(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். Newssensetn தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
‘சூரியன் அந்தி சாயாத நிலம் எங்களுடையது’ எனப் பிரித்தானியப் பேரரசு முழங்கியதன் வரலாற்றுப் பின்னணியில், உலகெங்கும் ஆங்கில மொழி கடல் போல் எல்லைகளற்று, பரந்துவிரிந்து, சமூகம், அரசியல், இனக்கலவை, வரலாற்றுக் கலவை, வணிகத்தின் அடிப்படைத் தேவை என பல்வேறு முனைகளில் பெருவீச்சில் ஆக்கிரமித்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், ஆங்கிலம் உருவான, ஆங்கிலத்தைத் தேசிய மொழியாகக் கொண்ட அயர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளடங்கிய ஐக்கியப் பேரரசில் (United Kingdom) ஆங்கிலத்திற்கு ஈடாக மண்ணின் மொழி அரசியல், சமூகம், கல்வி, அரச நிர்வாகம், வேலைவாய்ப்பு, உள்ளூர் தொழிற்சாலைகளில் முன்னுரிமை என்னும் முழக்கங்கள் கூர்மையடைவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இதனை அறிய ஐக்கியப் பேரரசு/பிரித்தானியாவின் மொழிகளின் வரலாற்றையும் ஆங்கிலம் உருவான கதைகளையும் அறிவது அவசியம்!
மேற்கு ஆசியப்பகுதி பழங்குடிகளின் தொடர்ச்சியாகவும், மெசோபடோமியாவின் பழங்குடிகளின் வழித்தோன்றல்களாகவும் இருக்கலாம் என்ற குழப்பமான தகவல்கள் இருப்பினும் கி.மு 8 முன்பிருந்தே ஐரோப்பியாவின் பெரும் பகுதியில் வீற்றிருந்தவர்கள் செல்டிக் பழங்குடியினர்.
கி.மு 7-8ஆம் நூற்றாண்டுக் காலங்களில் ரோமானியர்கள் இவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் கிரேக்கர்கள் இவர்களை கடும் போர் புரியும் முரடர்கள் என்றும் வர்ணித்திருக்கிறார்கள். ஐரோப்பியாவில் முழுக்கால் சட்டை (Pants) அணிந்த முதல் மனிதக்கூட்டம் செல்ட்ஸ் மக்களே என்றும் வரலாறு உண்டு.
கி.மு 1 ஆம் நூற்றாண்டில், ஜீலியஸ் சீசர் தலைமையில், ரோமானியப் பேரரசை விரிவுபடுத்திய போரில், 9 ஆண்டுகள் தொடர் போராட்டங்களின் பின்னர் செல்டிக் பிரிவினர் ஐரோப்பியப் பெரு நிலப்பரப்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அதேவேளை, ஜூலியஸ் சீசரால் இன்றைய பிரித்தானியத் தீவிலிருந்த செல்டிக் மக்களை வெல்ல முடியவில்லை.
ஆனால், அதன் பின்னர் ரோமானியர்கள் நடத்திய போரில் பிரித்தானியாவின் மேற்குக் கரைக்கு இடம்பெயர்ந்தவர்கள் வேல்ஷ் (Welsh) மற்றும் கார்னிஷ் (Cornish) பிரிவாகினர், வடக்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தோர் ஸ்காட்டிஷ் (Scottish) ஆகினர்.
கிட்டத்தட்ட 400 வருடங்கள் தொடர் ஆக்கிரமிப்புகளால், வேல்ஷ், கார்னிஷ் மொழிகள் மேற்குக் கரையோரப் பகுதிகளிலும் கேலிக், ஸ்காட்டிஷ் மொழிகள் வடக்குத் தீவுப்பகுதிகளிலும் பேசப்பட்டாலும், பிரித்தானியாவின் ஏனையப் பகுதிகள் லத்தீன மொழிகளும் லத்தீனக் கலவைக் கொண்ட மொழியாடல்களும் உலா வரத்தொடங்கின.
அடுத்ததாக, ஐரோப்பியக் கண்டத்தின் பெரு நிலப்பரப்பில் வெள்ளமும் குளிரும் வெட்டியெடுக்க, பிரித்தானியத் தீவில் கடும் வெயில் கொதித்தெழப் பழங்கள், காய்கள் பயிரிட வேளாண்மைக்கான இடம் தேடி வந்த ஜெர்மானியப் பழங்குடிப் பிரிவு, ரோமானிய பிரித்தன் பகுதியில் கடும் போர் புரிந்து குடியேறுகின்றனர்.
