"உணவின்றி அமையாது உலகு" "போர் மூள்வதும் முடிவுக்கு வருவதும் உணவால் தான்"... இப்படி உணவைக் குறித்துப் பல பெருமைகளைப் பேசிக் கொண்டே போகலாம்.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையிலான போரினால் உக்ரைனிலிருந்து பல ஆயிரக்கணக்கான டன் உணவு தானியங்கள் உலகச் சந்தைக்கு வரவில்லை. அந்த பிரச்னையைத் தீர்க்க சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் தன் உணவு தானியங்களைக் கருங்கடல் வழி ஏற்றுமதி செய்ய ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளதாகத் துருக்கி கூறியுள்ளது. ஜூன் 22 வெள்ளிக்கிழமை துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் வைத்து ரஷ்யா, உக்ரைன், துருக்கி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டொனியோ குட்டரெஸ் ஆகியோர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.
உலகின் ஒன்பதாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான உக்ரைன், எகிப்து, இந்தோனேசியா, துருக்கி, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு தன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து வருவதாக அமெரிக்காவின் விவசாயத் துறை அமைச்சகத் தரவுகள் கூறுகின்றன.
2022 பிப்ரவரி முதல் ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனிடமிருந்து உலக சந்தைக்கு வரவேண்டிய உணவு தானியங்கள் வந்து சேரவில்லை. இது உணவுப் பொருட்களின் விலைவாசியை கடுமையாக உயரச் செய்தது.
உக்ரைன் நாட்டிலுள்ள ஒடெசா துறைமுகத்தில் மட்டும் சுமார் 20 மில்லியன் டன் உணவு தானியங்கள் தேங்கிக் கிடப்பதாக பிபிசி ஊடகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே உணவு தானியங்களின் ஏற்றுமதிக்கு, உக்ரைனின் துறைமுகங்கள் திறக்கப்பட வேண்டியது அவசியம் என்பதால் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
உக்ரைனின் துறைமுகங்களைத் திறந்துவிடுவது மற்றும் உக்ரைனின் உணவு தானியங்கள் ஏற்றுமதி குறித்து, ஐக்கிய நாடுகள் சபை தலைமையில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இஸ்தான்புல்லில் வெள்ளிக்கிழமை அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் உக்ரைனின் வெளியுறவுத் துறைச் செயலர் கூறியுள்ளார். எல்லாம் சுமுகமாக நடந்தால், ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் கூறினார்.
உக்ரைனின் துறைமுகங்களைச் சுற்றி நீர் கண்ணி வெடிகளை தாங்கள் வைக்கவில்லை என ரஷ்யா தரப்பு கூறுகிறது. உக்ரைன் தான் கடலில் கண்ணி வெடிகளை வைத்ததாகவும், மேற்கத்திய நாடுகள் தான் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து ரஷ்ய ஏற்றுமதியை மந்தப்படுத்துவதாகவும் ரஷ்ய தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதுவரை எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என உக்ரைனின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சி ஹொன்சரென்கோ (Oleksiy Honcharenko) பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். மேலும், தாங்கள் ரஷ்யர்களை எப்போதும் நம்பமாட்டோம் என்றும், வெள்ளிக்கிழமை ஒரு இறுதி முடிவு எட்டப்படும் வரை காத்திருப்போம் எனக் கூறியுள்ளார் ஒலெக்சி.
அமெரிக்க உள்துறை அமைச்சகம் ஐக்கிய நாடுகள் மத்தியஸ்தம் செய்த இந்த உணவு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பு ரஷ்யாவுக்கு இருப்பதாகவும் மேற்கூறிய ஒப்பந்தம் மீது கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளது.
நாம் எப்போதும் இது போன்ற சூழலுக்குச் சென்றிருக்கக் கூடாது. உணவை ஆயுதமாக்க வேண்டும் என்கிற நோக்கில் ரஷ்ய தரப்பு எடுத்த முடிவு இது என அமெரிக்க உள்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
* உக்ரைன் துறைமுகங்களில் நீர் கன்னி வெடிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே உக்ரைனின் போர் கப்பல்கள் உணவு தானிய கப்பல்களை உள்ளேயும், வெளியிலும் அழைத்துச் செல்லும்.
* சரக்குக் கப்பல்கள் உக்ரைனின் துறைமுகங்களுக்கு வந்து செல்லும் போது போர் நடவடிக்கைகளை நிறுத்த ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
* உக்ரைன் ஆயுதங்கள் எதையும் கடத்துகிறதா என துருக்கி கண்காணிக்கும்.
* ரஷ்யாவும் தன் உணவு தானியங்கள் மற்றும் உரங்களைக் கருங்கடல் வழி ஏற்றுமதி செய்யலாம்.
இந்த டீலுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி சுமார் இரண்டு மாதங்களாக பணியாற்றியுள்ளன.
திட்டமிட்டபடி இன்று இந்த உணவு ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பெரிய, முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சில கைதிகளையும் பரிமாறிக் கொள்ளவிருக்கிறார்கள்.
மால்டோவா நாடு தன் மொத்த கோதுமை இறக்குமதியில் 92 சதவீதத்தை உக்ரைனிலிருந்து மட்டுமே வாங்குகிறது. லெபனான் 81 சதவீதமும், கத்தார் 64 சதவீத கோதுமையையும் உக்ரைனிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust