Cooper  Twitter
உலகம்

டி.பி.கூப்பர் : 50 ஆண்டுகளாக அமெரிக்காவை அலற விடும் நிஜ விக்ரம் - ஒரு பரபர கதை

பாராசூட்டிலிருந்து குதித்த கூப்பர் உயிர் பிழைத்தாரா? உறைபனி நிலவிய அந்த நேரத்தில் அவர் தாக்குப் பிடித்திருப்பாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகும் அவர் யார் என்பது எவருக்கும் தெரியாது. ஊடகங்கள் அவரை டிபி. கூப்பர் என்று பெயர் வைத்து அழைக்கின்றன.

NewsSense Editorial Team

செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் 19 தீவிரவாதிகள் அடங்கிய குழு அமெரிக்க விமானங்களைக் கடத்தி நியூயார்க்கில் உள்ள இரட்டைக் கோபுரத்தைத் தாக்கியது நமக்கு நினைவிருக்கலாம். இந்த தாக்குதல் உலக அரசியலை மட்டுமல்ல விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த பிரச்சினையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

அதன் பிறகு பாதுகாப்பு விதிகள் பல கடுமையாக்கப்பட்டன. இன்று ஒரு விமானத்தைக் கடத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இதற்கு முன்பு வரை உலக வரலாற்றில் பல விமானங்கள் கடத்தப்பட்டிருக்கின்றன. அதில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க விமானத்தைக் கடத்திய நபர் யாரென்றே இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தேங்க்ஸ்கிவ்விங் எனப்படும் நன்றி செலுத்துதல் என்பது அமெரிக்கா, கனடா, கிரெனடா, செயிண்ட் லூசியா மற்றும் லைபீரியா போன்ற நாடுகளில் பல்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் ஒரு தேசிய விடுமுறையாகும். அறுவடை திருநாள் மற்றும் முந்தைய ஆண்டு நிகழ்வுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக இது தொடங்கியது.

Flight (Rep)

1971 ஆம் ஆண்டு நன்றி செலுத்தும் தினத்தன்று, டான் கூப்பர் என்று தன்னை அழைத்துக் கொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் விமான நிலைய கவுண்டரை அணுகினார். அவர் அமெரிக்காவின் போர்ட்லேண்டிலிருந்து சியாட்டிலுக்குச் செல்லும் குறுகிய பயண விமானத்திற்கான ஒரு டிக்கெட்டை வாங்கினார்.

பிறகு விமானம் புறப்பட்டு பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நபர் விமானப் பணிப்பெண்ணிடம் உணவு வகைகளை ஆர்டர் செய்தார். விமானம் வானில் நிதானமாகப் பறக்கத் துவங்கிய போது அவர் விமானப் பணிப்பெண்ணிடம் ஒரு குறிப்பைக் கொடுத்தார். அந்தக் குறிப்பிற்கு அந்தப் பெண் உடனடியாக எதிர்வினையாற்றவில்லை.

இதனால் அதிருப்தியுற்ற நபர், அந்த பெண்ணை மீண்டும் அழைத்துத் தான் கொடுத்த குறிப்பை உடன் பார்ப்பது நல்லது, தன்னிடம் வெடிகுண்டு இருக்கிறது என்று நேரடியாக தெரிவித்தார். அந்த நபர் தன்னை டேன் கூப்பர் என்று அழைத்துக் கொண்டார்.

அவரது சிறிய சூட்கேஸில் வெடிகுண்டு அமைப்புகளுக்குரிய ஒயர்,கம்பிகளின் வலைப்பின்னல் இருந்தது. இதைக் கண்ணுற்ற பணிப்பெண் குறிப்பை விமானியிடம் தெரிவித்தார்.

Parachute (Rep )

டேன் கூப்பர் எனும் மர்ம நபரின் கோரிக்கை என்ன?

2 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் நான்கு பாராசூட் உடைகள். இன்றைக்கு அந்த 2 இலட்சத்தின் மதிப்பு 1.3 பில்லியன் டாலராகும்.

அவரது வெடிகுண்டு மிரட்டலை ஏற்றுக் கொண்ட விமானி விமானத்தை சியாட்டில் நகரத்தில் இறக்கினார். அங்கு அமெரிக்க எஃபிஐ அமைப்பு கூப்பர் கேட்ட பணத்தையும், பாராசூட்டுக்களையும் கொண்டு வந்து கொடுத்தது. பதிலுக்கு அந்த மர்ம நபரான கூப்பர் 36 பயணிகளை விமானத்திலிருந்து விடுவித்தார். மிச்சமிருக்கும் விமானப் பணியாளர்கள் மற்றும் விமானிகளோடு அவர் சியாட்டில் இருந்து பறந்தார். அவரது உத்தரவின் படி விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கிப் பறந்தது. மேலும் விமானத்தைத் தாழ்வாகப் பறக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மெக்சிகோ சிட்டிக்கு போவதற்கு முன்பேயே சியாட்டில் மற்றும் நெவடா பாலைவனத்திற்கு இடையில் எங்கோ அவர் அந்த போயிங் 727 விமானத்தின் பின்புற கதவிலிருந்து பாராசூட் மூலம் குதித்தார். அப்போது வெளியே கடுங்குளிர் நிலவியது

எஃப்பிஐ-யின் தேடுதல் வேட்டை

இதன் பிறகு அமெரிக்காவின் உள் நாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு ஒரு தொலைநோக்கு விசாரணையைத் துவங்கியது. ஆனால் அமெரிக்காவின் வடமேற்கில் உள்ள அடர்ந்த கரடுமுரடான காடுகளில் பல வாரங்கள் தேடிய பிறகும் புலனாய்வாளர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, 800 சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரித்த பிறகும், கடத்தல்காரன் அல்லது அவரது பாராசூட் பற்றிய எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை.

பாராட்டிலிருந்து குதித்த கூப்பர் உயிர் பிழைத்தாரா? உறைபனி நிலவிய அந்த நேரத்தில் அவர் தாக்குப் பிடித்திருப்பாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை.

50 ஆண்டுகளுக்கு பிறகும் அவர் யார் என்பது எவருக்கும் தெரியாது. ஊடகங்கள் அவரை டிபி. கூப்பர் என்று பெயர் வைத்து அழைக்கின்றன. அமெரிக்காவின் வரலாற்றில் தீர்க்கப்படாத விமானக் கடத்தல் என்றால் அது இதுதான்.

எஃப்பிஐ அவரை 40களின் வயதில் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு உடை அணிந்த ஒரு அமைதியான மனிதர் என்று அழைத்தது. மற்றபடி அவரைப் பற்றிய விவரங்கள் ஏதுமில்லை.

history channel

’ஜேம்ஸ்பாண்ட்’

ஹிஸ்டரி தொலைக்காட்சி சேனல், கூப்பர் எனும் இந்த மர்ம மனிதரின் விமானக்கடத்தல் குறித்து ஆய்வு செய்து ஆவணப்படம் வெளியிட்டது. அந்த படத்தின் ஆய்வாளரான எரிக் உலிஸ் "கூப்பர் தன்னை ஜேம்ஸ்பாண்ட் போல வெளிப்படுத்திக் கொண்ட நபர் என்கிறார்.

எரிக் உலிஸ் ஒரு வரலாற்றாசிரியர். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இந்த வழக்கைப் பற்றி விசாரித்து வருகிறார். மேலும் மர்மமான விமானக் கடத்தல் குறித்த ஆர்வலர்களுக்காக கூப்பரின் பேரில் ஒரு மாநாட்டையே நடத்தியிருக்கிறார்.

2000 ஆம் ஆண்டுகளில் எஃப்பிஐயின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மேரி ஜீன் பணியாற்றினார். அவர் இந்த திறமையான விமானக் கடத்தலுக்குப் பிறகு கூப்பர் ஒரு வகையான நாட்டுப்புற ஹீரோ மாதிரியாக கொண்டாடப்படுகிறார் என்கிறார்.

தற்போதும் இந்த விமானக் கடத்தல் குறித்த விசாரணைகள் ஒரு தனி வழிபாட்டு முறை போல சுவாரசியமளிக்கும் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. காரணம் கடத்தியவர் யார் என்பது இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் மேரி.

இந்நிலையில் தான்தான் கூப்பர் என டஜன் கணக்கிலான மக்கள் கூறிக் கொண்டனர். சிலர் தங்கள் மரணப் படுக்கையில் அவ்வாறு தெரிவித்தனர். அதையும் எஃப்பிஐ புலனாய்வாவார்கள் விசாரித்தார்கள்.

பார்பரா டேட்டன் என்பவர் ஒரு அமெச்சூர் பைலட் மற்றும் திருநங்கை ஆவார். அவர் தனது நண்பர்களிடம் தான்தான் கூப்பர் என வாக்கு மூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. லின் டாய்ல் கூப்பரின் மருமகள் கடத்தல் நடந்த ஆண்டில் வந்த நன்றி செலுத்தும் தினத்தின் இரவு உணவு ஒன்று கூடலில் கூப்பர் தான் அடிபட்ட இரத்தக் காயங்களைக் காட்டிய பிறகு ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். இவர்களையெல்லாம் நேர்காணல் செய்த மேரி இரண்டாம் உலகப் போரின் வீரரான ஷேரிடன் பேட்டர்சனையும் பேட்டி கண்டார்.

ஆனால் இவர்கள்தான் கூப்பர் என்று நிறுவ எஃப்பிஐயால் முடியவில்லை. இறுதியாக இந்த வழக்கை 2016 ஆம் ஆண்டு எஃப்பிஐ மூடிவிட்டது. மற்ற விசாரணைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக இந்த வழக்கை மூடுவதாகவும் அந்த புலனாய்வு முகமை தெரிவித்தது.

சில முக்கியமான பிழைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் எஃப்பிஐ நன்கு புலனாய்வு செய்ததாக ஆய்வாளர் உலிஸ் கூறுகிறார். மேலும் அவர் கூறும் போது கூப்பர் காட்டிய விமானப்பாதையின் சரியான வழித்தடம் எஃப்பிஐக்கு கிடைக்கவில்லை என்கிறார். எஃப்பிஐ தேடல் பகுதியிலிருந்து பலமைல் தொலைவில் கூப்பர் தரை இறங்கியிருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள மர்மத்தின் ஒளி தொடர்ந்து அமெரிக்கர்களை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து பேச வைக்கிறது.

D.P. Cooper

இன்றும் டி.பி. கூப்பர் பெயர் மற்றும் படம் பொறித்த சாதனங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ரசிகர்கள் காபி கோப்பைகள், டி-ஷர்ட்கள், பம்பர் ஸ்டிக்கர்கள் மற்றும் சாக்ஸ்கள் வரை பல பொருட்களை தேர்வு செய்யலாம். டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு இரவு நடன விடுதிக்கு கூப்பரின் பெயரை வைத்திருக்கிறார்கள்.

இப்படி 50 ஆண்டுகளாக ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே தண்ணி காட்டியிருக்கிறார் இந்த கூப்பர். தனி ஆளாக ஒரு விமானத்தைக் கடத்தி பணையத் தொகை பெற்றுப் பறக்கும் விமானத்திலிருந்து குதித்து யாருக்கும் தெரியாமல் மறைந்து போன கூப்பரை ஒரு ஹீரோவாக அமெரிக்க மக்கள் கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?