயங்களை சீன அரசு செய்தாலும் சீனாவின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மீண்டு வரும் என்றும், அந்த மீட்பு பணிகள் தற்காலிகமானதாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளதாக இந்து பத்திரிக்கையின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் தொடர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானங்களின் விலை சரியும் என்றும் பல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து கடனை முழுமையாக திரும்பச் செலுத்த முடியாமல் திவாலாக வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த திட்டங்கள் ரியல் எஸ்டேட் பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்க உதவலாம், ஆனால் சீனாவின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் எந்த ஒரு உற்பத்தி சார்ந்த விஷயத்தையும் முன்னெடுத்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவ செய்ய முடியாது என ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ் என்கிற அமைப்பின் குறிப்பை சுட்டிக்காட்டி உள்ளது பிபிசி ஊடகம்.
1970களில் இருந்து சீனா தன்னை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றிக் கொள்ளும் முனைப்பில் இருந்தது. எனவே சீன அரசு உள்ளூர் நிர்வாகம் வரை பொருளாதார ரீதியிலான இலக்குகளை வைத்து முன்னேறத் தொடங்கியது. அந்த இலக்குகளை அடைய 1970கள் முதல் 2000 ஆண்டு வரை ரியல் எஸ்டேட் மிகப் பெரிய அளவில் உதவியது.
சீன பொருளாதாரத்தின் ஜிடிபி அதிகரிக்க ரியல் எஸ்டேட் துறை எந்த அளவுக்கு முக்கிய காரணமாக இருந்ததோ, அதே அளவுக்கு சீன பொருளாதாரத்தில் கடன் அளவு அதிகரிக்கவும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை பெரும்பங்காற்றியது.
புதிய வீடுகள் மற்றும் கட்டுமானத்திற்கான தேவை இருந்தவரை ரியல் எஸ்டேட் துறையில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு கட்டத்தில் சீன பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகளுக்கான தேவை (டிமாண்ட்) சரியத் தொடங்கியது.
சீனா எந்த அளவுக்கு உற்பத்தி (Production) மூலம் தன் ஜிடிபியை வளர்த்து எடுத்ததோ, அதே அளவுக்கு நுகர்வையும் (Consumption) மிகப்பெரிய அளவில் நம்பி இருந்தது. சீன மக்களின் நுகர்வு சரியத் தொடங்கியதை கடந்த 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத காலத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிகக் கடுமையாக பாதித்தது. சீன பொருளாதாரத்தில் நுகர்வை இது மேலும் பயங்கரமாகக் குறைத்தது.
உலகமே பொருளாதாரத்தை எப்படியாவது மீண்டும் இயக்க வேண்டும் என்கிற நோக்கில் உலக நாடுகள் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, சீனா மட்டும் ஜீரோ கோவிட் திட்டத்தை கையில் எடுத்தது. இதனால் மற்ற உலகப் பொருளாதாரங்கள் எல்லாம் இயங்கி வந்த போதும் சீனாவில் முக்கியமான பல தொழில் மையங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் முழுமையாக செயல்பட முடியாத சூழலில் தத்தளித்தது.
கொரோனா வைரஸ் பிரச்னை சீன மக்களின் சேமிப்பு மற்றும் முதலீடு போன்றவைகளையும், செலவு செய்யும் விதத்தையும் மிகக் கடுமையாக பாதித்தது. மறுபக்கம் சீன இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தினால் தத்தளித்தனர். இவை அனைத்தும் சேர்ந்து சீன பொருளாதாரத்தில் மக்களின் கையில் புழங்கும் பணத்தை வெகுவாக குறைத்தது. விளைவு சீன பொருளாதாரம் கடந்த சில தசாப்தங்களில் காணாத மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையைக் கடந்த சில ஆண்டுகளில் கண்டது சீனா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust