அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பூமிக்கு வெகுதொலைவில் உள்ள ஒரு பெரும் வால்நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளது.
அதன் பனிக்கரு அளவு சுமார் 80 மைல்கள் நீளமுடையது. இதுவரை கண்டறிந்த வால்நட்சத்திரங்களின் இதைப்பகுதியை விட இது 50 மடங்கு பெரியது. இதனுடைய நிறை 500 டிரில்லியன் எடை கொண்டது. சூரியனுக்கு அருகில் இருக்கும் வழமையான வால்நட்சத்திரங்களை விட இது ஆயிரக்கணக்கான மடங்கு பிரம்மாண்டமானது.
இதற்கு C/2014 UN271 (Bernardinelli-Bernstein) பெர்னார்டினெல்லி - பெர்ன்ஸ்டீன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது சூரிய மண்டலத்தின் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி 22,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது.
இவ்வளவு தொலைவிலிருந்தாலும் நாம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் ஒரு பில்லியன் மைல்கள் தூரத்திற்கு மேல் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சனி கிரகத்திற்கு அருகில் வருவதற்கே 2031 ஆண்டு வரை ஆகலாம். மனிதனால் அதி வேகத்தில் செலுத்தப்பட்ட ஹீலியோஸ் 2 எனும் செயற்கைக் கோள் 1,57,078 மைல் வேகத்தில் சூரியக் குடும்பத்தின் விளிம்பை நோக்கிப் பயணிக்கிறது. அதற்கே தோராயமாக 6,759 வருடங்கள் ஆகும். எனில் சூரியக் குடும்பத்தின் விளிம்பு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்த கொள்ளலாம்.
இந்த பெர்ன்ஸ்டின் வால்நட்சத்திரம் 2010 ஆம் அண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது சூரியனிடமிருந்து 3 பில்லியன் மைல்கள் தூரத்தில் அல்லது நெப்டியூன் கோள் இருக்கும் தூரத்திலிருந்தது.
அப்போதிலிருந்து, ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியிலும் பூமியிலும் இருக்கும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி அதைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள முயன்றனர்.
அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, விஞ்ஞானிகள் நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வால் நட்சத்திரத்தின் அளவைக் கணித்து, அதன் பிரம்மாண்டத்தைக் கண்டுபிடித்தனர்.
ஹப்பிள் தொலைநோக்கி 1990 ஆம் ஆண்டு விண்வெளியில் டிஸ்கவரி விண்கலம் மூலம் ஏவப்பட்டது. தற்போது அது பூமியிலிருந்து 547 கிமீ தொலைவில் விண்வெளியில் சுற்றி வருகிறது. அங்கிருந்து அதிலிருக்கும் தொலைநோக்கிகள் விண்வெளியை ஆராய்ந்து வருகிறது.
வால்நட்சத்திரம் சூரியனிலிருந்து பெரும் தொலைவிலிருந்தாலும் அது சுறுசுறுப்பாக இயங்குவதைக் கருத்தில் கொண்டு அந்த நட்சத்திரம் அளவில் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த ஐந்து புகைப்படங்களிலிருந்து புதிய தரவுகள் வந்திருக்கிறது.
இருப்பினும் இந்தப் படங்களைப் பார்த்து வால்நட்சத்திரத்தின் அளவை அளவிடுவது எளிதானது அல்ல. விஞ்ஞானிகள் வால்நட்த்திரத்தின் நடுவில் உள்ள திடமான கருவை அதைச் சுற்றியிருக்கும் பெரிய தூசி நிறைந்த படலத்திலிருந்து வேறுபடுத்த வேண்டும். அந்த வித்தியாசத்தை சொல்லுமளவு படங்கள் தெளிவாக இல்லாத அளவுக்கு அந்த எரி நட்சத்திரம் மிகுந்த தூரத்தில் உள்ளது.
மாறாக, விஞ்ஞானிகள் வால் நட்சத்திரத்தின் மையத்தில் உள்ள கருவைக் குறிக்கும் பிரகாசமான ஒளிப் புள்ளியைப் பார்த்தார்கள். பின்னர் அதைச்சுற்றியுள்ள கோமா எனப்படும் தூசிப் படலத்தின் மாதிரியைக் கணினியில் உருவாக்கி அதற்கேற்ப புகைப்படங்களைத் திருத்தினர். அதன் பிறகு கோமாவை கழித்து விட்டு அதன் மையக் கருவை அளவிடுகின்றனர்.
தென்னமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள அல்மா ALMA தொலைநோக்கியிலிருந்து எடுக்கப்பட்ட வானொலி அலை அவதானிப்புகளும் வால் நட்சத்திரத்தைப் பற்றிய கூடுதல் தரவுகளை வெளிப்படுத்துகிறது. ஹப்பிள் தொலைநோக்கியின் படங்களிலிருந்து விஞ்ஞானிகள் உருவாக்கிய அளவுகளோடு இது ஒத்துப் போகிறது. ஆனால் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பு முன்பு நினைத்ததை விட இருண்டதாக இருப்பதாகத் தரவு தெரிவிக்கிறது. ஒரு ஆராய்ச்சியாளர் இதைப் பிரம்மாண்டமானது மற்றும் நிலக்கரியை விடக் கருப்பானது என்று விவரிக்கிறார்.
இந்த வால் நட்சத்திரம் பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானது. மேலும் நமது சூரிய குடும்பத்தின் ஆரம்ப நாட்களோடு தொடர்புடையது. இது நமது சூரியக் குடும்பத்தின் விளிம்பிற்கு அருகில் உள்ள ஊர்ட் மேகத்திரட்சியிலிருந்து வந்தது. மேலும் ஒரு மில்லியன் ஆண்டுகளாக நமது சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஊர்ட்மேகத்திரட்சி என்பது (a cloud of predominantly icy planetesimals proposed to surround the Sun at distances ranging from 2,000 to 200,000 AU or 0.03 to 3.2 light-years) சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள எரிநட்சத்திரங்களின் தூசி மண்டலமாகும்.
ஊர்ட் மேகத்திரட்சியில் உருவான வால் நட்சத்திரங்கள் நமது சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் சூரிய குடும்பம் தோன்றிய ஆரம்ப நாட்களில் தொடங்கியதாக கருதப்படுகிறது. அப்போது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் தங்கள் சுற்றுப்பாதைகளை அமைத்துக் கொண்டிருந்த குழப்பமான நாட்களில் இந்த வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டலத்தின் விளிம்புகளுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டன.
விண்வெளித்துறையில் சாதனையாகக் கருதப்படும் இந்த வால் நட்சத்திரத்தின் கண்டுபிடிப்பு சூரியக் குடும்பத்திலிருந்து 5000 மடங்கு தொலைவில் இருக்கும் ஊர்ட் தூசுப்படல திரட்சியைப் புரிந்து கொள்வதற்கும் வகைப்படுத்துவதற்கும் உதவும். ஆனால் அதை நேரடியாகப் பார்ப்பது மிகவும் கடினம். இன்னும் இது கோட்பாட்டளவில்தான் உள்ளது.
பெர்னார்டினெல்லி - பெர்ன்ஸ்டீன் என்ற இந்த புதிய வால்நட்சத்திரத்தைப் படிப்பதன் மூலம் தொலைதூரத்தில் உள்ள ஊர்ட் தூசுத்திரட்சியின் அளவு எவ்வளவு பெரியது, எவ்வளவு நீளமானது என்பதைக் கண்டறியலாம்.
தொலைதூரத்தில் இருக்கும் இந்த வால்நட்சத்திரத்தினால் தற்போது உடனடியாக பூமிக்கு ஆபத்தில்லை என்றாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.