Hiroo Onoda: ஓர் உத்தரவுக்காக 29 ஆண்டுகள் வனத்தில் பதுங்கி வாழ்ந்த ஜப்பானிய ராணுவ வீரர்! Twitter
உலகம்

Hiroo Onoda: ஓர் உத்தரவுக்காக 29 ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்த ஜப்பான் வீரரின் விறு விறு கதை!

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்துவிட்டது எனத் துண்டுச் சீட்டுகளை அவர்கள் வாழும் இடத்தில் கொண்டு சேர்த்த போது, எதிரிகள் தங்களைப் பிடிக்கச் சூழ்ச்சி செய்வதாகக் கருதினார் ஹீரோ ஒனொடா.

Gautham

நாட்டுக்குள் மக்கள் தங்கள் விருப்பம் போல் வாழ வேண்டும் என்றால், பல நாட்டு எல்லைகளை ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இப்போதும் இருக்கிறது.

உலகில் எத்தனையோ துறைகள் இருந்தாலும், கடந்த பல நூற்றாண்டுகளாக ஒரு ராணுவ வீரருக்குக் கொடுக்கப்படும் மரியாதை இன்று வரை பல நாடுகளில் குறையவில்லை எனலாம்.

அப்பேற்பட்ட ராணுவம், எப்போதும் உத்தரவுகளின் கீழ் தான் செயல்படுகின்றன. ஒரு ராணுவ உயர் அதிகாரியிடமிருந்து ஒரு வேலையைச் செய்யச் சொல்லி உத்தரவு வந்துவிட்டால், அவரின் கீழ் பணியாற்றும் வீரர்களுக்குப் பதில் சொல்லவோ, திட்டத்தை மாற்றிச் செயல்படுத்தும் உரிமையோ, அதிகாரமோ, சுதந்திரமோ எதுவும் கிடையாது. வேலையைச் செய்து முடித்தே ஆக வேண்டும் அவ்வளவு தான்.

அப்படி இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஒரு ஜப்பானிய வீரருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவைச் சிரமேற்கொண்டு காட்டில் தன் வேலையைத் தொடங்கியவர், இரண்டாம் உலகப் போர் முடிந்தது கூடத் தெரியாமல், கிட்டத்தட்ட 29 ஆண்டுகளைக் காட்டிலேயே கழித்துள்ளார். அவர் பெயர் ஹீரோ ஒனொடா. யார் அவர்? அவருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவு என்ன? இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் எப்படி மீண்டும் தன் நாட்டுக்குத் திரும்பினார்? கடைசிக் காலத்தில் என்ன செய்தார்? விவரங்கள் இதோ...!

One Year of Newssensetn

இம்பீரியல் ஜாப்பனிஸ் ஆர்மியில் சேர்ந்த இளைஞர்

ஹீரோ ஒனொடா (Hiroo Onoda) ஜப்பான் சாம்ராஜ்ஜியத்தின் கைசோ மாவட்டத்தில் 1922ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பிறந்ததாகவும், சுமார் 17 வயதிலேயே சீனாவுக்கு ஒரு வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்க்கச் சென்றதாகவும் சில வலைத்தளங்கள் சொல்கின்றன.

1942ஆம் ஆண்டு, ஹீரொ ஒனொடா ஜப்பான் ராணுவத்தில் சேர்ந்ததாக பிபிசி வலைதளம் சொல்கிறது. அவரது சுறுசுறுப்பு, புத்திசாலித்தனத்தைக் கண்டு, அவருக்கு கொரில்லா பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் அவ்வலைத்தள கட்டுரை ஒன்று சொல்கிறது. 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹீரோ பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள லுபாங் தீவின் வனப் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். 

அத்தீவில் எதிரிகள் நிலை பெறாமல் இருக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்யுங்கள். ஜப்பான் ராணுவம் திரும்ப வரும் வரை லுபாங் தீவை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதே ஹீரோ ஒனொடாவுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவு என்கிறது பிபிசி வலைதளம்.

எக்காரணத்தை முன்னிட்டு, அவர் எதிரி நாட்டிடம் சரணடைந்துவிடவோ அல்லது தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவோ கூடாது என்றும் அவர் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சில வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. 

ஜப்பானிய ராணுவ வீரர்களோடு இணைந்த பிறகும், பல்வேறு காரணங்களால், எதிரி நாட்டுப் படைகள் லுபாங் தீவில் நுழைவதை ஹீரோ ஒனொடோவால் தடுக்க முடியவில்லை. 

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜப்பான்

இரண்டாம் உலகப் போரில் ஒரு பகுதியாக, பிலிப்பைன்ஸ் நிலப்பரப்புகளை ஜப்பான் பெரிய அளவில் ஆக்கிரமித்து இருந்தது. பிலிப்பைன்ஸின் நிலப்பகுதிகளை மீட்க அமெரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடர்ந்து ஜப்பானுக்கு எதிராகப் போரிட்டன.

கடுமையான வான் வழி மற்றும் நில வழித் தாக்குதலால், ஜப்பானியப் படைகள் காட்டுக்குள்ளேயே ஒளிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

எதிரி நாட்டுப் படைகளின் தாக்குதலில் பல ஜப்பானிய வீரர்கள் உயிரிழந்தனர். ஹீரோ ஒனொடா மற்றும் 3 ஜப்பானிய வீரர்கள் மட்டுமே தனியாகக் காட்டுக்குள் பதுங்கி வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

வெடி குண்டால் அடிபணிந்த ஜப்பான்

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தன்னால் முடிந்த வரை உக்கிரமாகப் போராடிக் கொண்டிருந்த போது, அமெரிக்கா "ஃபேட் மேன்" "லிட்டில் பாய்" என இரண்டு அணு குண்டுகளை ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்கள் மீது வீசி பல்லாயிரக் கணக்கான ராணுவ வீரர்கள், பொது மக்களைக் கொன்று குவித்தது.

அதுவரை திமிறிக் கொண்டிருந்த ஜப்பான், அணு குண்டின் வலிமையையும், இழப்புகளையும் தாங்க முடியாமல் சரணடைந்தது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக ஜப்பான் அரசர் ஹிரோஹிடோ அறிவித்தார். அதே ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சரணடைவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஜப்பான்.

ஜப்பான் போரில் சரணடைந்துவிட்ட செய்தி பல நாட்டில் போரிட்டுக் கொண்டிருந்த ஜப்பானிய வீரர்களுக்கு தெரிய வந்து, அவர்கள் முறையாக ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனர். ஆனால் ஹீரோ ஒனொடா போன்ற சிலருக்கு மட்டும் ஜப்பான் உண்மையில் சரணடைந்து போர் முடிவுக்கு வந்த செய்தி சரியாக போய்ச் சேரவில்லை அல்லது அவர்கள் நம்ப மறுத்தனர்.

ஹீரோ ஒனொடோ உடன் பயணித்த 3 ஜப்பானிய வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். கடைசியில் ஹீரோ ஒனொடோ மட்டும் தனியாக லுபாங் வனப்பகுதியில் வாழத் தொடங்கினார்.

தகவல் தொடர்பு

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்துவிட்டது எனத்  துண்டுச் சீட்டுகளை அவர்கள் வாழும் இடத்தில் கொண்டு சேர்த்த போது, எதிரிகள் தங்களைப் பிடிக்கச் சூழ்ச்சி செய்வதாகக் கருதினார் ஹீரோ ஒனொடா. 

இதற்கிடையில் அவ்வப்போது உள்ளூர் காவலர்களோடு சில துப்பாக்கிச் சூடு சண்டைகளும் அரங்கேறின. 

பிறகு ஜப்பானின் 14ஆவது ஏரியா ஆர்மியின் ஜெனரலாக இருந்த டொமொயுகி யமஷிடா (General Tomoyuki Yamashita) அவர்களே சரணடைவதற்கு உத்தரவிட்ட ஆணைகளைக் காட்டில் துவினர். 

பிலிப்பைன்ஸ் நாடு திட்டமிட்டபடி உத்தரவு ஆணைகள் ஹீரோ ஒனொடாவின் கைகளில் கிடைத்தும், அவர் அந்த உத்தரவுகள் போலியானவை என நம்ப மறுத்துவிட்டார்.

1959ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானே, ஹீரொ ஒனொடா இறந்துவிட்டதாகக் அறிவித்தது. ஆனால் ஹீரோ ஒனொடா "தூதன் வருவன், மழலை விழிநீர் துடைப்பன், மாரி பெய்யும்....." என ஜப்பான் ராணுவத்தின் தூதுக்காகக் காத்திருந்தார்.

நொரியோ சுஸுகி (Norio Suzuki)

பல ஆண்டுகள் கழித்து, நொரியோ சுஸுகி என்கிற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர், ஹீரோ ஒனொடோவைத் தேடிப் புறப்பட்டார். 1974ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நொரியோ, தான் தேடி வந்த ஹீரோ ஒனொடோவைக் கண்டுபிடித்தார்.

அவருடன் பேசிப் பழகி, ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு, அவர் ஜப்பான் ராணுவத்திடமிருந்து மேற்படி உத்தரவுக்காகக் காத்திருப்பதாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அரசு நிர்வாகத்திடமும் தெரிவித்தார். 

அதுநாள் வரை ஹீரொ ஒனொடொ இறந்துவிட்டதாகக் கருதிய ஜப்பான் ராணுவத்துக்கு, அவரின் புகைப்படத்தை எல்லாம் பார்த்த பிறகு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹீரோ ஒனொடோவின் உயர் அதிகாரியாக இருந்த மேஜர் யொஷிமி தானிகுசியைக் கண்டுபிடித்தது ஜப்பான். அவரோ போர் நிறுத்தத்துக்குப் பின் சரணடைந்துன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று புத்தக வியாபாரியாக வாழ்கையைக் கழித்துக் கொண்டிருந்தார்.

1974ஆம் ஆண்டு மேஜர் யொஷிமியிடமிருந்து, ஹீரொ ஒனொடோவுக்கு சரணடையுமாறும், போர் நடவடிக்கைகளைக் கைவிடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

1974 மார்ச் 11ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸிடம் தன் குறுவால், துப்பாக்கி, தோட்டாக்களைக் கொடுத்துச் சரணடைந்தார். ஜப்பானைப் பூர்வீகமாகக் கொண்ட ராணுவ வீரர்களிலேயே கடைசியாகச் சரணடைந்த வீரர் என்கிற பெருமைக்குச்  சொந்தக்காரர் ஹீரோ ஒனொடொ. 

தைவானில் பிறந்து ஜப்பான் ராணுவத்தில் பணியாற்றிய டெரு நகமுரா (Teruo Nakamura) தான் கடைசியாகச் சரணடைந்த ஜப்பான் ராணுவ வீரர் என்பது நினைவுகூரத்தக்கது.

புதிய வாழ்கை

ஹீரோ ஒனொடொ ஜப்பான் திரும்பிய போது அவருக்குக் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. "No Surrender: My Thirty-Year War" என்கிற பெயரில் ஒரு சுயசரிதையைக் கூட எழுதி வெளியிட்டார், அது விற்பனையில் சக்கை போடு போட்டது. 

தனக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை யசுகுனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார். அதிக புகழ் வெளிச்சத்தால் ஜப்பானில் வாழ்வதற்கே சிரமப்பட்டார். ஜப்பானிய கலாச்சாரம் சீர்கெடுவதை எண்ணி வருந்தினார். ஒருகட்டத்தில் பிரேசில் நாட்டில் குடியேறி கால்நடைகளை வளர்க்கத் தொடங்கினார். 

1976ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஒரு சராசரி வாழ்க்கைக்குத் திரும்பினார்.1984ஆம் ஆண்டு ஜப்பானுக்குத் திரும்பியவர் ஒனொடொ இயற்கைப் பள்ளியைத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 3 மாதங்களைப் பிரேசில் நாட்டில் அவர் வாழ்ந்ததாகப் பல வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. ஒற்றை ராணுவ உத்தரவுக்காக சுமார் 29 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த மனிதர், 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம்16 ஆம் தேதி காலமானார் ஹீரோ ஒனொடா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?