சில தினங்களுக்கு முன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டம் நடந்து முடிந்தது. அதில் சீனாவின் தலைவராக மூன்றாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார் தற்போதைய சீன அதிபர் ஷி ஜின்பிங். மேலும் சீன கன்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மத்திய ராணுவ கமிட்டியின் தலைவராகவும் ஷி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த 'தி கிரேட் ஹால் ஆஃப் தி பீபிள்' அரங்கத்திலிருந்து சீனாவின் முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவ் சர்ச்சைக்குரிய ரீதியில் வெளியேறினார் அல்லது வெளியேற்றப்பட்டார் என பல்வேறு ஊடகங்களிலிருந்து செய்திகள் வெளியாயின.
தற்போது, ஹூ ஜிண்டாவுக்கு என்ன ஆனது என்பது குறித்த சில காணொளிகள் பரவத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே சீனாவின் பெயரைச் சொல்லி அவலை மென்று கொண்டிருந்த வாய்களுக்கு, இந்தப் புதிய காணொளி இன்னும் சில நாட்களுக்கு சீன சர்ச்சையைப் பேசும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் இருந்து வெளியேற இருக்கும் லி சாங்சு (Li Zhanshu), ஹூ ஜிண்டாவ்விடமிருந்து ஒரு கோப்பைக் கட்டைப் பிடுங்குவது போலவும், அவரிடம் ஏதோ பேசுவது போலவும் அக்காணொளியில் தெரிகிறது.
அதன் பிறகு சீனாவின் தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங், ஒரு நபரிடம் எதையோ நீண்ட நேரம் கூறுகிறார். அந்த நபர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ஹூ ஜிண்டாவை வெளியே செல்லலாம் என்று கூறுகிறார் அல்லது வெளியேற வலியுறுத்துகிறார்.
இந்த சம்பவத்துக்கு, ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களைக் கூறுகிறார்கள். ஒரு தரப்பினரோ, இது ஷி ஜின்பிங்கின் அரசியல் அதிகார விளையாட்டு தான். ஹூ ஜிண்டாவ் காலத்திலிருந்தது போல ஒருமித்த கருத்துக்கள் அடிப்படையிலான காலம் எல்லாம் மலையேறிவிட்டது, இது புதிய காலம், ஷி காலம் என்பதை உணர்த்துவதற்காக இப்படிச் செய்திருக்கிறார் என்கிறார்கள்.
மற்றொரு தரப்பினரோ, ஹூ ஜுண்டாவ்வுக்கு உண்மையிலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள்.
சீனாவின் சின்ஹுவா (Xinhua) செய்தி முகமையோ, ஹூ ஜுண்டாவ்வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சர்வதேச சமூகத்தினர் தங்கள் இஷ்டத்துக்கு என்ன நடந்திருக்கலாம் என ஊகித்துக் கொள்ள வழிவகை செய்துவிட்டது என்பதை மட்டும் எவரும் மறுப்பதற்கு இல்லை.
இந்த சம்பவம் வேண்டும் என்றே அரசியல் அரங்கத்தில் அரங்கேற்றப்பட்டதாக இருக்குமோ என பலரும் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர்.
2003 - 2013ஆம் ஆண்டு வரை சீனாவின் அதிபராக இருந்த ஹூ ஜுண்டாவ் காலத்தில் தான், சீன நிலப்பரப்புகள் வெளி உலகுக்கு திறந்துவிடப்பட்டன. அவரைத்தொடர்ந்து அதிபரான ஷி ஜின்பிங் காலத்தில் தொடர்ந்து சீனா தனியாக இருக்கிறது அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிதாக வெளியாகி இருக்கும் காணொளியை ஒரு சிங்கப்பூரைச் சேர்ந்த செய்தி ஊடகம் படம் பிடித்திருக்கிறது. அந்தக் காணொளி கூட, ஹூ ஜிண்டாவ்வுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் தான் வெளியேற்றப்பட்டார் என்கிற வாதத்தை ஆராயவில்லை. ஆனால் ஷி ஜின்பிங்குக்கு முன்னிலையிலேயே ஹூ ஜுண்டாவ் கையாளப்பட்ட விதம் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், ஹூ ஜிண்டாவ்வுக்கு உதவ லி சாங்சு எழுந்த போது, வாங் ஹன்னிங் அவரைப் பிடித்து அமர வைத்தார். இதற்கிடையில் ஹூ ஜிண்டாவ், எந்த வித உணர்வையும் வெளிப்படுத்தாத ஷி ஜின்பிங்கிடம் எதையோ கூறுகிறார், அதனைத் தொடர்ந்து ஹூ வெளியேற்றப்படுகிறார்.
கேமராக்கள் படமெடுத்துக் கொண்டிருக்கும் போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டத்தில் ஷி ஜின்பிங் முன்னிலையில், ஹூ ஜிண்டாவ் கட்சி ஆவணம் ஒன்றைப் படிக்க அனுமதிக்கவில்லை என்று சொல்ல காரணங்கள் இல்லை என்கிறார் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான 'ஸ்டடி டைம்ஸ்' பத்திரிகை ஆசிரியர் டெங் யுவென் (Deng Yuwen).
சொல்லப் போனால் இது வழக்கத்துக்கு மாறான சூழல். ஹூ ஜிண்டாவ் வைத்திருந்த ஆவணத்தில் என்ன இருந்தது அல்லது சம்பவ இடத்தில் என்ன பேசப்பட்டது என்பதெல்லாம் போதுமான ஆதாரங்கள் கிடைக்காத வரை யாராலும் எதையும் விளக்க முடியாது என்கிறார் டெங்.
கூட்டத்திலிருந்து ஹூ ஜிண்டாவ் வெளியேற்றப்பட்டதைப் பார்த்த அதிகாரிகளுக்கு, இனி தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் தங்கள் இஷ்டத்துக்குச் சொல்ல முடியாது அல்லது சொல்லக் கூடாது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும். இது ஷி ஜின்பிங்கின் அதிகாரத்துக்கு எந்தவித ஆபத்தையும் விளைவிக்காது. ஆனால் சீன அரசில் உள்ள அதிகாரிகள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் டெங் யுவென்.
இந்த புதிய காணொளியால் எந்த ஒரு தெளிவான முடிவையும் தரமுடியாமல் அப்படியே தொக்கி நிற்கும் என்கிறார் ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் வென் டி சங் (Wen-ti Sung). சீனா என்றாலே உத்தரவுகள் தான். எனவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் கூட்டம் போன்ற மிக முக்கிய கூட்டத்தில் அதுவும் ஷி ஜின்பிங் காலத்தில் எல்லாமே கட்டுப்பாடு தான் என்கிறார் வென் டி சங்.
ஹூ ஜிண்டாவ்வின் உடல்நலத்தின் மீதான அக்கறை காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார், அந்த சம்பவம் ஒத்திகை பார்க்கப்பட்டது அல்ல எனில், ஹூ ஜிண்டாவ் காலத்தில் கொண்டு வரப்பட்ட கொள்கைகளுக்கு சீனா திரும்பாது என்பதையே அது உணர்த்துகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust