Putin  Newssense
உலகம்

உக்ரைன் போருக்கு பிறகு ரஷியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? - விரிவான தகவல்கள்

சரி, இனி என்ன நடக்கும்? 1990களில் சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு இதே போன்றதொரு பொருளதார முடக்கம் ஏற்பட்டது. அதைப் போன்றதொரு நிலை இப்போது வந்திருக்கும் நிலையில் ரஷ்யா எப்படி சமாளிக்கும்? அதிபர் புடின் சந்தைப் பொருளாதாரத்தை ஒரு கட்டளைப் பொருளாதாரமாக மாற்றும் ஆட்டத்தில் இறங்கியிருக்கிறார்.

Govind

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுத்த போதே ரசியாவின் சந்தைப் பொருளாதாரம் சரிந்து விட்டது. மேற்குலக நாடுகளில் பொருளாதாரத் தடைகள் உடனே அமலுக்கு வந்தன. ரஷ்யாவின் மத்திய வங்கி மூலதனச் சந்தைகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. அதன் கையிருப்பில் இருந்த நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் முடக்கப்பட்டது. போரின் துவக்க நாளில் மாஸ்கோவின் பங்குச் சந்தையும் மூடப்பட்டது. இந்த பாதிப்பை தடுக்க ரஷ்யாவின் மத்திய வங்கி தொலைநோக்கில் பல மூலதனக் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் பயனில்லை.

சரி, இனி என்ன நடக்கும்? 1990களில் சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு இதே போன்றதொரு பொருளதார முடக்கம் ஏற்பட்டது. அதைப் போன்றதொரு நிலை இப்போது வந்திருக்கும் நிலையில் ரஷ்யா எப்படி சமாளிக்கும்? அதிபர் புடின் சந்தைப் பொருளாதாரத்தை ஒரு கட்டளைப் பொருளாதாரமாக மாற்றும் ஆட்டத்தில் இறங்கியிருக்கிறார்.

Russia

எதேச்சதிகார சந்தைப் பொருளாதாரத்திலிருந்து சுயமான அரசதிகாரப் பொருளாரம் வரை

குறைந்த பட்சம் 2000 களின் முற்பகுதியில் இருந்தே ரஷ்யா ஒரு சந்தைப் பொருளாதாரமாக கருதப்பட்டாலும், புட்டினின் ஆட்சி ஆரம்பத்திலிருந்தே பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகளின் மீது விரிவான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

புடின் ஆட்சிக்கு வந்தவுடன் ரஷ்யாவின் எரிசக்தி துறையை முறைகேடாக அரசு ஏகபோகமாக மாற்றினார். 2003-2004 இல் அப்போது நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இருந்த யூகோஸைக் கைப்பற்றினார். அந்நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரரும், ரஷ்யாவின் அப்போதைய மிகப்பெரும் பணக்காரருமான மிகைல் கோடர்கோவ்ஸ்கியை நள்ளிரவில் கைது செய்து ஊழல் குற்றாச்சாட்டில் சிறையில் அடைத்தனர்.

யூகோஸின் சொத்துக்களை நட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு எண்ணெய் நிறுவனமான ரோஸ் நேபிட்டிற்கு மாற்றினார்கள். அதற்கு புடின் தனது ஆதரவாளரான இகோர் செச்சினை தலைவராக அமர்த்தினார். பத்தாண்டுகள் சிறையில் இருந்த கோடர்கோவ்ஸ்கி 2013 இல் புடினால் மன்னிக்கப்பட்டு இப்போது நாடுகடத்தப்பட்டு இலண்டனில் வாழ்கிறார்.

யூகோஸ நிறுவனத்தின் மறைவுக்கு பிறகு ரோஸ்நெஃப்ட மற்றும் அரசுத்துறை பெரும் நிறுவனமான காஸ்ப்ரோம் இரண்டும் ரஷ்யாவின் எரிசக்தி துறையை ஆதிக்கம் செலுத்துகின்றன. பாதுகாப்பு பணிகளில் இருக்கும் புடினின் ஆதரவாளர்கள் காஸ்ப்ரோம் நிறுவனத்திடமிருந்து சட்டப்பூர்வமாகவே பணம் பெறும் ஏற்பாட்டை புடின் செய்திருக்கிறார். இது ஒருவகையான அரசு முதலாளித்துவம்.

இருப்பினும் ரஷ்யாவில் தனியார் முதலாளிகள் இருந்தனர். ஆனால் அவர்கள் புடினால் நியமிக்கப்பட்டு வளர்ந்தவர்கள். இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறை நிறுவனங்களான நோவாடெக், சிபூர் ஆகியவை புடினின் ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்றன. ஒரு சில விதிவிலக்குகள் தவிர புடினின் ஆசி பெறாதவர்கள் யாரும் ரஷ்யாவில் தொழில் செய்ய முடியாது.

கடந்த சில ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் வெற்றி பெற்ற முதலாளிகள் கூட தமது தொழிலை அரசுக்கு விற்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். சான்றாக மாக்னிட் நிறுவனர் தனது சில்லறை வர்த்தக வலைப்பின்னலை 2018 இல் அப்படி விற்றார். இது போக புடினை எதிர்த்த முதலாளிகள் நாடு கடத்தப்பட்டனர். ரஷ்யாவில் முதலாளிகள் புடினின் ஆதரவாளர்களாக தொழில் செய்யலாம். மறுத்தால் சிறை, நாடுகடத்தலலை சந்திக்க வேண்டும்.

இந்தச் சூழலிலும் கூட சிறு நடுத்தர தொழில்களில் தனியார் முதலாளிகள் தோன்றி வளர்ந்து ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு பங்களித்தனர். ரஷ்யாவிலிருந்து பணம் உலக பொருளாதரத்திற்கு சென்று வருவது எளிதாகவே இருந்தது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களும் ரஷ்யாவின் சந்தையில் நுழைந்தன.

Russia

புட்டினின் படையெடுப்புக்கு பிந்தைய பொருளாதாரத்தின் ஆபத்துகள்

உக்ரைன் படையெடுப்பிற்கு பிறகு மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் அமலுக்கு வந்த பிறகு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு விலகின. இந்நிறுவனங்கள் ரஷ்யாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கு சேவை செய்து வந்தன. சிகரெட் உற்பத்தியாளர்கள் கூட ரஷ்யாவை விட்டு விலகிவிட்டன.

இத்தகைய நெருக்கடியில் சிக்கிய ரஷ்யாவில் ஆயிரக்கணக்கனா விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவிற்கு வெளியே செல்லும் பல வான்வழிகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. பணத்தை மாற்றுவதற்கு ரஷ்யா தடை செய்திருப்பதால் பணத்தை எடுத்துச் செல்வதும் சிரமமாயிருக்கிறது.

ரஷ்யாவின் சந்தைப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் எண்ணம் புடினின் நிர்வாகத்திற்கு இல்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது. உக்ரைன் போர் துவங்கி நான்கு நாட்களுக்கு பிறகு வெளிநாட்டு வருவாயில் 80% த்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தும், நாட்டிலிருந்து வெளியேறும் வணிகங்களை தேசியமயமாக்குவதையும் ரஷ்யா செய்கிறது. இதனால் உக்ரைன் போர் முடிந்தாலும் ரஷ்யா ஒரு சந்தைப் பொருளாதாரமாகத் தொடர்வது சாத்தியமற்றது. நிலைமைகள் மேலும் சிக்கலாகும்.

உலோகம், சுரங்கத் துறை மற்றும் தங்கம் ஆகியவற்றிற்கு ஒரு நிலையான விலையை ரஷ்யா அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால் ரூபிளின் பணமதிப்பு வீழ்ச்சியால் இந்த நடவடிக்கைகளுக்கு பலனில்லை. சமீபத்தில் ரஷ்யா தன்னிடமிருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் அதற்கு பணம் செலுத்துவதை டாலர் அல்லது யூரோவுக்கு பதிலாக ரூபிள்களில் செலுத்த வேண்டும் என கோரியுள்ளது. இதை ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளன.

தற்போதைய நெருக்கடிகளைத் தீர்க்க புடினின் நிர்வாகம் பொருளாதாரத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவது மூலம் தீர்வைக் காணலாம் என நினைக்கிறது. ஆனால் இது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குகிறது.

புடின் உருவாக்க விரும்பும் கட்டளைப் பொருளாதாரப்படி பொருட்களின் வெளியுலக விலைகள் உள்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் இதைச் சாதிப்பது எப்படி? ரூபிளின் மதிப்பு குறைந்து வருகிறது. மேலும் பொருட்களின் விலைகளை அரசியல் அதிகாரத்தைக் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். இதன் பொருள் பொருட்களின் தரம், தேவையை ஒட்டி விலைகள் தீர்மானிக்கப்படாமல், புடினின் நிர்வாகத்தோடு உள்ள தொடர்புகளின் படி நிர்ணயிக்கப்பட வேண்டும். இது பொருளாதார வீழ்ச்சிக்குத்தான் வழிகோலும்.

சோவியத் யூனியன் காலத்தில் தொழிற்துறை பொருளாதாரம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டாலும் அதன் சுமையை சோவியத் மக்களே சுமந்தனர். தற்போதும் அதே நிலை ஏற்படலாம். புடினுக்கு ஆதரவான மேட்டுக்குடியினர் மட்டும் தமது செல்வத்தை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இதையெல்லாம் பார்த்தால் ரஷ்யாவின் பொருளாதாரம் என்பது சீனாவின் எதேச்சதிகார சந்தைப் பொருளாதாரத்திலிருந்து விலகி வடகொரியாவின் அரசாங்க சர்வாதிகாரப் பொருளாதாரமாக மாற வாய்ப்பிருக்கிறது.

உக்ரைன் போர் ஆக்கிரமிப்பில் அநீதியாக ஈடுபட்ட அதிபர் புடின் இப்போது மொத்த நாட்டையும் ரஷ்ய மக்களையும் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார். போரில் அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ரஷ்யா இந்த சிக்கலிலிருந்து மீள்வது கடினம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?