மிரன்டரோன்

 

Twitter

உலகம்

Morning News Wrap : சிறுவனை சித்திரவதை செய்த சீன ராணுவம், வட சென்னை - முக்கிய செய்திகள்

Antony Ajay R

சீன ராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட சிறுவன்

அருணாச்சலப் பிரதேசத்தில் வேட்டைக்குச் சென்ற சமயத்தில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திடம் (PLA) பிடிபட்ட மிரம் டாரோன் என்ற 17 வயது சிறுவன் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு தன் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்திய - சீன எல்லையில் வேட்டைக்குச் சென்றிருந்தபோது சீன இராணுவத்திடம் பிடிபட்டார். இந்தச் சிறுவன் சீன இராணுவத்தின் பிடியிலிருந்த சமயத்தில் அவர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக `இந்தியா டுடே' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சிறுவன் மிரம் டாரோன், ``நான் பிடிபட்டபின் என் கைகளைக் கட்டினார்கள். முகத்தையும் ஒரு துணியால் மூடி விட்டார்கள். என்னுடைய கைகளைக் கட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். பின்னர், என்னைச் சீன இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். முதல் நாளில் சித்ரவதை செய்தார்கள். எனக்கு எலெக்ட்ரிக் ஷாக் வைத்தார்கள். இரண்டாம் நாளிலிருந்து எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு போதுமான தண்ணீரும் உணவும் கிடைத்தது" எனக் கூறியிருக்கிறார்.

புதின்

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம் - புதினின் புதிய குற்றச்சாட்டு

ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சனையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். இதில், அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கூட்டாளிகளாக இணைந்துள்ளதாக அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், "உக்ரைனை மேற்கத்திய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்ற கோரிக்கையை நாம் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளிடம் கொடுத்துள்ளோம். ஆனால், அதற்கு அவர்கள் அளித்த பதில் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை. ரஷ்யாவின் அடிப்படை கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவது அப்பட்டமாக தெரிகின்றது. அமெரிக்கா எப்போது உக்ரைனின் பாதுகாப்பில் கவலை கொள்வதாகக் கூறுகிறது. ஆனால், அது உக்ரைனை நம் நாட்டினைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகப் பார்க்கிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்துக் கோரிக்கைகளையும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பரிசீலித்தால் பிரச்சினைக்கு இப்போதே முடிவு வரும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் அதைச் செய்வோம்" என்றார்.

உக்ரைன் விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே கொளுந்துவிட்டு எரியும் சூழலில் ரஷ்ய அதிபரின் இந்தப் பேச்சு கவனம் பெற்றுள்ளது. இந்தப் பேச்சு மேற்கத்திய நாடுகள் அஞ்சுவது போல் உக்ரைன் மீதான படையெடுப்பு அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடாது, இன்னும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்புள்ளது என்பதையே உணர்த்துகிறது.

இந்திய அணி

அண்டர் - 19 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆண்டிகுவா தீவுகளில் நடந்துவருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக இங்கிலாந்து தகுதிபெற்றுள்ளது. மற்றொரு அரையிறுதியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆங்கிரிஷ் 6 ரன்கள், ஹர்னூர் சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

37 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷாயிக் ரஷித் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

விராட் கோலியை போல் சிறப்பான ஷாட்களை விளையாடிய யாஷ் துல், நூறு ரன்கள் விளாசினார். இதன் மூலம் யு-19 உலக கோப்பை போட்டிகளில் நூறு ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரஷித் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது.

முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது.


291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

இந்திய பவுலர்களின் வீச்சுடன் போட்டிப்போட முடியாத ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக லச்லான் ஷா மட்டும் அரை சதம் அடித்தார்.

194 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலிய அணி. 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக அண்டர் 19 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

அமீர் வெளியிட்ட புகைப்படம்

மீண்டும் இணையும் வெற்றி மாறன் - அமீர் கூட்டணி

இயக்குநர் அமீரும், இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள தகவலில், “எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” என வெளியிட்டுள்ளார்.

முன்னதாக இயக்குநர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகள் முடக்கம்

தி.மு.க அமைச்சரவையில் மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இவர், 2001 - 2006 காலகட்டத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4.90 கோடி சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

அது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த ஆண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்பத்தினர் 6 பேருக்கு இந்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகக் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய அமலாக்கத்துறை தற்போது தி.மு.க அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் 160 ஏக்கர் நிலம் உட்பட 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி உத்தரவிட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை விளக்கமளித்திருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?