Jaffna Fort NewsSense
உலகம்

இலங்கை யாழ்ப்பாணம் கோட்டை : குருதியினால் கட்டப்பட்ட ஒரு நிலத்தின் வரலாறு

NewsSense Editorial Team

யாழ்ப்பாணக் கோட்டை சிங்கள மொழியில் யாழ்ப்பாணப் பலகோடு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்டை ஐரோப்பிய காலனியவாதிகள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட ஒன்றாகும்.

நினைவுகளைச் சுமந்து நிற்கும் கோட்டை

இந்தக் கோட்டை ஐரோப்பிய வல்லரசுகள் துவங்கி, இலங்கை இராணுவம், புலிகள் வரை பல கதைகளையும், நினைவுகளையும், பலிகளையும் சுமந்த வண்ணம் அமைதியாக இருக்கின்றது.

யாழ்ப்பாண அரசு 1619 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது போர்த்துக்கீசியர்கள் நல்லூரிலிருந்த தலைநகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர்.

அப்போது போர்த்துக்கீசியரின் தலைமையகம் கோவாவிலிருந்தது. 1619 ஆகஸ்ட் மாதத்தில் கோவா தலைமையகத்திலிருந்து தளபதி பிலிப்பே டி ஒலிவேராவுக்கு யாழ்ப்பாணத்தில் கோட்டை ஒன்றைக் கட்டிக் கொள்ள அனுமதி கிடைத்திருந்தது.

Jaffna Fort

போர்த்துக்கீசிய ஆட்சி

பிலிப்பே டி ஒலிவேரா 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்த போர்த்துக்கீசியத் தளபதிகளில் ஒருவர். இவர்தான் யாழ்ப்பாணத்தை போர்த்துக்கீசிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர். கத்தோலிக்க மதத்தின் கடுங்கோட்பாட்டுவாதியான இவர் பிரபலமான நல்லூர்க் கந்தன் கோவில் உட்பட யாழ்ப்பாணத்திலிருந்த பல இந்தக்கோவில்களை இடித்தார். நல்லூர் கோவில் அழிக்கப்பட்டது தொடர்பாக குவைறோஸ பாதிரியார் எழுதிய நூலிலில் குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாண அரசின் கீழிருந்த பகுதிகளின் தலைநகரமாக யாழ்ப்பாண நகரத்தை உருவாக்கியவரும் இவரே. சுமார் எட்டு வருடங்கள் காப்டன் மேஜராக யாழ்ப்பாணத்தை நிர்வகித்து வந்த ஒலிவேரா 1627 ஆம் ஆண்டு தனது 53 வயது வயதில் இறந்தார்.

பிற சமயங்களின் பால் கடுமையாக நடந்து கொண்டாலும் யாழ்ப்பாணத்தில் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பயன்படும் வகையில் "மிசரிக்கோடியா" என்று அழைக்கப்பட்ட மருத்துவமனையை தன் சொந்த செலவில் ஒலிவேரா கட்டிக் கொடுத்தார். மக்களும் அவரை பிலிப்பே ராஜா என்று அன்புடன் அழைத்து வந்ததாக குவைறோஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார்.

யாழ்ப்பாணக் கோட்டை கட்டும் வேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் கோட்டை உபயோகத்தில் இருந்தாலும் 1637 வரை கூட இது முற்றிலும் கட்டிமுடிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட சதுர வடிவிலான யாழ்ப்பாணத்துக் கோட்டையின் நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரை வட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்க தேவாலயம், காப்டனின் வீடு, மருத்துவமனை மற்றும் சில கட்டிடங்களும் இருந்தன.

கோட்டை

டச்சுக்காரர்கள் ஆளுகையில்

யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர்கள் 1658 இல் கைப்பற்றினர். இதனைக் கைப்பற்றிய டச்சுக்கார தளபதி ரிஜ்கோவ் வான் கொனெஸ் பின்னாளில் இலங்கையில் டச்சுக்காரர் வசமிருந்த பகுதிகளுக்கான ஆளுநராக பதவி வகித்தார். 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கோட்டையை மட்டுமல்ல, மன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய போர்த்துக்கீசியர் தளங்களையும் அவர் கைப்பற்றினார். வெறும் 2,139 வீரர்களையும், 1,550 மாலுமிகளையும் கொண்ட 21 கப்பல்களை வைத்தே வான் கொனெஸ் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை 1673 ஆம் ஆண்டு இவர் 6,000 படை வீரர்களைக் கொண்டு தாக்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

போர்த்துக்கீசியர் கட்டிய யாழ்ப்பாணத்துக் கோட்டையை இவர்கள் சில காலம் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்து விட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச்சுற்று அரண்களையும் கட்டினர். டச்சுக்காரர்கள் காலத்தில்தான் யாழ்ப்பாணக் கோட்டை வலிமை மிக்க கோட்டையாகத் திகழ்ந்தது.

1795 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக் கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும் 1948 வரை பிரிட்டீஷ் காவற்படையின் கட்டுப்பாட்டிலிருந்தது. அதற்குப் பிறகு இலங்கை இராணுவம் இதை பயன்படுத்தியது.

1984 – 1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி புலிகளின் கட்டப்பாட்டிலிருந்த போதும் யாழ்ப்பாணக் கோட்டை மட்டும் இலங்கை இராணுவத்தின் வசமே இருந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களுக்குப் பிறகு அதைக் கைப்பற்றினர். பின்னர் புலிகள் கோட்டையின் பெரும்பகுதியை அழித்தனர். 1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றிய போது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாடு பிரதேசத்தினுள் வந்தன.

இப்படி யாழ்ப்பாணக் கோட்டையின் கட்டுமானம் துவங்கி 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்தக் கோட்டை பல போர்களைப் பார்த்திருக்கின்றது. குருதியில் தோய்ந்து கட்டப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?