இக்கூட்டத்திற்குத் தான் ஆங்கிலோ-சாக்சன் (Anglo-saxson) என்று பெயர். ஸ்காட்லாந்திற்குத் தெற்கே நார்த்தம்பிரியா (Northumbriya), பிரித்தானியத் தீவின் நடுப்பகுதி மெர்சி (Mercy), தெற்குக் கரையோரம் சசக்ஸ் (Sussex), தென்மேற்குக் கரையோரம் வெசக்ஸ் (Wessex), கிழக்குக் கரையோரம் எசக்ஸ் (Essex), கிழக்கு ஆங்கிலேயப் பகுதிகள் பிரிவடைகின்றன.
அதனைத் தொடர்ந்து நார்வே, சுவீடன், டென்மார்க் நாடுகளைச் சார்ந்த கடல்-நாடோடிகளான வைக்கிங்ஸ் (Vikings), கிட்டத்தட்ட 2 லட்சம் பேர், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஐசுலாந்து, பிரித்தானியாவின் பெரும் பகுதிகளும் புலம்பெயர்கின்றனர்.
வட ஜெர்மானியப் பகுதி, டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட இடங்களிலிருந்து பிரித்தானியத் தீவிற்கு வந்திருந்த ஜெர்மானியப் பழங்குடிகளான ஆங்கிலோ-சாக்சன் மக்கள் பேசிய மேற்கு ஜெர்மானியக் கிளை மொழியில் (வட்டார மொழி) இருந்து பழைய ஆங்கிலம் பிறந்ததாகச் சொல்கிறார்கள்.
நோர்வே வைக்கிங்க் பழங்குடிப் பிரிவினர் மேற்கு ஃபிரன்சு பிரிவினர், ரோமானியக் கேலியப் பிரிவினர் ஆகியோர் கலவையில் உருவான நோர்மென் பிரிவினர் பிரித்தானியாவிற்கு வருகிறார்கள்.
ஃபிரன்சு மொழி ஆதிக்கமும் லத்தீன் மொழி ஆதிக்கமும் ஊடுருவி கலவையான ஆங்கிலமாக கி.பி. 1300களின் பின்பு மாற்றம் காண்கிறது.
கி.பி. 1400-16000களில் ஆங்கிலம் இவையெல்லாவற்றிலும் இருந்து புது வடிவம் பெறுகிறது.
ஆங்கிலோ-சாக்சன் நிலங்கள், வேல்ஷ், கார்னிஷ், ஸ்காட்டிஷ், அயர்லாந்து ஆகியவற்றின் கூட்டாக ஐக்கிய அரசாட்சி (United Kingdom) உருவானப்பின், எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலமாக மாறின எனலாம்.
ஐரீஷ் இனத்தின் தனித்த பண்பாட்டினைப் பாதுகாக்க 16ஆம் நூற்றாண்டில் எழுந்த போர்க்குரலலில் உருவான ஐரீஷ் தேசிய உணர்வெழுச்சியால், 1922இல் இன்றைய வட அயர்லாந்து நிலங்களைத் தவிர்த்த ஏனையப் பகுதிகள் சுதந்திர அயர்லாந்தாக மாறின.
1707இல் ஸ்காட்லாந்து பிரித்தானியாவுடன் இணைக்கப்பட்ட பின், 1872 கல்விச்சட்டம், ‘ஆங்கிலம் ஒன்றே கல்வி மொழி’ எனக் கட்டாயப்படுத்தின. மொழிச் சுதந்திரத்திற்காகத் தொடங்கப்பட்ட போராட்டம் தான் ஸ்காட்லாந்தின் தேசிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.
ஐரீஷ் மொழியினையும் பண்பாட்டையும் தாங்கிப் பிடித்தப் போர்க்குரலில் சுதந்திர அயர்லாந்து உருவானது. ஸ்காட்டீஷ், கேலிக் மொழிகளுக்கான நில உரிமைக்கான போராட்டம், தனி நாடு போராட்டமாகி, இன்று ஐக்கிய அரசாட்சிக்குள் இருக்கும் ஒரு நாடாக மாறி பல்வேறு சுயாட்சி அதிகாரம் பெற்றிருப்பினும், முழுமையான சுதந்திரத்திற்காக ஸ்காட்லாந்து நாட்டினர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றனர்.
அதேபோல, வேல்ஷ் மக்களும் கார்னீஷ் மக்களும் தங்கள் மொழிக்கான உரிமைக்குரலை எழுப்பி வருவதோடு, சில நிர்வாக மாற்றங்களையும் வெற்றிகளையும் கண்டு வருகின்றனர். தனிநாட்டிற்கான போராட்டமாக மாறவில்லையெனினும், ஒருவேளை, மாறாமல் கூடப் போகலாம் என்றாலும், மொழிக்கான உரிமைக்குரல், சுயாட்சி வரை நீளவே அதிக வாய்ப்புள்ளது, அதற்குரிய அறிகுறிகள் சில பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய வெளியேறல் (Brexit)ற்கு பிறகு தென்படத்தொடங்கியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust