சீனாவின் தென்கிழக்கிலும் நேபாளத்தின் வடக்கிலும் இருக்கும் பெரும் நிலப்பரப்பே திபெத் ஆகும். இங்கே புத்த மதத்தினர் அதிகம் வாழ்கின்றனர். அதே போன்று புத்த துறவிகளும் அதிகம். சீன பெருந்தேசிய இனமல்லாத இவர்கள் தனி தேசிய இன மக்கள் ஆவார்கள். சீனா 1949இல் கம்யூனிச நாடாக மாறியதிலிருந்தே திபெத்தியர்கள் தனிநாடாக முயற்சி செய்தனர்.
அதன் விளைவாகப் புத்த மதத்தலைவராக தலாய் லாமா இந்தியாவிற்குத் தனது ஆதரவாளர்களோடு வந்தார். இங்கே தனி திபெத் அரசு, நாடு கடந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
ஈழ அகதிகளுக்கு இல்லாத சிறப்புச் சலுகைகள் இந்தியா வந்த திபெத்தியர்களுக்கு அளிக்கப்படுகின்றது. சீனாவோடு முரண்படும் இந்தியா, தலாய் லாமாவை தன் பிடியில் பாதுகாப்பாக வைத்திருப்பது சீனாவிற்குப் பிடிக்கவில்லை. அவர் இந்தியாவிலிருந்து கொண்டு, பிரச்னை செய்கிறார் என்று சீனா நினைக்கிறது.
மேலும் மேற்குலக நாடுகள் தலாய் லாமாவிற்கு அளவுக்கு அதிகமான வரவேற்பையும், ஊடக வெளிச்சத்தையும் தருகின்றன. இதுவும் சீனாவிற்குப் பிடிக்கவில்லை. திபெத்தியர்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை நீர்த்துப் போகச் செய்ய தலாய் லாமாவைக் கட்டுப்படுத்த சீனா விரும்புகிறது.
அதன் பொருட்டு இப்போதிருக்கும் தலாய் லாமாவிற்கு பிறகு அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனா முடிவு செய்ய விரும்புகிறது. இப்போதிருக்கும் தலாய் லாமா திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
தலாய் லாமாவின் புத்த மத நிறுவனத்திற்கு 1400 ஆண்டுகளுக்கும் மேல் வயதாகிறது. ஒவ்வொரு தலாய் லாமாவும் இறந்த பிறகு அவர் மற்றொரு பிறவியில் லாமாவாக பிறப்பார் என்பது திபெத்தியர்களின் நம்பிக்கை. ஒரு தலாய் லாமா இறந்து போனால் அவர் தனது மறுபிறவி நபரைத் தேர்ந்தெடுப்பார் என மக்கள் நம்புகிறார்கள்.
முந்தைய தலாய் லாமா 1933இல் இறந்தார். அவருடைய வாரிசைக் கண்டுபிடிக்க நான்கு ஆண்டுகள் ஆனது. தற்போதைய தலாய் லாமா 14வது தலாய் லாமா ஆவார். இவருக்கு தற்போது 85 வயது ஆகிறது. இவர் இறந்து போனால் அவரது வாரிசைக் கண்டுபிடிப்பது புத்த மதத் துறவிகளான லாமாக்களின் வேலையாகும்.
ஆனால் இந்த கண்டுபிடிக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்த சீனா விரும்புகிறது. தனக்கு இணக்கமான தலாய் லாமாவை நியமிக்கவும் அது விரும்புகிறது. அதே நேரம் அடுத்த தலாய் லாமா யார் என்பதை திபெத்தியர்களே தீர்மானிக்க வேண்டும் என்று அமெரிக்கா சட்டமே இயற்றிருக்கிறது.
1950 இல் சீனா திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. கடந்த 70ஆண்டுகளாக சீனா தனது கட்டுப்பாட்டை திபெத் மீது திணிக்க முயன்று வருகிறது. இதன் பொருட்டு திபெத்தியர்களின் மத விவகாரத்தில் தலையிட்டது. மடங்களைத் தாக்கியது. லாமாக்களுக்கு எதிரான பிர்ச்சாரத்தை தூண்டியது. மேலும் ஹான் எனப்படும் சீனப்பெருந்தேசிய இனித்தோரை திபெத்திற்குள் குடியமர்த்தியது.
ஆயினும் திபெத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவது சீனாவிற்கு எளிதல்ல. திபெத் மீதான அதன் உரிமையை இன்னும் நியாயப்படுத்த முடியவில்லை. தலாய் லாமாவும் திபெத்திய அரசும் பல ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
திபெத்தை சீனா தன்னுடன் இணைத்துக் கொண்ட போது தலாய் லாமா 1959இல் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார். தற்போது வட இந்தியாவில் உள்ள தர்மசாலாவில் நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசு, தலாய் லாமாவோடு செயல்படுகிறது. ஆனால் தலாய் லாமாவின் அதிகாரத்தை சீனா அங்கீகரிக்கவில்லை.
தலாய் லாமா தனது வாரிசு ஒரு சுதந்திர நாட்டில் பிறந்த ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று கூறுகிறார். மரபு ரீதியாக தலாய் லாமா தனது வாரிசைத் தேர்ந்தெடுத்து இறப்பதற்கு முன்பு தனது உதவியாளர்களிடம் தெரிவிப்பார். அதன் படி தான் மறுபிறவி எடுத்து குழந்தையாக எங்கு இருப்பேன் என்பதைக் கூறுவார். அந்தக் குழந்தையை எங்குத் தேடுவது என்பதையும் தெரிவிப்பார்.
தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் படி மறுபிறவி எடுப்பவர் எங்கு எப்படிப் பிறப்பார் என்பதைச் சொல்வதற்கு தலாய் லாமாவிற்கு முழு அதிகாரம் உண்டு.
இந்த முறை அந்த வாரிசு பிரச்சினை சுலபமாக இருக்காது. உலகம் இரண்டு தலாய் லாமாக்களை சந்திக்க வேண்டி வரலாம். ஒன்று சீனாவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்றொருவர் தர்மசாலாவில் தற்போதைய தலாய் லாமாவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சீனாவில் இருந்து திபெத்தை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுபவராக, தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாதியாகவே சீனா பார்க்கிறது.
சீனாவின் கூற்றுப்படி இந்த லாமா எனப்படும் துறவிகள் நிலங்களை வைத்துக் கொண்டு திபெத்திய மக்களை மதத்தின் பெயரால் ஒடுக்கி வந்தனர். கம்யூனிசம் தான் அவர்களுக்கு விடுதலையைக் கொண்டு வந்தது. அங்கே சாலைகள், இரயில் பாதைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை சீனா கொண்டு வந்திருக்கிறது.
ஆனால் திபெத்தியர்களோ தமது பாரம்பரிய புத்தமதத் துறவற அமைப்பை சீனா சிதைப்பதாக அஞ்சுகின்றனர். இதன் பொருட்டு இரத்தத்தால் திபெத்தியராகவும், சிந்தனையால் சீனராகவும் இருக்கும் அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே திபெத்தின் மீதான தனது பிடியை இறுகப் பிடிக்க முடியும் என்பது சீனாவிற்குத் தெரியும்.
சீன செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியனின் ட்வீட் இந்த வாதத்தை உறுதிப்படுத்துகிறது.
“தலாய் லாமா உட்பட வாழும் புத்த மதத் தலைவர்களின் மறுபிறப்பு சீன சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். அதற்குரிய முறையில் மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளைப் பின்பற்ற வேண்டும்" என்று ஜாவோ 2019இல் ட்வீட் செய்திருந்தார்.
சீனா, புத்த மதத்தை ஒரு பண்டைய சீன மதம் என்று அழைக்கிறது. திபெத்தியர்கள் பலர் தமது வீடுகளில் தற்போதைய தலாய் லாமாவின் புகைப்படங்களை வைத்திருந்தார்கள் என சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1995ஆம் ஆண்டில் பஞ்சன் லாமாவின் மறு அவதாரமாக அங்கீகரிக்கப்பட்ட ஆறு வயது திபெத்திய சிறுவனை சீனா எடுத்துக் கொண்டது. அதற்குப்பிறகு அந்தப் பையனைக் காணவில்லை. இப்போது தலாய் லாமாவிற்கும் அதையே செய்ய விரும்புகிறது.
தற்போதைய தலாய் லாமா சீனாவின் இந்த திட்டத்தை அறிந்திருக்கிறார். 2011ஆம் ஆண்டில் அவர் தனது வாரிசை தானே தேர்ந்தெடுப்பேனே தவிர சீன கம்யூனிஸடுகள் அல்ல என்று கூறியிருக்கிறார்.
2019ஆம் ஆண்டில் அவர், எதிர்காலத்தில் ஒருவேளை நீங்கள் இரண்டு தலாய் லாமாக்களைப் பார்க்கலாம், ஒருவர் நமது சுதந்திர நாட்டிலிருந்தும் மற்றொருவர் சீனாவால் தெரிவு செய்யப்பட்டவராகவும் இருப்பார்கள். எனினும் சீனாவால் தெரிவு செய்யப்பட்டவரை யாரும் ஏற்கப்போவதில்லை, அது சீனாவிற்குத் தலைவலியாக மாறும் என்று கூறியிருக்கிறார்.
பெய்ஜிங்கின் திட்டத்தைத் தடுக்கவே அமெரிக்கா சட்டமியற்றிருக்கிறது. இந்தியா தலாய் லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்திருந்தாலும் ஐக்கியப்பட்ட சீனாவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. திபெத் தனி அரசை அங்கீகரிக்கவில்லை.
புதுடெல்லி அமெரிக்காவின் புதிய மசோதா குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் ராஜாங்க ரீதியில் நடந்து கொள்கிறது. தலாய் லாமா பிறந்த நாளுக்கு இந்தியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பார்கள். அல்லது திபெத்திய அகதிகளிடமிருந்து தெரிவு செய்யப்பட்ட இராணுவத்தை லடாக்கில் கொண்டு நிறுத்துவது போன்றவற்றை இந்தியா செய்கிறது.
தற்போதைய தலாய் லாமாவின் இறுதிக்காலமான வரவிருக்கும் மாதங்கள் மற்றும் வாரங்கள் முக்கியமானதாக இருக்கும். இந்தியா தனது திபெத்திய அரசியலை இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்குமா? மற்ற நாடுகள் திபெத்தில் வாழும் 60 இலட்சம் பௌத்தர்களின் உரிமைக்காக சீனாவோடு முரண்படுமா? தெரியவில்லை.
சீனாவோ உலகை அமைதிப்படுத்த அடுத்த தலாய் லாமாவை தானே தேர்ந்தெடுக்கலாம் என்று நினைக்கிறது. ஆனால் அது அவ்வளவு சுலபமான ஒன்றாகத் தெரியவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust