Josephine Baker TWITTER
உலகம்

Josephine Baker: இசை உலகின் மகாராணி உளவாளி ஆன கதை - மினி சீரிஸ் 7

Gautham

தன்னை அங்கீகரித்த நாட்டு மக்களுக்காக ஜோசஃபைன் பேக்கர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உளவுப் பணிகளைக் மேற்கொண்டதைப் பாராட்டி, பிரான்ஸ் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக இருந்த ஜெனரல் சார்லஸ் டி காலே (General Charles de Gaulle) அவருக்கு செவாலியர் ஆஃப் தி லீஜியன் டி ஹானர் (Chevalier of the Légion d'honneur) விருது வழங்கி கெளரவித்தார்.

புகழின் உச்சியைத் தொட்டாகிவிட்டது. தான் விரும்பும் நாடும் தன்னை ஒரு சொத்தாக விருது கொடுத்து கெளரவித்துவிட்டது. பிறகென்ன காசு பணத்தில் திளைத்த படி மிச்ச வாழ்கையை பிடித்தவரோடும், பிள்ளைகளோடும் வாழ்ந்து கழித்திட வேண்டியது தானே... என்று கருதவில்லை ஜோசஃபைன் பேக்கர்.

மாறாக, அமெரிக்காவில் நடைபெற்று வந்த கருப்பின மக்களின் சிவில் உரிமைகள் இயக்கத்துக்கு தன் ஆதரவைக் கொடுத்தார். பிரான்ஸ் நாட்டு பெண், ஒரு முறை நியூ யார்க் நகரத்துக்கு வந்த போது பல தங்கும் விடுதிகள் ஜோசஃபைன் பேக்கருக்கு ஒரு சிறிய அறையைக் கூட கொடுக்க மறுத்தது. காரணம் தோலின் நிறம்.

உலகப் போரிலேயே பங்கெடுத்த அம்மையாருக்கு தன் சொந்த நாடு, தன் தோலின் நிறத்தைப் பார்த்து தரக்குறைவாக நடத்துவது பெரும் வேதனையளித்தது. இது குறித்து பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மத்தியில் நிற வெறி மற்றும் இன பாகுபாடு குறித்து உரக்கப் பேசினார்.

மியாமி கிளப்பில் வெள்ளையர்கள் மற்றும் கருப்பின மக்கள் தனித் தனியே அமர வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ச்சி நடத்தமாட்டேன் என தில்லாக மறுத்தார். அந்த ஒரு சில மணி நேர கச்சேரிக்கு மியாமி கிளப் 10,000 அமெரிக்க டாலர் வரை தரத் தயாராக இருந்தது.

இப்படி நிற வெறி குறித்து தன் மனதில் பட்டதை பளிச்சென பேசி வந்த ஜோசஃபைன் பேக்கருக்கு Ku Klux Klan (கே கே கே) என்கிற வெள்ளையின மக்களே உயர்ந்தவர்கள் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் வலது சாரி இயக்கத்திடமிருந்து பல அச்சுறுத்தல்கள் வந்தன. இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன், என் பணியைத் தொடர்வேன் என பொதுவெளியில் கூறியினார் பேக்கர்.

ஷெர்மென் பில்லிங்ஸ்லீ என்கிற புகழ்பெற்ற பணக்காரரின் 'ஸ்டார்க் கிளப்' உணவு விடுதியில் ஜோசஃபைன் பேக்கர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக அவருக்கு உணவு பரிமாற மறுத்தது. அப்போது அங்கிருந்த கிரேஸ் கெல்லி என்கிற ஹாலிவுட் நடிகை, ஜோசஃபைன் பேக்கருக்கு நடந்து கொண்டிருந்த அநியாயத்தைப் பார்த்து, அவர் கையைப் பிடித்து தன் படை சூழ வெளியேறினார். அப்போது முதல் பேக்கரும், கெல்லியும் நெருங்கிய நண்பர்களாயினர்.

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாகாணத்தைச் சேர்ந்த வில்லி மெக்கீ (Willie McGee) என்கிற கருப்பின இளைஞர், 1945ஆம் ஆண்டு ஒரு வெள்ளை இன பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து பல அதிகாரிகளுக்கும், அதிகார மையங்களுக்கு கடிதங்களை எழுதினார். வில்லி மெக்கீயைக் காப்பாற்ற பேரணிகளில் எல்லாம் கலந்து கொண்டார். எழுதிய கடிதங்களால் கட்டை விரல் தேய்ந்ததே ஒழிய, நீதி கிடைக்கவில்லை. 1951ஆம் ஆண்டு வில்லி மெக்கீ தூக்கிலிடப்பட்டார்.

1963ஆம் ஆண்டு மார்டின் லூதர் கிங் ஜீனியர் உடன் மேடையில் கருப்பின மக்களுக்காக உரையாற்றிய ஒரே பெண்மணி இவர் ஜோசஃபைன் பேக்கர்தான்.

எல்லா பிரபலங்களின் வாழ்கையில் வருவது போல ஜோசஃபைன் பேக்கரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தார். கடன் பிரச்னையால் தன் சொகுசு வீட்டை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, கிரேஸ் கெல்லி மொனாகோ நாட்டின் இளவரசர் ரெய்னரைத் திருமணம் செய்து, இளவரசியாக முடிசூடி இருந்தார். தன் தோழி நிம்மதியாக வாழ ஓர் அரண்மனை போன்ற பெரிய வீட்டையும், கொஞ்சம் நிதி உதவியும் செய்தார் என்கிறது விக்கிபீடியா பக்கங்கள்.

ஏழ்மை, வறுமை, இன வெறி, கலைத்தாகம், சாதனைகள், பணம், புகழ், உளவுப் பணி, பிரான்ஸின் உயரிய விருது, மீண்டும் இன வெறிக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம், கடன், வீடு இழப்பு... என எல்லாம் கடந்து, மீண்டும் 1968ஆம் ஆண்டு தனக்கு வாழ்வளித்த பாரிஸ் நகரத்திலேயே ஒரு கலைஞராக மேடை ஏறினார்.

வயசானாலும், உங்கள் அழகும் ஸ்டைலும் குறையவில்லை என ஜோசஃபைன் பேக்கரைப் பார்த்து அடுத்த தலைமுறை ரசிகர்கள் ஆர்பறித்தனர். 1975 ஏப்ரல் 8ஆம் தேதி பாரிஸ் நகரத்தில் இளரவசர் ரெய்னர், இளவரசி கிரேஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடனமாடி அனைவரையும் அசர வைத்தார்.

ஒரு சில நாட்கள் கழித்து, தன் படுக்கையில், தன் கடைசி நிகழ்ச்சி குறித்த பிரமாதமான விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்த செய்தித் தாள்கள் சூழ கோமாவில் படுத்துக் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஜோசஃபைன் பேக்கர் 1975 ஏப்ரல் 12ஆம் தேதி தன் 68ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

அந்த வீர மங்கைக்கு பிரான்ஸ் நாடு முழு ராணுவ மரியாதை வழங்கி இறுதி அஞ்சலி செய்தது. அமெரிக்காவில் பிறந்த பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நாடு ராணுவ மரியாதை வழங்கியது அதுவே முதல் முறை.

ஜோசஃபைன் பேக்கர் என்கிற இசைக் கலைஞர், மனிதநேயப் போராளி, முன்னாள் உளவுத் துறை ஏஜெண்ட்... இன்று நம்மோடு இல்லை.

"நான் பல அரசர்கள் & அரசிகளின் அரண்மனைகளுக்குள் சென்று வந்திருக்கிறேன், பல நாட்டு அதிபர் மாளிகைகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், ஒரு அமெரிக்க உணவகத்துக்குச் சென்று என்னால் ஒரு காபி வாங்க முடியவில்லை" என வலி தொய்ந்த குரலில் அவர் பேசிய வார்த்தைகள் இப்போதும் நம் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?