Saudi Arabia

 

Facebook

உலகம்

செளதி அரேபியா வரலாறு : அந்நாட்டு அரச குடும்பம் எங்கெல்லாம் முதலீடு செய்து இருக்கிறது? | 3

Govind

மத்திய கிழக்கில் வேலை பார்த்து திரும்பியவர்களிடமோ, அல்லது அங்கே வேலை பார்த்துக் கொண்டிருப்போரிடமோ பேசிப் பாருங்கள். “சார், துபாய்ல என்ன சம்பாதிச்சாலும் கையில நிக்காதுங்க. எதுனா கைல துட்டு சேர்க்கனும்னா செளதில வேலை பார்க்கணும்ங்க” என்பது அவர்களில் பலரும் சொல்லும் கருத்தாக இருக்கும்.

துபாயில் சம்பாதித்த காசை அள்ளி இறைத்து செலவழிக்க பல வழிகள் உண்டு. குடி, டான்ஸ் பார்கள் உள்ளிட்ட இரவுக் கலாச்சாரமும், நுகர்பொருள் மோகமும் கொண்டது துபாய். ஆனால் செளதியில் அது போன்ற “வசதிகள்” இல்லை என்றாலும் அங்கே உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மலிவாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

Saudi People

மானியமும், வஹாபிசமும்


செளதி மக்கள் அரிசிக்கு அடுத்து பிரதானமாக உட்கொள்வது குப்பூஸ் எனப்படும் ஒருவகை ரொட்டி. இது கோதுமை அல்லது மைதாவில் செய்யப்படுவது. கடந்த பல பத்தாண்டுகளாக இந்த ரொட்டிக்கு மானியங்கள் வழங்கி அதன் விலை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது செளதி அரசு. சில இடங்களில் இந்த ரொட்டியை இலவசமாகவும் வழங்குகின்றனர்.

மேலும் தனது சொந்த மக்களுக்கு பல்வேறு வகையான மானியங்களையும் அனைவருக்குமான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுவதையும் செளதி அரசு உத்திரவாதப் படுத்தியுள்ளது. இவையனைத்தும் எண்ணைய் வர்த்தகத்தில் கிடைக்கும் மலையளவு லாபத்திலிருந்து செய்யப்படும் சில்லறைச் செலவுகள்.

வகாபிய கடுங்கோட்பாட்டுவாதத்தைக் கொண்டு கலாச்சார ரீதியிலும், இவ்வாறான சில்லறை மானியங்களைக் கொண்டு பொருளாதார ரீதியிலும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது செளதி அரசு.

செளதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் கச்சா எண்ணை மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் இருந்து கிடைக்கிறது.

Oil resources

ஆபத்தில் செளதி பொருளாதாரம்

அதே நேரம் செளதியின் எண்ணைய் பொருளாதார சார்பு மூன்று அம்சங்களில் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.

முதலாவதாக, புவி வெப்பமடைதல், காற்று மாசு உள்ளிட்ட சூழலியல் அபாயங்கள். காற்று மாசடைவதையும் தவிர்க்க நம்மிடம் மின்சார வாகனங்களுக்கு மாறி விடுமாறு அரசுகள் சொல்லத் துவங்கி விட்டன. அதன் பொருட்டு அடுத்த சில ஆண்டுகளிலேயே பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு பெருமளவு குறைந்து விடும்.

இரண்டாவதாக, தற்போதைய ஓபெக் நாடுகளின் நிலத்தடி கச்சா எண்ணையின் இருப்பு மிக வேகமாக குறைந்து வருகின்றது. இதை peak oil crisis என்கின்றனர். அடுத்த மூன்று அல்லது நான்கு பத்தாண்டுகளில் இந்நாடுகளின் நிலத்தடி கச்சா எண்ணை முற்றிலுமாக வறண்டு விடும் என்கின்றனர் நிலவியல் வல்லுநர்கள். இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது செளதி அரேபியா தான்.

மூன்றாவதாக, அமெரிக்கா தனது சொந்த எண்ணை உற்பத்தியை மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கி விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தனது மத்திய கிழக்கு சார்பை குறைத்து கொள்வதை நோக்கி அமெரிக்கா நடை போடத் துவங்கி விட்டது.

Saudi Kingdom

செளதி அரச குடும்பத்தின் முதலீடு

செளதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவிற்கு முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த நிறுவனங்கள், உட்கட்டமைப்புகள், வங்கிகள், நிதிமூலதன நிறுவனங்கள், அமெரிக்க பங்குச் சந்தை, அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தேசங்கடந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள், ஊடகங்கள், ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் என வகைதொகையின்றி பல துறைகளில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளனர்.

செளதியில் 2018-ம் ஆண்டு வரை சினிமாக்களுக்கு தடை இருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்த பாலைவன ராஜ்ஜியம் ஹாலிவுட் இலட்சியங்களை கொண்டிருந்தது. எண்ணெய் பொருளாதாரத்திற்கு மாற்றாக தன்னை ஒரு திரைப்பட மையமாக மாற்றும் வகையில் பொழுது போக்குத்துறையில் செளதி, 64 பில்லியன் டாலரை முதலீடு செய்திருக்கிறது.

ஆன்டனி மேக்கி நடித்த மார்வெல் ஸ்டூடியோவின் புதிய கேப்டன் அமெரிக்கா எனும் ஆக்சன் திரைப்படம் முழுவதும் செளதியில் படமாக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் காரோட்டுவதற்கு தடை, உணவகங்களில் பாலியல் ரீதியிலான பிரிவு, இசைக் கச்சேரிகளுக்கு தடை இவையெல்லாம் அங்கே கோலோச்சின. 2017-ம் ஆண்டில் இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்த சமூகக் கட்டுப்பாடுகளைதளர்த்தி, பொழுது போக்குத்துறைகளுக்கு இருந்த தடையை மெல்ல மெல்ல அகற்றி வருகிறார். கச்சா எண்ணெய் உலகில் கோலோச்சிய போது வகாபியமும் கோலேச்சியது. கச்சா எண்ணெய்க்கு மாற்றாக தனது பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது வகாபியத்தை தளர்த்தவும் செய்கிறது செளதி.

சர்வாதிகார முகம்

சர்வாதிகார முகம்

அதே நேரம் தனது சர்வாதிகார அரசு பிடியை செளதி விட்டுவிடவில்லை. அரசை எதிர்ப்பவர்களையும் அதிக சீர்திருத்தம் கோருபவர்களையும் இளவரசர் சிறையில் அடைத்துள்ளார். சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

ஓடிடி முன்னணி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் செளதி ஸ்டூடியோ டெல்பாஸ் 11- உடன் எட்டு திரைப்பட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இவை அனைத்தும் மத்திய கிழக்கில் நடக்கும் படங்களாகும். இப்படியாக ஹாலிவுட் படங்களின்நாயகர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் தீவிரவாத முஸ்லீம்களை வேட்டையாடும் போது அந்த வேட்டைக்கு உதவும் ஏற்பாடுகளை செளதி செய்து வருகிறது. மறுபுறம் பாகிஸ்தான் முதல் ஈராக் வரை வகாபிய அடிப்படை வாதத்திற்கும் பண உதவி செய்கிறது.

கம்யூனிசத்திற்கு எதிராக ஆரம்பித்த செளதி அமெரிக்க கூட்டணி இப்போது எண்ணெய், திரைப்படம், பங்குச் சந்தை என்று தொடர்கிறது. மத்திய கிழக்கில் ஜனநாயகம் தழைக்காமல் பார்த்துக் கொள்ளும் ஷேக்குகளின் வேலைகளுக்கு அமெரிக்கா எல்லா விதங்களிலும் உதவுகிறது. மறுபுறம் உலகிற்கு ஜனநாயகத்தை போதிக்கவும் செய்கிறது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் நான்காவது பெரிய நாடு சவுதியாகும். அமெரிக்காவில் படிக்கும் ஒரு மாணவன் என்ன விதமான சூழலில் இருப்பார் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். அமெரிக்காவில் இருந்து அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடாகவும் சவுதி இருக்கிறது. ஒரு புறம் முதலீடு. மறுபுறம் அந்த முதலீடு ஆயுதங்களாக மாறி சவுதி பணம் மீண்டும் சவுதிக்கே ஆயுதங்களாக திரும்புகிறது.

செல்வமும், வறுமையும்

செல்வமும், வறுமையும்

உலகில் இருக்கும் அரச குடும்பங்களில் 1.4 ட்ரில்லியன் டாலர் சொத்துக்களை வைத்திருக்கும் சவுதி அரச குடும்பம்தான் நம்பர் ஒன். மறுபுறம் 20% மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் சவுதியில் பணிபுரிகின்றனர். இதில் தொழிலாளிகளாக இருக்கும் வெளிநாட்டவரின் நிலைமை அப்படி ஒன்றும் மேம்பட்டது இல்லை.

அமெரிக்கா தப்பித் தவறி கால் இடறிக் கீழே சரிந்தால் முதலில் தரையில் விழுவது அரபு ஷேக்குகளாகத் தான் இருப்பார்கள். தாங்கள் கீழே விழுந்தாவது அமெரிக்காவின் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டிய நெருக்கடி சவுதி அரச குடும்பத்திற்கு உள்ளது. எனவே யாரெல்லாம் அமெரிக்காவின் எதிரியோ அவர்களெல்லாம் சவுதியின் எதிரி - அதே போல் யாரெல்லாம் அமெரிக்காவின் நண்பர்களோ, அவர்களெல்லாம் சவுதியின் நண்பர்கள்.

அப்படி என்றால் இசுரேல் அமெரிக்காவின் நண்பன் என்றால் சவுதிக்கும் நண்பனா?

ஆமாம் சவுதிக்கும் இசுரேலுக்கும் உறவு உண்டு. என்ன ஒன்று, வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு கள்ள உறவு. சமீபத்தில் இசுரேலின் உளவு மென்பொருளான பெகாசெஸை வாங்கி அதை சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு எதிராக பல நாடுகள் பயன்படுத்திய விவகாரம் சர்வதேச ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் ஒரு நாடு சவுதி.

இத்தனைக்கும் பெகாசஸ் நிறுவனம் இசுரேல் அரசு அனுமதிக்கும் அரசுகளுக்கு மட்டுமே தனது உளவு மென்பொருளை விற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இசுரேலிடமிருந்து வாங்கிய மென்பொருளைக் கொண்டு உளவு பார்த்து தான் சவுதியை விமரிசித்து வந்த பத்திரிகையாளர் கஸோகி துருக்கியில் கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் சவுதி இளவரசருக்கு நேரடியாக தொடர்பிருக்கும் விசயங்கள் எல்லாம் சர்வதேச ஊடகங்களில் வெளியானது. ஆனாலும் அமெரிக்கா தனது இளைய பங்காளியான சவுதியை விட்டுக் கொடுக்கவில்லை.

சரி, இசுரேலுடன் சவுதி இவ்வாறு அண்டர் த டேபிள் டீலிங் வைத்துக் கொண்டிருப்பதை வகாபிகள் எவ்வாறு சகித்துக் கொண்டு மௌனமாக இருக்கிறார்கள்? வகாபியத்தின் அடிப்படையிலேயே யூத வெறுப்பும், இசுரேல் எதிர்ப்பும் உள்ளதே? இந்த் கேள்விகளுக்கு என்ன பதில்?

எண்ணைப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை விளைவிக்கும் சமூக கொந்தளிப்பை, தனக்கு எதிராக திரும்பாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு கருவியாக, சவுதி அரச குடும்பத்து ஷேக்குகள் இஸ்லாமிய வகாபியத்தை பயன்படுத்தி வருகின்றனர். மதவெறி கண்ணை மறைத்திருப்பதால் சவுதி அரச குடும்பத்தின் இன்னபிற செயல்பாடுகள், அதாவது காஃபிர் அமெரிக்காவுடனும், ஜியோனிஸ்ட் இசுரேலிடமும் கொஞ்சிக் குலாவுவது, மக்களின் கண்களுக்கு தெரியவில்லை.

விசயம் அத்தனை சிக்கல் எல்லாம் இல்லை. நம் ஊரையே எடுத்துக் கொள்ளுங்களேன்.

சர்வாதிகாரமும், அடிப்படைவாதமும்

மாடு புனிதம் என்று சொல்லி அப்பாவி இசுலாமியர்களை அடித்துக் கொன்று கொண்டே மாட்டுக் கறி ஏற்றுமதியில் முன்னணியில் நம் நாடு இருக்க இருக்கவில்லையா? அப்படித் தான் இதுவும். நம் ஊரில் மாடு - அவர்கள் ஊரில் வகாபியம்.

மதம் எதுவாக இருந்தாலும் மத அடிப்படை வாதம் மட்டும் எப்போது ஒன்று போலவே செயலாற்றும்.

சவுதியில் சர்வாதிகாரமும், அடிப்படைவாதமும் பின்னிணிப் பிணைந்திருக்கிறது. இதிலிருந்து சவுதி மக்கள் ஜனநாயகத்தை நோக்கிய பயணிப்பார்களா, அதற்கு சவுதியும் அமெரிக்கா அனுமதிக்குமா, அனுமதிக்காவிட்டாலும் மக்கள் தடைகளை தகர்த்து அரபு வசந்தம் போலப் போராடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

(தொடரும் )

பகுதி 2-ஐ படிக்க

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?